சனி, 30 ஏப்ரல், 2016

மண்ணினில் மக்கள் அதிகாரம்!

எட்டு மணிநேர வேலையினை இயலுமாக்கிய
சட்ட முறையை கொண்டுவந்த தொழிலாளர் 
போராட்ட பாதையது தொடரல் வேண்டும்
தேரோட்டி வாழ்ந்த காலம் போச்சுதென
நேர்நின்று ஆட்சி அதிகார வர்க்கம் ஒழித்து
பாராட்டும் வண்ணம் பாட்டாளி வர்க்கம் எழுந்திட
பாரெங்குப் புதிய ஜனநாயக புரட்சி வழியில்
மலர்ந்திடும் மக்கள் அதிகாரம் மண்ணினில் என்போம்!
வெள்ளி, 29 ஏப்ரல், 2016

வசதிக்குள் வாய்ப்புகள்?

வர்க்க வேறுபாட்டில் தர்க்கம் எழுந்திட
வர்க்க ஒன்றுபடலில் போராட்டம் எழுந்திட
வெற்றி பெற்றுடுவர் என்பதனால் அன்று
வேற்றுமையை மொழியால் உருவாக்கி நின்று
முதலாளியம் வளரும் மார்க்கங்கள் கண்டனர்
இன்றோ..
இனவேறு பாட்டில் தேசியம் வென்றிடா தழித்திட
இரட்டைத் தேசியமாய் தமிழர் பிழவுபட
முதலாளியம், நவதாராளம் முதன்மை பெற்றிட
இதனால் இது நிகழுமென எண்ணிட முடியா
வசதிக்குள் வாய்ப்புகள் வந்ததனால் பேச்சாச்சோ?

சொல்லிட முயன்றிடில்!

வேதத்தில் தொழில் நுட்பம் இருப்பதாய் பிதற்றுவதும்
இதிகாசத்தில் விமானத்தில் பறந்ததாய் பிரமிப்பதும்
வாதத்திற்கு கற்பனையில் கண்டதை மொழிவதும்
வாக்கினில் மொழிவதை வியக்கின்ற வகைகளும்
தேக்கத்தை ஏற்படுத்த திட்டம் எனத்தான் எனக்கது
தோன்றுவதை சொல்லிட முயன்றிடில் எனக்கென்ன
சான்றுதருவரோ யாரும் சிந்தனைச் செம்மலென!

புதன், 27 ஏப்ரல், 2016

இன்புறு நிலையில்...

இந்நிலம் மழலைகள் மகிழ்வில் மலரும்
இன்புறு நிலையினில் குழந்தைகள் வளர்வர்...
இது நிஜமெனில் எமக்கும் இயலுமா?
இனி நமக்கிது புரிந்திடக் கூடுமா?
இதயம் தருவோம் குழந்தைகளுக்கு என
இயம்பிடும் காலமும் நமக்கு வந்திடுமா?
இருக்கும் வசதிகளை வாய்ப்பாய் கொள்ளுவமா?
இனி நமக்கென நாமே அரசெனப் புரிவோமா?

திங்கள், 25 ஏப்ரல், 2016

உன் அகத்தைத் தேடி!

என்ன நினைத்து எனை படைத்தனை?
என்ன எண்ணி எனை விதைத்தனை?
முளைவிட்ட எனது வளர்ச்சியில்
மூர்க்கத்தை ஏன் தந்தனை?
ஆர்க்கும் அடங்கா இயல்பினை
ஏனோ தந்தனை?
நேர் நின்று எதிர்க்கும் உணர்வை
எனக்குள்  ஏனோ விதைத்தனை?
சொன்ன மொழியுள் சிந்தை விட்டே
இன்னும் இன்னும் ஏனோ
எனை எழுதத் தூண்டுறாய்!
எனை ஈன்ற என் தாயே?
எனக்குள் நீயே
எனிலும்,
எங்கு எங்கு நீயென
எல்லார் முகங்களிலும்
உன் அகத்தைத் தேடி
நகர்கின்றேன்...
நாட்கள் நகர்ந்திட!

தெரிவுகள் வருமென!

வானம் இரவில் கொட்டித் தீர்க்கின்றது
வளம் சுரக்கும் பூமி மகிழ்கின்றது
வள்ளண்மை கொண்டோர் பூரிக்கின்றனர்
கொள்கின்றேன் நானும் நல்மனதினோடு
தெள்ளத் தெளிவாய் தெரிய வானம்
ஒளிவெள்ளம் வெளியெங்கும் நிறைகின்றது
குளிர்கின்றது என்பாதம் நடைபயில்கையில்
தெளிகிறது மனம் தெரிவுகள் வருமெனும் மகிழ்வினில்!சென்ற வருடத்தில் இந்த நாளில் முகநூலில்
இன்றோ கோடை வெயிலின் கதகதப்பில்
நன்றே பெயுமா சித்திரைச் சிறுமாரி!

விருத்தி பெற்றிடலாம்!

ஒருவரை ஒருவர் சந்தித்திடும் நேரங்கள்
விருப்பத்தின் தருணங்கள்  ஒட்டுற வாகிடுதலில்...
ஒருபோதும் அடுத்தவர் அந்தரங்கம் தேடாதீர்
விருப்போடு குசலம் விசாரித்து மகிழ்வீர்
விருந்துண்டு அருமந்த காலத்தை அனுபவிப்பீர்
கருத்து ஒருமிக்க ஒற்றுமை உருவாகிடும்
விருத்தி பெற்றிடலாம் நெருங்கி வந்திடில்!

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

சுரண்டலின் உச்சமோ?

வாடிக்கையாளர் நலனெனச் சொல்வதும்
வாடிக்கையாளர் திருப்தியென மொழிவதும்
வாடிக்கையாளரே எசமானர் என நவில்வதும்
ஏனென்று ஆராயுங்கால் தேர்வரே யாரும்
முதலாளிய முதன்மையே அர்த்தம் எனவே!
திருப்தியே சுரண்டலின் உச்சமோ, அறிவரோ?

சனி, 23 ஏப்ரல், 2016

பூரணம் அடைந்திட

புத்தக தினமா இன்று மாந்தர்
புத்தியைத் தீட்டும் தினமா ?
புதியதை அறிந்திட நாமும்
புத்தகம் திறந்தே பார்ப்பம்
புரிந்திடத் தெளிந்தே நிர்ப்போம்
புரிய வைத்திட முயல்வோம்,
பூரணம் அடைந்திட அஃதே வழியென!

மாற்றம் பெற்றிட

ஏமாத்து சூதுவாது வஞ்சகம் எல்லாம்
ஏழையர்க்கு எதிரானது ஆகும்- நாளை
ஏழையர்க்கு ஆனநல் பாதையில் பயணம்
கோழையர் இல்லை என்றிடும் வண்ணம்
வாழை மாவிலை தோறணம் எங்கும்
வாழ்வில் மகிழ்ந்து கொண்டாடி நின்றிட
ஏற்றம் வந்திட வேண்டும் எல்லோர்க்கும்!
மாற்றம் மண்ணுலகில் பெற்றிட எழுந்திடுக!!

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

பூக்கும் புதுயுகம்

மக்கள் அதிகாரம் வெல்லும் மார்க்கம்
செக்கச் சிவந்த மார்க்சிய பாதையே
தூக்கிய அரிவாள் சுத்தியல் கொண்டு
ஆக்கிய அரசின் செங்கொடித் தலைவன்
பாக்கும் இடமெலாம் லெனின் படங்கள்...
நோக்கு கொண்டே கூடிடும் தோழர்நாம்
பூக்கும் புதுயுகம் என எழுந்தோம் வாரீர்!

வியாழன், 21 ஏப்ரல், 2016

பாரதிதாசன் பாட்டெடுத்து...

பாவேந்தன் பாரதிதாசன் நினைவு தினமதில்
பாருலகில் தமிழ் முழக்கம் செய்குவோம்
நாவெல்லம் நவிலும் தமிழ் எங்கும் என்போம்
நாடறிந்த கவிஞன் புகழ் இணையத்தில் பரப்புவோம்
பூவுலகில் சமத்துவம் சாத்தியம் என்போம்
பூரித்த வாழ்வு சித்திக்க வழி சமைப்போம்
புதியதோர் உலகம் செய்தே சிறப்போம்
பாவேந்தன் பாரதிதாசன் தமிழ் பாடல் நயக்கவே!

புதன், 20 ஏப்ரல், 2016

பெண்ணே உயர்வு அறிக!

பெண்ணிற் பெருந் தக்க யாதுள
பெண்ணைப் பேணுவது பெருமை என உணர்க
பெண்ணை உயர் நிலையில் வைத்திடுக
பெண் நிகர் ஆணுக்கு என உணர்க
பெண்ணொடு பேசிடில் பேறு என எண்ணுக
பெண் அறிவின் வெளிச்சம் என அறிக
பெண்ணே சக்தியென மொழிக
பெண்ணே ஆற்றல் என விளம்பிடுக
பெண்ணால் உயர்ந்தோம் என இயம்பிடுக

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

வேண்டும் நினைவுகள்

வேண்டாம் என ஒதுக்கிலும்
மீண்டும் மீண்டும்
மனக்கதவை தட்டும்
நினைவுகள்.,
கொண்டாடிக் களிக்க 
முடியுமா இன்று?
நாளைய கருமத்தை
கருதி
நித்திரை வேண்டியே
என் கண்கள் தவமிருப்பினும்
நினைவுகள் 
தாண்டி என் மனமதில்
வேண்டுதல் செய்வது ஏன்?
கால ஓட்டத்தில்
கரைந்துபோன இளைமை போல்
இழந்து போவதில்லையே நினைவுகள்,
இன்று
நிலைப்பன 
இன்பம் இலையெனில்!

திங்கள், 18 ஏப்ரல், 2016

பாவலன் ஆகிடுவேனா?

பாரதி வழியில் பாவலன் ஆகிடுவேனோ?
பாலகர் முதல் பாட்டன் வரையில்
பாடிடப் பாரதி பாட்டெ ழுதினான்,
பாவினில் இலயித்த நானும் எழுதினேன்..
பாவாய் அன்றிக் கவியாய் ஆயிற்றே!
பாட்டு எனக்கது சித்திக்க வில்லையோ?
பாரினில் முயன்றிடில் பாவலன் ஆகிடுவேனா?

பாதையும் திறக்குமோ பயணம் சித்திக்க!

மனக்கதவு திறக்காரோ

சிலைகள் செதுக்கியே மலைகளில் வைப்பர்
சீரிய வகையில் கோயில்கள் புதுக்குவர்
அலைகள் இரசிக்க மாளிகை செய்வர்
ஆலயம் அமைத்து ஆனந்தம் அடைவர்
கலைகள் வளர்த்திட கருணை காட்டுவர்
கலாசாரம் காத்திட மண்டபம் எழுப்புவர்..
மலையக மக்கள் மண்சரிவில் மாண்டால்
மனக் கதவுகளை திறக்கவும் மாட்டனரோ?சென்ற வருடத்தில் எழுதியது

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

தியாகத்திற்கோர் சிறப்பு

தியாகம் போற்றுதற்குரியது,
தியாகம் ஏற்றுதற்குரியது!
மயானம் ஒன்றில் உறங்குதற்குதானா
தியாகிகள் ஆயினீர்,
மயானம் ஒன்றேதானா உங்கள் இலக்கு?
வானில் ஒளியாய் ஒளிர்ந்து ஏன்
மண்ணில் வாழும் மனிதர்க்கு
மகிமைகள் செய்திட முயன்றிடீர்!
எண்ணில் எமக்கு இயலுவது
எண்ணரிய பணிகள்...
நீவிர்
ஏனோ 
மயானத்தில் துயில்தற்காய்
மண்பரப்பை வேண்டுவீர்?
வேண்டாம்!
இன்னுயிரை தியாகம் செய்த
உங்களின் பெயரால்
வன்னியில் உள்ள உங்கள் 
கனவுகளின் மாந்தர்
எழுந்திட வாழ்ந்திட, 
எழுச்சியுற மாண்புற,
இயன்றன ஏதும் செய்திட
கேளும் 
தியாகத்திற்கோர் சிறப்பு
அஃதே என மொழிவீர்!

கசகரணம், விடமேறிய கனவு- விமர்சன அரங்கு | நீள்கரை

கசகரணம், விடமேறிய கனவு- விமர்சன அரங்கு | நீள்கரை

விளங்கும் மேன்மை

பலனற்றன பயனென கருதினம் நாமே
குலவேறு பலகூறி கூறுகள் செய்தமே!
கலங்கரை விளக்கம் கல்வி என்பதுவே
நலங்கள் பலவந்திடும் அறிவு மிகுந்திடில்
துலங்கும் ஞானம் பூரணம் தந்திடும்
விலங்கு மனம் போய் விளங்கும் மேன்மை
கலங்கும் நிலைபோய் கலைந்திடும் துன்பமே!

சனி, 16 ஏப்ரல், 2016

தொன்றுதொட்டு...

பண்பாடு, பண்பாடு எனத்தான் கூப்பாடு போடுவார்
கண்டாரோ, கருதினரோ, ஒழுக்கத்தில் நின்றாரோ,
எண்ணினரோ, ஏற்றனரோ குவலயத்தில் பண்பினை!
எல்லோரும் ஏற்றிடும் நாகரிக உடைகளேயே
எதிர்ப்பதுவே தம் பண்பாட்டின் ஈடுபாடெனக் காட்டி
மொழிந்திடுவர்; ஏற்பர்  அறவோர் என்பதனால்!
நன்றே உடுத்து வரினும்  தொன்றுதொட்டு
காலம், இடம், சூழல் கருதா வகையினில்
அணிந்த ஆடையே ஏற்பதுவே தகுமென
எவ்வாறோ பண்பாட்டை பறைதல் இயலும்?

அன்னையை நினைந்து..

நிலவுக்குத்தெரியும் நின் அன்பு
நிலவின் குளிர்மையின் உன் அரவணைப்பு
நிலவை எனக்கு காட்டி
நிதம் கதைகள் சொன்ன அந்தக் காலம்
உலவும் ஞாயிற்றொளியில்
நிலவு ஒளிர்வதாய்
நீ எனக்குச் சொல்லித்தந்த காலம்
மலரும் பருவத்தை எனக்கு
மனதில் பதித்திட சொன்ன காலம்
பெண்மையின் கருத்தை
எனக்குள் பொங்கிடச் செய்த காலம்
பெண் படும் துயர்களை எனக்குள்
எண்ணிட நீ வைத்த காலம்
பெண் இன்னல்களை எனக்குள்
விதைத்துச் சென்ற காலம்
எழுத எனக்குள் சிந்தனையை
எழுப்பி விட்ட அந்தக் காலம்...
காலம் மீளாதோ என இந்தக் காலம்
ஏங்கித் தவிக்கின்றேன்.
இயலுமோ உனது காலத்துள்
நான் சென்றிட
இயலுமோ உனக்குள் நான்
கரைந்துவிட!
நீ இல்லாத இந்த நாட்களுள்
நான் என்னையே இழந்துவிட
அன்னையே
உன்னைத் தேடியே
நாட்களின் நகர்வுகள்!


