மீண்டும் களிப்போம்

காற்று வீசும்
கங்குல் போதில்...
மேற்கு வானில்
பொழுது சாய்ந்த பின்
பிறைநிலா வளர்வதும்
முழுநிலா தேய்வதும்
கண்டு மகிழ்ந்து
கதைத்திருந்த நாட்கள்...

கிணற்றுக் கட்டிலும்
கோயிற் திண்ணையிலும்
தேர்முட்டிப் படிகளிலும்
நிலவொளியிலும் கும்மிருட்டிலும்
கூடியிருந்த நாட்கள்...

தொலைவில்
பனி கொட்டும் பூமியில்
குச்சறையில்
தனியனாய் அன்றி இணையாய்
உடல் போர்த்தி வாழும்
நண்பா,
நினைவில் நிழலாடுகிறதா
அந்த நாட்களின் களிப்புக்கள்!

பத்துப் பதினைந் தென்று
கூடியிருந்தோம்
குந்தியிருந்தோம்
படுத்திருந்தோம்
சாய்ந்திருந்தோம்...
பல்விடயம் அலசித்
தர்க்கப்பட்டோம்
வயது வேறுபாடின்றி
வளர்ந்திருந்தது நம் நட்பு.
அயல் ஏசும் அளவிற்கு
உச்சக் குரலில் உரையாடினோம்.
ஒன்றாய்ச் சேர்ந்து பாடினோம்.
அந்த-
இனிமை நிறைந்த நாட்கள்
இன்னமும் நினைவில் உள்ளதா?

ஜேர்மன்....  டென்மார்க்...
கனடா... சுவீஸ்...
சவூதி...  ஓமான்... குவைத்...
என ஒவ்வொருவராய் அகல
மிஞ்சிய நாம்
இருவரோ... மூவரோ...

ஆயினும் கூடுகிறோம்
பாடுதல் இலையெனிலும்
பேசுகிறோம்.
தர்க்கப்படல் இலையெனிலும்
விவாதிக்கின்றோம்.
நிலவின் ஒளியையும்
காற்றின் வருடலையும்
அனுபவித்தே வாழ்கிறோம்
மண்ணின் மணத்தை நுகருகிறோம்.

ஆயினும் உன் நிலை...
குச்சறையில்
கூடிக் களிக்கப்
பள்ளிக்கால நண்பரின்றி
பயனற்ற நாட்களைக் கடத்தி
பயனுக்காய் உழைக்கும் நண்ப,
அந்த நாட்களின் மகிழ்வுகள்
வேண்டி மனது இரந்தால்
வா-
மீண்டும் களிப்போம்.

1991

எனது அப்படியே இரு கவிதைத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது