வியாழன், 9 ஏப்ரல், 2015

ஆற்றுவதோ பிதற்றுவதோ

அறம் என்பதுவோ திறம் என்பதுவோ
கற்றது அறியா தென்னவர் வீழ்ந்திட
சுட்டு வீழ்த்திய காவலர் கொடுமை
பாமரர் எனில் தாமவர் பெரிதெனக்
கொள்கை கொண்டனரோ கொள்ளை என்றனரோ
கொள்ளை அடிப்பவர் சுளையாய் சுவைத்திட..
கொதிக்கும் வயிற்றுப் பசியை ஆற்ற
மரம் வெட்டிப் பிளைப்பவர்க்கோ இக்கதி
ஆற்றுவதோ மனம் பிதற்றுவதுவதே எம்நிலையோ?

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

படிப்பு பண்பட

படிப்பு பட்டம் எனப் பெற்றதன் பேறு
பதவி பவுசு என்பதாய் இருக்கின்ற தால்
படித்தவர் பேறு பெற்றிட வில்லை என
படித்திட மறுத்திடும் இளையோர் மனநிலை...
படிப்பு பண்பட எனப் பகுத்து உணர்ந்திலரோ?பெயர் மாற்றம்

புதிய காலைக்கதிர் என்ற வலைப்பூவின் பெயரை வெளி என மாற்றியுள்ளேன்.
புதிய காலைக்கதிர் சஞ்சிகைவடிவில் வெளியாகிக்கொண்டிருக்கின்றது. அது காலையடி மறுமலர்ச்சி மன்றத்தினுடைய மாணவர் மன்ற வெளியீடு. அதற்கு பூரண ஆதரவளித்து இந்த பெயர் மாற்றம் சாத்தியமானது

ஞாயிறு, 29 மார்ச், 2015

சிறு முயல்வில்...


எழுக எழுக என
என் முன் மொழிதல்கள்
தொழுது வாழும் பொழுதுகள்
கரைக எனக் கரைகின்றன காகங்கள்
சற்றும் சளைக்காமல் தொடர்க என
சாற்றும் குரல்கள்
பற்றுக்கொண்டு பண்ணும்
காரியங்களை விட்டுக்
கணக்கெடு மனிதர் மேன்மையென
கணப்பொழுதில் கண்முன் காட்சிகள்
விரியும் உலகில்தெரியும் பிரிவினைகள்
எரியும் பிரச்சனையாய் எங்கும் சூழலியல்
எவர் நலனில் எவர் அக்கறை
வியாபாரத் தனமாய் வில்லங்கம் பண்ண
அபிவிருத்தி கண்டு குளிர்கின்ற மனசு
அதனொடு விசமென கலந்த கலவைகள்
எதனொடு நானும் ஒன்றிக்க
உதவிடும் கரங்களுக்குள்
உயிர் பறிக்கும் நஞ்சென்றால்
பயிர் பச்சையெல்லாம் பாழ் படுமென்றால்
பாலை வனமாகும் எம் மண்ணென்றால்
குலை நடுக்கும் நிலையாச்சு
பின்னும் அமைதி வாழ்வு என
எண்ணி மகிழ்வதுவோ இக்கணங்கள்...
தெளிக எனச் சொல்லும் குரல்கள்
தேறிர் என கேட்கும் ஒலிகள்
ஆறிரோ ஆற்றிரோ என
இயம்பும் நட்பு உள்ளங்கள்
தெளிவனோ தேறுவேனோ
உயிர் பிழைப்பேனோ நாளை
உலகத்து குழந்தைகள் உயிர்த்திட
ஒரு சிறு முயல்வில்
நடை பயிலேனோ?
அழ.பகீரதன்

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

காதலர் பாடல்

காதலர் பாடல்


ஈழத்து தேவன் பூதனார்


காசு காசு காசு
காசு காசு காசு

காசு வருமுன்னே நான்
மனிசனானேன்
காசு வந்த பின்னேநான்
மிருகமானேன்

காசு வருமுன்னே நான்
காதலிச்சேன்
காசு வந்த பின்பேநான்
பேதலிச்சேன்

காசு வருமுன்னே நான்
சிரிச்சுப் பேசினேன்
காசு வந்த பின்பே நான்
இறுக்கிப் பேசுகிறேன்

காசுவருமுன்னே நான்
ஒத்துழைச்சேன்
காசு வந்த பின்பே நான்
ஒதுங்கிக் கொள்கிறேன்

ஒதுங்கிக் கொள்கிறேன் என்று
எதுக்குச் சொல்கிறேன்
பதுங்கிப் பாயும் மிருகமாகி
மாறிப் போனேனே!