இன்று  எனது அன்னை சிவகெங்கா பிறந்த தினம்


வெள்ளி, 15 ஏப்ரல், 2016

புலவர் கவிதைகள்: கூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி கொள்கைகள் ...

புலவர் கவிதைகள்: கூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி கொள்கைகள் ...: கூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி கொள்கைகள் முற்றும் மாய்ந்தனவே! ஓட்டினி கேட்டவர் வந்திடுவார் –மேலும் ஒருசிலர் நோட்டினைத் தந்திடு...

ஆணுக்கும்....

பெண்ணினைப் போற்றும் காலம் வந்தது என்போம்
பெண்களின் உரிமைகள் பெற்றிடத் துணிந்தோம்
அரிவையர் தெரிவையர் எல்லாம் கூடிடுவோம்
ஆணுக்கு நிகர் பெண் எனில் தாலி தவிர்த்திடுவோம்
பெண் மணமுடித்ததற் கடையாளம் வேண்டுமெனில்
ஆணுக்கும் சரிநிகர் அடையாளம் வேண்டுமென்போம்...

எண்ணம் கொண்டே எழுதிடில் அரிவையர் உரைப்பர்
அணிகலன் என்பதாய் தாலியின் மகிமை ஆயிற்றென!சென்ற வருடத்தில் எழுதியது சிலதிருத்தங்களுடன்

வீசிடமுடியா வலைக்குள்

நுகர்வுக் கலாசாரம் நுகத்தடியாய்...
நகர்ந்திடும் நாட்களைத் தின்னும்
நமக்கென ஓர் நாளெனச் சொல்லும்
நமக்காய் தானென நவிலும்
நமைச் சுற்றியே வலை விரித்திடும்
நகர்வுகளை நாம் தவிர்த்திடிலும்
நமைத் தேடி அகத்தினில் வந்திடும்
நன்றென ஏற்றிட பழக்கியே விட்டிடும்
நுகர்வுக்கு ஒப்பிய மனமது சிறைப்படும்
நுகத்தடி வீசிட முடியா வலைக்குள்!
நுகம்பிரட்டி எனநாம் எழுந்தால்...?

வியாழன், 14 ஏப்ரல், 2016

புதினம் பறையவோ?

மதிப்பு உள மாண்புடை வாழ்வில் எனில்
விதிமாறாய் உள்ளன செய்தியாய்
ஓதிட வந்தவிடத்து மாறுபாடாய்...
மாணவனை மணாளனாக்கிய ஆசிரியை என!
பதியடையப் பலதடைகள்
பண்ணி வைத்தனர் பாவையர்க்கே...
எதிலும் எப்படியும் எவ்வகையிலும்
எண்ணம் செலுத்திடில் மேன்மை உண்டாமோ?
பதிலும் வருமே பண்பிலை என்று
விதிவசமே வாழ்வென விட்டு விடுதலுமோ
புதுமையோ எனப் புதினம் பறையவோ

கதியோ சகத்தினில் தர்மம் ஆகுவதோ!

அம்பேத்கரின் முதல் நூல்

அம்பேத்கரின் முதல் நூல்: அம்பேத்கர் ஒரு அரசியல் செயல்பாட்டாளர் மட்டுமல்ல. அவர் காலத்து தலைவர்களில் அதிகம் எழுதியவர்.

கடன் சுமையில் தத்தளிக்கும் நாடுகள்

கடன் சுமையில் தத்தளிக்கும் நாடுகள்: கீரிஸ் நாட்டை விட ஜப்பான் அதிக கடன் சுமையில் இருக்கிறது. அமெரிக்கா தனது ஜிடிபியில் 104.5 சதவீதம் கடன் சுமையில் இருக்கிறது.

இன்று உலக சித்தர்கள் தினம்: இந்திய முறை மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா? - விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோரிக்கை

இன்று உலக சித்தர்கள் தினம்: இந்திய முறை மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா? - விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோரிக்கை: உலக சித்தர்கள் தினமான இன்று இந்திய முறை மருத்துவத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

தந்தையே அவர்!
பெரியார் போலும் யாருளர் புரிந்திடக்
கூரிய கருத்தினை நேரிய வகையினில் கூறி
ஆரிய மாயையின் வேரினையே பிடுங்கியே 
தெரிய யார்க்கும் பகுத்தறிவை ஊட்டி
சீரிய நெறியினை வகுத்து தொகுத்துப்
பாரினில் ஒப்ப பாமரரும் வாழ தத்துவம்
வாரி வழங்கிய ஓரியல் தந்தையே அவர்!

நாமும் மகிழ்ந்திட..

இன்று எமக்கு விடுமுறை என்றதனால்
நேற்றும் விடுமுறை என்றதனால்
நாளையும் விடுதலை நம்நாட்டரசு அறிவிப்பு
நயம் நமக்கே விளைவது என்றதனால்
இந்து பௌத்த புதுவருடம் தனையே
தமிழ் சிங்கள புத்தாண்டு என்று
ஏற்றிட யாவரும் நற்றமிழில் வாழ்த்திட
வாழ்த்துவம் நாமும் என்றும் போலின்றும்...
ஓய்வும் ஒன்றிய மகிழ்வும் வேண்டுவதே!


புதன், 13 ஏப்ரல், 2016

இலையென எழுந்திடில்...

இரவின் முடிவே விடிவாம்
இன்பம் துன்ப முடிவாம்
இயலும் வாழ்வின் சுமைகள்
இறக்கிட வகைகள் காணல்...
இரத்தம் சிந்திட நிலையாமோ?
இதயம் அற்றவர் தருவரெனில்
இரங்கிய போதில் பெறுதல்
இனியும் இலையென எழுந்திடில்...

இறவாப் புகழொடு வாழ்வம்!

கருத்தொருமிப்பே நல்லறம்!

வணக்கம் என்பதை சுணக்கம் இன்றிக் கூறுங்கள்
வந்திடும் இன்பம் வார்த்தை கேட்டிடும் போதினில்
கும்பிடுறன் சாமி எனக் குனிந்த காலம் போயிற்று
சமத்துவ உணர்வுடன் தமிழன் தலை நிமிர்வான்
சரிநிகர் மகளிர் ஆடவர்க்கு என்றிடில் பண்பது
இணையராய் இல்லறம் தொடங்குதல் ஆகுமால்
இனியுமேன் தாலியது அடிமைச் சின்னமாய்!
கைத்தலம் பற்றிடக் கருத்தொருமிப்பே நல்லறம்!

மத மேன்மை இதுவோ?

மானின் அழகினில் மயங்கினளோ சீதை
மானின் கறியமுதை விரும்பினளா சீதை
காட்டுவழி பதினாலு ஆண்டுகள் இராமன்
வேட்டையாடி உண்டு மகிழ்ந்த புலாலோ..?
நாட்டுப் புறத்து நாங்கள் சத்துணவாய்
உட்கொண்டால் சட்டம் போட்டு தடுப்பதுவோ?

வேற்று நாட்டிற்கு ஏற்றுமதி ஆகுதாமே!
மாட்டின் இறைச்சி வேற்று நாட்டிலிருந்து
ஆக்கி இறக்குமதி ஆகிடில் ஏற்பராமே?
வியாபாரமே கருத்தினில் இருக்கும் நோக்கெனில்
வெட்கம் மத மேன்மை எனக் காட்டல்!

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

இரண்டு நாவல்கள் விமர்சன அரங்கு


படைப்பன எல்லாம்...

தடைபல தருவது நடைபெறு நிலையினவே
கொடை கொள்ளற்க கொள்கை வேறுபடின்
கோடை வெய்யில் கொளுத்துகையில்
உடை மாற்றுதல் இயல்பின தாகுமே
சாடை மாடையாய் சங்கதிகள் பிழைத்தால்
விடை கொடுத்து வினையினை மாற்றுடுக
படைப்பன எல்லாம் சிறப்பன இல்லையே

பல்லோர் ஏற்ற...

எல்லோரும் தம்மை நல்லவரென எண்ணுவதோ
பல்லோரும் ஏற்றும் பனுவலையே பாடுவதோ
நல்லவர் அல்லவே நாகரிகம் நவில்பவர்
சொல்லொன்று செயல் ஒன்றாய் வாழ்பர்
தொல்குடி மரபென்று வீறாய்ப் பாய்வர்...
நல்நெறி நாட்டிட யாவரும் கேளிரென
ஒல்காப் புகழ்நெறி நாடிடில் இயலுவதே
பல்லோர் ஏற்றப் பண்பாடு மிகுந்திடுமே!

திங்கள், 11 ஏப்ரல், 2016

கூடியுண்ணில்..

உண்மைகள் புலப்பட இனமுரண் இடையூறாய்
எண்ணுவ தில்லை இயலுவ தொன்றினை
சட்டத்துக்கு புறம்பெனில் இயற்றிடல் அதிகமென
இட்டத்துக்கு போக்குளை இலக்கினதாய் ஆக்கிடில்
ஆபத்து நிறைந்துள அறிந்திலர் பேராசையினால்..
கோபத்தில் கொப்பளித்து மோதுவதோ சாவதுவோ
கஞ்சி குடித்திடினும் கூடியுண்ணில் சுவை உளவே!

