கேளாய், பெண்ணே!

விட்டு விட்டு
விழுகின்ற
சொட்டு நீருக்காய்
குழாயின் கீழ்
சொண்டு நீட்டி
காத்திருக்கும்
குருவி போல்
இடைக் கிடை
அன்பு காட்டும்
குடிகாரக் கணவனுடன்
குடித்தனம் பண்ணுகிறாய்!

பெத்த அன்னை
தந்தை பார்த்து
சொத்துக் கொடுத்து
தந்த சொந்தம்
எட்டி அடித்தால்
என்ன செய்வது
வாழ்தல் கடன்
எங்கும் இப்படித்தான்
ஆறுதல் சொல்லுகிறாய்!

இராணுவ வதையாய்
இரணமாய் உடம்பு
ஆயினும் நீயோ
 ஆக்கிய அவனே
மணாளன் என
மகிழ்ச்சி கொள்கிறாய்
மூஞ்சை வீங்கிக்
கண்ணீர் சிந்தினும்
கணவன் அவனே
உரிமை உண்டென
எண்ணம் கொள்கிறாய்!

ஏதென்று சொல்வேன்
உன் அறிவீனம்!
அடிமையாய் போவதற்கோ
திருமண உறவு?
இணையாய் வாழ்வதற்கே
ஒப்பந்த மணமே!
உதவியாய் இருப்பதற்கே
உறவென்ற அமைப்பு,
உதைப்பதற்கு அன்று!

அடிக்கின்ற கையை
தடுத்து நிறுத்து!
அன்பின் தத்துவத்தை
எடுத்துக் கூறு!
முடியாது என்றால்
முறித்து விடு
உறவை!

1988

அப்படியே இரு தொகுப்பில் இடம்பெற்ற கவிதை

-அழ.பகீரதன்

கருத்துகள்

கவியாழி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆக்கிய அவனே
மணாளன் என
மகிழ்ச்சி கொள்கிறாய்//அதுதானே பெண்மை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது