ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

தெரு முனையில் நான்

தெருவில் நான் பயணிக்கின்றேன்
தெரு என்னைச் சுமந்து செல்கின்றது
தெருவில்  என்னை நகர்த்துகின்றது வாகனம்
நானே தெருவை நகர்த்துதல் இலையாயினும்
நான் தெருக்களை நகர்த்துவதாய் உணர்கின்றேன்
நகரும் வாகனங்களில் நபர்கள் நகர்கின்றனர்
அவரவர் முகங்களில் அவரவர் வேகம்
அவரவர் நோக்குகளில் அவரவர் மார்க்கம்
பெறுமவற்றுள் யாதொன்றும் பேறிலையாயினும்
பயணங்கள்  ஏனோ பலகாலும் தொடர்கின்றன
அறுநிலை வரினும் ஆரும் உணருதலின்றி
அயற்சி இன்றி முயலுவர் பயணங்களில்..
பயனற்றன எனிலும் பயணங்களில்
மனக்குவிப்புடன் பயணிப்பதுவே இலக்காய்!
தெருக்கள் எங்கும் நானும் திரிகின்றேன்
இலக்கு எதுவென அறியாது புலம்புகின்றேன்
போகுமிடம் எங்குளதென புரியாது நகர்கின்றேன்
யாரிடம் வினவின் யார் எடுத்துரைப்பர்?
யாரும் அறிவரோ யான் போம் இடம்!
ஊடகம் ஒன்றுளது தேடகம் அதுவென
கூகுளுக்குள் குவிகின்றது என்முகம்
தெருவில் ஓரத்தில் நான் ஒதுங்கி..
தெருவில் கடப்பவர் பலர் உளர்
தெருவில் நடப்பவர் யார் உளர்
தெருவே என்னை வியப்பாய் பார்க்க
பார்ப்பார் யாருமில்லை பயணம் குறியாய்...
தெருக்கள் யாருக்காய்; யார் தெருக்களோ?
சுருங்கிய உலகுள் நானோ
குசலம் விசாரிப்பார் ஆருமற்ற தனியனாய்
கூகிளுக்குள் முகம் பதித்து தெருமுனையில்...

அழ பகீரதன்

சனி, 6 பிப்ரவரி, 2016

உயரப் போகும் பாப்பா


சின்னச் சின்னப் பாப்பா!
சிவந்த நல்ல பாப்பா!
கண்ணைச் சிமிட்டி என்னைக்
கவரும் நல்ல பாப்பா!
பஞ்சைப் போன்ற உடலால்
நெஞ்சைக் கவரும் பாப்பா!
கொஞ்சச் சொல்லி என்னைத்
தஞ்சம் அடையும் பாப்பா!
பாவம் என்பது அறியாப்
பச்சை உள்ளப் பாப்பா
கோபம் ஆசை குரோதம்
கொள்ளா நல்ல பாப்பா!
மனதைக் கவரும் விதமாய்
மாண்பு கொண்ட பாப்பா
உலகைக் காணும் உவகையில்
உயரப் போகும் பாப்பா


பூபாளம் கவிதை இதழில் 1983 ஜனவரியில் பிரசுரமான கவிதை சில மாற்றங்களுடன்
அழ பகீரதன்

ஆற்றைக் கடந்த குட்டிக் குதிரை


ஒரு பெண் குதிரையும் அவளது ஒரே மகனும் குன்று ஒன்றில் வசித்து வந்தன. நாள் முழுவதும் தாயுடன் இருக்கவே குட்டிக் குதிரை விரும்பியது. அது ஒரு கணமேனும் தாயை விட்டுப் பிரிந்து சென்றதே இல்லை.
ஒரு நாள் தாய்க்குதிரை மகனைப் பார்த்துச் சொன்னது:
"மகனே, நீ இப்போது வளர்ந்து விட்டாய். கொஞ்சம் எனக்கு ஒத்தாசையாக உதவி செய்து ஆறுதலளிக்கக் கூடாதா?"
குட்டிக் குதிரை தலையை அசைத்துச் சொன்னது:
"ஏன் முடியாது. எனக்கு உண்மையாக, வேலை செய்ய நல்ல விருப்பம்."
மிகவும் மகிழ்ந்துபோன தாய்க்குதிரை சொன்னது:
"நல்ல பையன், இப்ப எனக்காக கோதுமை மூட்டையைச் சுமந்து கொண்டு மில்லுக்கு போகவேணும்."
குட்டிக்குதிரையின் முதுகில் கோதுமை மூட்டையை தாய்க்குதிரை ஏற்றிவிட்டது. 
அது அவ்வளவு பாரமாக இருக்கவில்லை. ஆனால் குட்டிக்குதிரை சொன்னது:
"அம்மா, என்னுடன் நீயும் வாவேன்."
"ஏன்? எனக்கு உன்னுடன் வர நேரமிருந்தால் உன்னுடைய உதவி எனக்குத் தேவையில்லையே! நீ நேராக மில்லுக்குப் போய் விரைவாக வீட்டுக்குத் திரும்பவேண்டும். இரவுச் சாப்பாட்டுக்காக நான் காத்திருப்பேன்."
முதுகில் கோதுமை மூட்டையுடன் குட்டிக்குதிரை மில்லுக்குக் கிளம்பியது. ஆழமற்ற ஆற்றினை வந்தடைந்தது. ஆற்றில் ஒரே சீராக நீர் பாய்ந்துகொண்டிருந்தது. தனது நடையை நிறுத்தியது.
"கடக்கவா, கடக்காது நிற்கவா? எனது அம்மா இல்லையே. என்ன செய்வது?" எனச் சிந்தித்தது. அதன் தலையைத் திருப்பி பின்பக்கம் பார்த்தது.

தனக்குப் பின்னால் தன்னுடைய தாய் ஓடிவரும் என அது எதிர்பார்த்தது. தேவை ஏற்படும் போதெல்லாம் தாய்க்குதிரை உதவியாக இருந்ததால் அது அவ்வாறு எதிர்பார்த்தது.
ஆனால் அதன் தாய் அங்கு இருக்கவில்லை. அதன் தாய் வரக்கூடிய சாத்தியம் அங்கு இல்லை. ஆற்றங்கரையில் எருது புல் மேய்ந்து கொண்டிருப்பதை அது கண்டது.
குட்டிக்குதிரை எருதிடம் ஓடிச்சென்று கேட்டது.
"மாமா, என்னால் ஆற்றைக் கடக்கமுடியுமென்று நினைக்கின்றாயா"
எருது பதிலளித்தது:
"ஆழமற்ற ஆற்றினை நீ பார்க்கவில்லையா? எனது கெண்டைக் காலுக்கு மேலே கூட தண்ணீர் இல்லை. உன்னால் ஏன் கடக்கமுடியாது?"
உற்சாகமடைந்த குட்டிக்குதிரை ஆற்றின் கரை ஓரத்தை நோக்கிப் பாய்ச்சலில் சென்றது.
"நில்! அவசரப்பட்டுப் போகாதே! நில்!"
யார் பேசுவது?
குட்டிக்குதிரை நின்று நிமிர்ந்து தலையை உயர்த்திப் பார்த்தது. உயர்ந்த மரத்தின் கிளை ஒன்றில் நின்ற அணைலைக் கண்டது. தனது வாலை ஆட்டியபடியே குட்டிக்குதிரைக்கு அணில் சொன்னது:
"சின்னக் குதிரையே! வயதான அந்த எருது சொல்வதைக்கேட்காதே! நீர் மிகவும் ஆழமானது. நீ இலகுவில் ஆற்றுள் மூழ்கி விடுவாய்!"
குட்டிக் குதிரை அணிலை வினவியது:
"உனக்கு எப்படித் தெரியும்"
"எனக்கு எப்பிடித் தெரியுமா? நிச்சயமாக எனக்குத்தெரியும். நேற்றுத் தான் எனது தோழன் ஒருவன் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு.."
"ஆனால், எருது மாமா எனக்கு இப்ப சொன்னாரே, தண்ணி ஆழமில்லையென்று.." குட்டிக்குதிரை கேட்டது.
"ஆழமில்லையென்று அவர் உனக்குச் சொன்னாரா? அப்ப எனது நண்பன் எப்படி ஆற்றுக்குள் மூழ்கினான். அதைச்சொல்லு. வயதான எருதை நீ நம்பாதே!"
ஆறு ஆழமானதா? அழமற்றதா? குட்டிக் குதிரையால் முடிவுக்குவர முடியவில்லை.
"ஆ...! நான் வீட்டுக்குப் போய் அம்மாவிடம் கேட்பதுதான் நல்லது."
இஸ்...இஸ்... என அதனது வால் சத்தமிட்டு ஆட ஒரே பாய்ச்சலில் குட்டிக்குதிரை வீட்டுக்கு ஓடியது.
அதனைக் கண்டதும் வியப்பு மேலிட அதன் அம்மா வினவியது:
"உடனே வந்திட்டியே? ஏன்?" 
"ஆறு சரியான ஆழம். என்னால் அதைக் கடக்க முடியாது" வெட்கத்தோடு குட்டிக்குதிரை சொன்னது.
"ஆழமா? எப்படி ஆழமானது. நேற்றுப் பல தடவைகள் கழுதை மாமா ஆற்றைக் கடந்து சென்றாரே. விறகுக்கட்டைகளைக் கொண்டுபோய் கொடுத்து வந்தார். அவருடைய வயிற்றைக்கூட தண்ணி முட்டவில்லை என்றுசொன்னார். அது ஆழமே இல்லை."
"ஓம் எருது மாமாவும் சொன்னவர். தன்ரை தண்டைக்கால்  வரை தான் தண்ணி இருந்ததாம்."
"அப்ப, ஏன் உன்னாலை போகமுடியாது."
"அணில் சொல்லுது, தண்ணி தாழ்ப்பமாம். அதின்ரை சினேகிதன் ஒருவன் நேற்றைக்குத் தானாம் ஆற்றில் மூழ்கினவனாம். தண்ணி வேகமா பாய்ஞ்சுதாம்."
"ஆறு தாழ்ப்பமில்லையா எண்டு அவையள் சொன்னதை நீ கவனமா கேட்கவில்லையா?"
"ஓம் நான் கேட்டன், ஆனால், ஆர் சொன்னது சரியெண்டு என்னாலை சொல்ல முடியேல்ல"
தாய்க்குதிரை சிரித்துக் கொண்டே சொன்னது:
வடிவா யோசிச்சுப் பார்! எருதுமாமாவின் உயரம் எவ்வளவு? பருமன் எவ்வளவு? அணிலின்ரை உயரம் எவ்வளவு?  பருமன் எவ்வளவு? அணிலோடை ஒப்பிட்டுப்பாக்கேக்கை நீ மிகவும் உயரமானவன். பெரியவன். இதை யோசித்துப் பார்த்து உன்னாலை ஆற்றைக் கடக்க முடியுமா இல்லையா என்பதை நீ முடிவு செய்."
பளிச்சென்று அதற்கு உண்மை புலப்பட்டது. துள்ளிக் குதித்த குட்டிக்குதிரை கூறியது:
"இப்ப எனக்குத் தெரியும். தண்ணி எல்லாருக்கும் தாழ்ப்பமா இராது. எந்தவித ஆபத்துமில்லாம என்னாலை ஆற்றைக் கடக்க முடியும். எனக்கா தெரியாது!"
மகிழ்ச்சியோடு குட்டிக்குதிரை ஆற்றோரம் பாய்ந்து ஓடியது. உடனடியாக ஆற்றுக்குள் பாய்ந்தது. முழங்கால் வரையே தண்ணி முட்டியது. ஆறு ஆழமாக இல்லை. 
எருது மாமா சொன்னது போல அது ஆழமற்றதாகவும் இருக்கவில்லை. அணில் சொன்னது போல ஆழமாகவும் இருக்கவில்லை. 
பெரும் ஆன்ம பலத்துடன் குட்டிக்குதிரை ஆற்றைக் கடந்து தான் சுமந்து சென்ற கோதுமையை மில்லில் விநியோகித்து மீண்டது.
(சீன நூலான The Magic Flute and other Children's Stories நூலிலிருந்து இக்கதை ஆங்கில வழி தமிழாக்கம் செய்யப்பட்டது.

நன்றி : தாயகம்- 34
பாட்டி என்ற புனை பெயரில் அழ பகீரதன்

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

விடுமுறை என்றால்...


சின்ன வயதினில் சிறுவர் விளையாட்டு
சொன்ன மொழிகளில் சொக்கிடும் மனங்கள்
அன்பைச் சொரியின்ற அன்னையின் பெருமிதம்
தென்னை மரத்தடியில் தென்றலின் அரவணைப்பு

கூடி ஓடுதலில் குடும்பத்தில் குதூகலம்
ஆடிப் பாடுதலில் அனைவர்க்கும் ஆனந்தம்
வாடி வீழ்ந்திடும் இலைகளின் நடுவினில்
தேடிப் படுத்து வானினை நோக்குதல்

பாடிய பாடலில் இசைந்திடும் மனங்கள்
கோடிகள் சுற்றி ஓட்டப் பந்தயங்கள்
சோடிகள் சேர்ந்து கூட்டத்தில் பாட்டுக்கள்
சாடிகள் நிறைய நட்டனர் கன்றுகள்

சின்னப் பானையில் சோற்றுச் சமையல்
அன்னம் இட்ட கைகளுக்குப் படையல்
நாவூற மெச்சிப் புகழும் தாய்மை
நாலு தெருவிலும் நாட்டிடும் பெருமை

சேலை கட்டிச் சிறுவர் இல்லம்
காலை மாலை விளையாட்டில் இன்பம்
விடுமுறை என்றால் வீட்டில் ஆனந்தம்
விடுப்புப் பார்க்க சுற்றம் சூழ்ந்திடும்

காலம் அது அந்தக் காலத்து இன்பம்
வீட்டிலின்றோ  தொல்லைக் காட்சி
வீதிக்கு வீதி இன்றோ டியூட்டறிகள்
சித்திக்குமோ சிறுவர் சேர்க்கும் இன்பம்?

அழ பகீரதன்


புதன், 3 பிப்ரவரி, 2016

இழக்கவும் கூடுவதோ?

மாலை முழுவதும் விளையாட்டென
மாணவர் இருந்த காலமுண்டு -நாம்
மாணவராய் இருந்த காலமது
கூண்டுக் கிளி போல் பள்ளிக்குள்
கூடிப் பேசிக் களிப்பதுவோ
பிரம்பெடுத்து அடிப்பர் ஆசிரியர்
தரம் பிரித்து கற்பிக்கும் நடைமுறையில்
மனம் ஒப்பிட மறுத்து
நாடி நண்பருடன் விளையாடிட
நாட்டம் கொள்ள மாலையில்
வீட்டுக் கோடியில் இடம் தேடி
நாட்டி வைத்த இன்பம் கோடி
கெந்திப் பிடித்தலிலும் கோலி விளையாட்டிலும்
தாயம் உருட்டலிலும் சிப்பி பெறுக்கலிலும்
கொக்கான் வெட்டலிலும்
கிட்டி புள்ளு விளையாட்டிலும்
கிளித்தட்டு விளையாட்டிலும்
கெட்டித்தனம் காட்டிடும் அந்தக்
காலம் மறப்பதும் உண்டோ?
கனிவில் மனம் இலயித்ததே!
உண்டமோ உடுத்தமோ அறியோம்
கண்டது கருத்தொருமித்த விளையாட்டே!
பண்டுதொட்டு எம் பரம்பரையினர்
பழக்கிவைத்த விளையாட்டு
பாரம்பரியம் காத்த பண்பாடு...
ஆரம்ப பள்ளியில் ஆரம்பித்த சினேகம்
தேர்ந்த நட்பாய் நாடொறும் வளரும்...
நீள் புவியில் இன்றோ நீள் பிரிவில்
ஆள் காணா புலம்பெயர்வுகள் ஆனாலும்
அன்று தொட்ட கைகளை இன்றும் அவாவும்
அன்பு கொண்டு அணைக்கத் தோன்றும்...
விளையாட்டில் விளைந்த இணைப்பை
இழக்கவும் கூடுவதோ?  இதயம் கனக்குமே!

அழ பகீரதன்