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

நிலைத்திட!

எண்ணுக என்றும் நல்லன தெளிவுற
ஏளனம் செய்தல் ஏற்றதென கொள்ளில
மண்ணுலகு மாண்புற மார்க்கம் காணுக
மதித்திட வாழ்வில் மாற்றங்கள் செய்க
திண்ணிய மனத்தொடு தினங்களை வெல்க
திருப்திபெற தீர்வு தேடிடுக நிலைத்திட!

சனி, 9 ஏப்ரல், 2016

சதிவலை புனைந்தால்...

ஒன்று மற்றொன்றைப் பழிக்கும்
மற்றொன்று ஒன்றை இகழும்
நின்று நிதானிக்க சிந்திக்கவா செய்வர்
புதினம் பறையப் புதினம் எடுப்பர்
கதியெது என்றா கலங்கி நிற்பார்
சதிவலை புனைந்த சங்கதிக் கெல்லாம்
அன்றே கொல்லும் அறம் என்பேன்

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

இலக்கி்யப் பயிலரங்கு

தேசிய கலை இலக்கியப் பேரவையின் இலக்கியப் பயிலரங்கு(சிறுகதை கவிதைப் பயிற்சிப் பட்டறையும் கருத்தரங்கும்) எதிர்வரும் 23.24 ஏப்பிரல் 2016 காலை 9மணி தொடக்கம் மாலை 4 மணிவரையும் சனி ஞாயிறு ஆகிய இருதினங்களிலும் கொக்குவில் இல 62, கே.கே.எஸ் வீதி, தேசிய கலை இலக்கியப் பேரவை கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. 
ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பதிவுகளை எதிர்வரும் 2016.04.15ஆம் திகதிக்கு முன்பதாக இல 62 கே. கே.எஸ்.வீதி, கொக்குவிலிலுள்ள பேரவையின் பணிமனையிலோ அல்லது 0775201671 என்னும் தொலைபேசி இலக்கத்துடனோ தொடர்புகொண்டு மேற்கொள்ளவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெட்டியாய்...

வெட்டவெளி நிலம் கிட்டுவதெனில் நலம்
கிட்டிபுள்ளு விளையாடி, முட்டி தட்டலாம்
வட்டமாக ஓடிடக் கூட்டம் கூடிடலாம்
வட்ட வடிவப் பந்துறுட்டி மகிழ்ந்திடலாம்
பட்டம் விட்டுப் பருவத்தில் சிலிர்க்கலாம்
நட்பில் இலயித்து வீட்டை மறந்திடலாம்..
கிட்டிடுமோ மகிழ்வு கிடப்பில் கிடந்திடில்?
வெட்டியாய்  இயபேசிக்குள் இள வட்டங்கள்..!

வியாழன், 7 ஏப்ரல், 2016

ஒருமித்து...

முற்றம் சீமெந்துத் தரையாய் சிலிர்க்கும்
தெற்றத் தெளிவாய் தெரியும் வானம்
கற்றை வீசுடும் ஞாயிறு ஒளிர்வில்
அற்றைத் திங்கள் அழகிய பூக்கள்...
மற்றென்ன வேண்டும் மனம் இலயிப்பில்!
சற்றுத் தொலைவில் குப்பை கூழங்கள்
நாற்றம் வீசுடும் தெருக்களின் பக்கம்
கற்றுணர்ந்தமோ ஒருமித்த பணிகளை
பற்றுக் கொண்டோமோ சுத்தம் பேணுதலில்!


வர்க்க நலன்

நீரின் றமையாது உலகு எனில்
நீளுலகில் அரசியலே எல்லாமே எனில்
நீருள் கழிவோயில் கலந்தமைக்குள்
ஊறியுள்ள அரசியலின் தன்மை தனை 
பாரில் உள்ளோர் உணர்வர்; தெளிவர்
சூழல் கெடல் சூக்குமம் புரிவர்
இனம் குலம் கடந்த வர்க்க நலன்
யாரால் யார்க்கு; யாருக்கு யார் என!

புதன், 6 ஏப்ரல், 2016

தேறிடல்!

நோயுற்ற நிலையில் நொந்துபோகிறது மனம்
நானுற்ற நிலையில் நைந்திடவோ தினம்
தொடர்புறு நவீனம் தொய்விலா வளர்ச்சியில்...
இயைபுற இயற்கையுடன் வாழ்ந்திட இயலுமோ?
ஆயும் திறனற்ற நிலையில் மனிதரின்
ஆயுளும் முடியும் ஆர்என் செய்வர்?
ஆதரவும் அன்பும் செய்திடலே தேறிடல்!