நன்றி - 'தாயகம்' ஏப்பிரல் ஜூன் 2014

வியாழன், 1 ஜனவரி, 2015

ஆண்டினை வரவேற்போம்

இரண்டாயிரத்து பதினைந்து
இதமாய் இருந்திடும்
இதயம் உள யார்க்கும்
இனியொரு துயர் வரினும்
இன்பம் தொடரும் எனும் நம்பிக்கையில்
இடர்ப்படா தேற்போம் எனும்
இயலுமையுடன் வரவேற்போம்

யார்க்கும் பொதுவாய் ஆயிற்று
யாதொரு ஐயம் இன்றி ஆண்டினை அறிகுவோம்
யாவருடனும் ஐக்கியப்பட மதம் தடையிலை என்போம்
யாவருடனும் கலந்திட மொழி இடையூறு இலை என்போம்
யாவருடனும் ஒன்றுபட சாதி ஒரு சாட்டிலை என்போம்
யாவரும் தொழிலாள வர்க்கம் எனில் ஒன்றுபடுவோம்
யாவரும் இணைந்தே முதலாளியம் எதிர் நின்று உடன்படுவோம்
யாவரும் இணைந்து தடைகளைத் தகர்ப்போம்

ஆச்சுபண்பாடு போயாச்சு
பகுத்துண்டு வாழ்வதும் பேச்சாச்சு
கண்டு பழகும் பழக்கம் பாழாச்சு
விரலால் நோண்டித் தேடி ஒளிர் திரையில்
முகம் பார்த்துக் கதைக்கும் காலமாச்சு
வயசோ ஐம்பதாச்சு
வருடங்கள் போயாச்சு
பெத்த பிள்ளைகளோ நாம்
பட்ட துன்பம் துயரம் அறியா நிலையாச்சு
போர்ச் சுவடற்ற அபிவிருத்தியில் நகராச்சு
வீட்டுத் திட்டத்தில் படை வீரர் நட்பாச்சு
ஊர்ப் பேச்சுப் பேசி நாளாச்சு
கூடிப் பேசிடத் தடையாய் தொலைக்காட்சி ஆச்சு
கூடிடில் தொடர்நாடகம் பேச்சாச்சு
கற்பு விலையாச்சு
விபச்சாரம் செய்வதுவே விமோசனம் என
நிற்கச் சுற்றுலா வழியாச்சு
மதுசாரம் சிறப்பாச்சு
கஞ்சா அரங்கேறியாச்சு
காசு ஆற்றல் கதையாச்சு
பதவிகள் வந்தாச்சு
பட்டங்கள் பெற வழிகள்  பலவாச்சு
விருதுகள் பெற விழாக்கள் பெருகலாச்சு
மண்டபங்கள் மிளிரலாச்சு
மனங்கள் விரிசலாச்சு
தண்டவாளங்கள் தொடரலாச்சு
விலைவாசி விண் தொடலாச்சு
தொடர் மாடிகளில் பொருட்கள் குவியலாச்சு
கடன்கள் பெருகலாச்சு
நிலத்தடி நீரில் ஓயில் கலந்தாச்சு
போத்தில் நீர் பொக்கிசமாச்சு
வரட்சி நிவாரணம் வந்தாச்சு
வெள்ளம் பெருக்கெடுக்க
மண் சரிவில் மனிதர்  புதையலாச்சு
நிலமற்றோர் லயன்கள் சிதையலாச்சு
மரம் விற்றோர் பணம் சேர மகிழலாச்சு
தேர்தல் வந்தாச்சு
தேரா மனிதர் ஓட்டுப்போட
கட்சிகள் மாறலாச்சு
காட்சிகள் விரியலாச்சு
பட்சிகள் கூடுவிட்டுப் பாய
கட்சிகள் தாண்டக்
கொள்கைகள் ஏனென்றாச்சு
கோடிகள் புரளலாச்சு
கொடிகள் ஏறலாச்சு
படிகள் ஏறப் பவுசு வருமெனில்
பயணம் வந்த பாதைகள் மறக்கலாச்சு
எங்கோ தொடங்கி
இங்கே முடிந்த கதையாச்சு
ஆச்சு ஆச்சு ஆச்சு எனில்
நஞ்சுண்ட மேனி
நீலமாய் மாற
நீள நாம் நிற்பதுவோ
ஆள அகல பார்க்கோமோ
தோழமையில் கை கோர்த்த மகிழ்வில்
கனாக் கண்ட
பொதுமை மறப்பமோ?


அழ.பகீரதன்

இக்கவிதை தாயகம் ஒக்ரோபர்-டிசம்பர் இதழில் பிரசுரமானது