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

மக்கள் மீது அதிகாரம்

அரசுக் கட்டில் ஏறுபவர் மக்கள் மீது அதிகாரம்
அரச அதிகாரிகள் என்போர் மக்கள் மீது அதிகாரம்
காவல் துறை என்பதுவும் மக்கள் மீது அதிகாரம்
மூவகைப் படையும் மக்கள் மீது அதிகாரம்
சாதிய மேல்நிலை மக்கள் மீது அதிகாரம்
சமூத் தலைமையும் மக்கள் மீது அதிகாரம்
மத நிறுவனங்கள் கூட மக்கள் மீது அதிகாரம்
மக்கள் என்றோ தம்கைகளில் எடுப்பர் அதிகாரம்!

விரித்திடு கரங்களை!

மனமது துவண்டு விடுவது வேதனை
மலரது வாடி விடுவது போலுமது
சனங்கள் கூடிடில் சந்திகள் பேசிடும்
சராசரிகள் சங்கதிகள் சங்கடங்கள் தருவது
சரித்திரத்தில் நிற்பவர் சாதனை படைப்பவர்
சிரித்திடுபவர் கேலிக்கு பணிந்திடில் பயனில
விரித்திடு கரங்களை வியனுலகில் துளிர்த்திட

வேண்டும்

வீட்டுக்கு வீடு வீட்டுத் தோட்டம் வேண்டும்
வீணில் நேரம் போக்கும் நிலையும் மாறவேண்டும்
நாட்டி வைக்கும் செடிகளில் நன்மை அடைய வேண்டும்
நாகரிகம் காட்டி நிற்கும் நிலையும் மாறவேண்டும்
பண்பட்ட நல்ல வாழ்விற்கு நிலம் பண்படுத்தல் வேண்டும்
பயிர் பச்சை தரும் சுகத்தில் சுற்றுசூழல் மேம்பட வேண்டும்

திங்கள், 4 ஏப்ரல், 2016

விருத்தி பெற்றிடுவீரே!

நாயாய் பேயாய் நீவீர் அலைந்திடவோ
நாலும் தெரிந்தவர் நடிப்பில் வல்லவர்
உரைத்தன எல்லாம் உண்மைகள் என்றிடவோ...
உறுநலன் அறிந்து உற்றதுணை பெற்றிடிலே
தறுதலை எனநாளை பேரெடுக்கா வண்ணம்
தலைமைபெற்றே தரணியில் நின்றிடலாம்
விலை போகிடா விருத்தி பெற்றிடுவீரே!

ஒரு நீதி

உண்மை உரைக்கில் என்போல் பலரும்
உய்ய மார்க்கம் எதுவும் இல்லையே
தொய்ந்தும் நைந்தும் வாழ்வதே நிலையாய்
தொடரும் துன்பம் விலகிட வேண்டுமெனில்
தடங்கல் யாதென உணர்ந்திட அறியாமைத்
தனங்களை விலக்கித் தரணியில் ஒன்றியே
இனபேதம் மதபேதம் சாதியம் தகர்த்தி
இயற்றிடல் வேண்டும் ஒருநீதி பொதுமையே!

அடிமை வாழ்வது..

தாலி உயர்வென தரமறிந்துரைக்கும் நபர்களே
வேலி எனவகுத்து தாழ்ந்தது இன்றந்த நாண்
தாரம் என்றே வதைத்திடினும் அடங்கிப் போக
தாங்கி வாழும் பெண்டிர் கண்ணீர் அறிவீரோ
வீரம் பேசி விளாசித்தள்ளும் ஆணினத்தின்
கோரம் மிக்க கொடுமையின் சின்னமாய் தாலி...
வேண்டுமோ பெண்ணினுக்கு அடிமை வாழ்வது?

சனி, 2 ஏப்ரல், 2016

புதிதாய் அதிசயம்

ஒருபோதும் மக்கள் நலன் சார்ந்து அரசில்லை என்பேன்
திரும்பிய திசையெங்கும் சுரண்டிடும் பல்தேசியக் கும்பல்
விரும்பிய வகையில் எமக்கு உலகில்லை என்பதனால் 
அரும்பிடலாம், புதிதாய் அதிசயம் நிகழும், அறம் நிறைந்திட
வருங்காலம் மக்கள் எழுந்து புதுயுகம் படைப்பர் என்பேன்

சமத்துவம் பூத்திட!

நிலமானிய அரசு மாறி முதலாளிய அரசானது
உலகெங்கும் தமதாக்கி சுரண்டிய நிலையாச்சு
பலகாலம் நிலைக்குமோ பரிதவிக்கும் எம்நிலை
தலமெங்கும் அறிவுமிக, பாட்டாளிகள் எழுவரெனில்
உலகமெலாம் சமத்துவம் பூத்திட வழியாச்சு!

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

உணர!

செம் மொழியாம் தமிழ் எம் தாய் மொழியாம்
சேதிபல அறிந்திட செய்திடும் ஊடகமாம்
ஆம் அதன் பயன் ஆர் அறிந்திடுவாராம்
அன்னை தமிழை ஓதி உணர்ந்திடுவீராம்!

இலங்கை வங்கி கனிஷ்ட நிறைவேற்று உத்தியோகத்தர் இராசக்கோன் புண்ணியராஜா 24.03.2016 இல் ஓய்வுபெற்றமை குறித்த வாழ்த்துப்பா

துலங்கு புகழ் தேசத்து இலங்கை வங்கியதில்
நலம்பெற எனவே எண்பத்தொன்றினில்
இணைந்தீர் வடமாகாணம் அமைந்த அலுவலகம்
தொடர்ந்தே தொய்வு இல் சேவையினில்
யாழ்ப்பாணம் சுன்னாகம் கிளிநொச்சி மானிப்பாய்..
இளமைத் துடிப்பொடு சுன்னாகம் மீண்டாய்!


காரைநகர் அமைந்த கிளையிலும் நிறைவாய்
ஒழுங்கு தூய்மை விளங்க திறன்கள் கூட்டியே
கனிஷ்ட நிறைவேற்று அதிகாரியாய் உயர்ந்தே
காங்கேயன் துறைக் கிளையதில் திகழ்ந்தாய்
மல்லாகம் பதியதில் மலர்ந்து நாம் புகழ்ந்திட
இளைப்பாறும் அகமதில் மகிழ்வின் பெருமிதம்!


தொல்புரம் பெற்ற பேறெனவே உதித்து
நல்மக்கள் பெற்றே யாழ்ப்பாணம் பெயர்ந்து
வைப்புகள் பெருக்கிடும் மார்க்கங்கள் தந்து
எல்லார்க்கும் சேமிப்பின் அருமையினை உவந்து
இல்லற வாழ்வின் பேற்றில் செறிவில்
இலங்கை வங்கியதன் நாமம் காத்தீரே!


பொறியியல் வலலுநராய் வசீகரன் சிறந்திட
காப்புறுதி துறையினில் தபோகரன் வளர்ந்திட
பொறியியல் கற்கையில் திவாகரன் திகழ்ந்திட
மருத்துவக் கற்கையில் ரிசாந்தினி மலர்ந்திட
உயர்தர கற்கையில் யசோகரன் வெனறிட
மககளின் உயர்வில் மலர்ந்து நிறைவீரே!


எழுபத் தாறு அகவை நிறைவுறும் வங்கியின்
ஏழ் ஐந்து ஆண்டுகள் ஏற்றத்தின் பங்களிப்பில்
புன்னகை மாறா இராசக்கோன் புண்ணியராசா
தன்னரிய சேவை தன்னால் எமக்கெல்லாம்
முன்னுதாரணமாய் பின்பற்றி நாமென்றும்
முதல்தர வங்கியதன் நாமம் நாட்டுவமே!


பெறுமவற்றுள் பேறு நற்பெயர் எனவே திகழ்ந்து
அறுபதாம் அகவையில் அகமகிழ்ந்து இளைப்பாறும்
புண்ணியம் சேர் ராசா மனையாள் சிவசக்தியொடு
எண்ணரிய நலன்கள் பெறு மக்கள் சிறப்பொடு
வருங்காலம் வதுவை புரிந்திடப் பேரர் பெற்றே
வாழிய வாழிய என வாழ்த்துவமே நயந்தே!


இலங்கை வங்கி காங்கேயன் துறை கிளை வாழ்த்துப்பாவிற்காக  இயற்றி வழங்கியது
ஆக்கம் அழ பகீரதன்

மண்ணில்

மாற்றம் மண்ணில் தானே நிகழ்வ தில்லை -அறிவு
பெற்றிடில் மாற்றும் வலிமை பாமரருக்கும் இயலும்
பொதுமை அறமது நாட்டல் எங்கள் கடமை ஆகும்
நாளைய மனிதருக்கு நாம் புது உலகினைச் சமைப்போம்.

அடுத்தவள் பற்றி

அடுத்தவள் பற்றி


அடுத்தவளிற்குள் நுழை
துருவித் துருவி
அவளை ஆராய்!
அவளது நினைப்புகளை
அந்தரங்கங்களை
அவாக்களை
எதிர்பார்ப்புகளை
எதிர் உணர்வை
எல்லாவற்றையும் விமர்சி
தேடித்திரிந்து
நாலுபேருக்குச் சொல்லு!


கவலைப்படு
அவள்
கெட்டுப்போவதாய்
அழிவதாய்
அவளால்
சமூகம் கெடுவதாய்
உரத்துச் சொல்லு
நாலுபேர் தலையாட்ட!
தவறியும்
உன்னைப் பற்றி
உனது அந்தரங்கம்
உனது அவாக்கள்
எதிர் பார்ப்புகள்
எதிர் உணர்வு
எது பற்றியும்
விமர்சிக்காதே
யாருக்கும் சொல்லாதே
அடுத்தவளால் மட்டுமே
சமூகம் கெடும் ஆதலால்
அவளைப் பற்றி
அலசு!

அப்படியே இரு கவிதைத்தொகுப்பிலிருந்து

அழ பகீரதன்