வியாழன், 31 அக்டோபர், 2013

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் தேர்வும் எனது அனுபவமும்

பண்டத்தரிப்பு காலையடியில் 5ந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற இருக்கின்றது. பரீட்சையில் தோற்றி வென்ற மாணவர்களினதும் தோற்ற மாணவர்களினதும் ஒன்று கலப்பாக அனுபவப் பகிர்வாக இருக்கவேண்டும் என்பதே இந்த ஒன்றுகூடலில் நோக்கமாக இருக்கின்றது  எனக் கருதுகின்றேன்.
மாணவர்கள் சிறு வயதிலிருந்தே போட்டிச்சூழலில் வளர்க்கப்படுகின்றார்கள். ஆயினும்  எதிர்காலத்தில் பிரகாசிப்பவர்களாக வென்றவர்களை விடத் தோற்றவர்களே அதிகம் இருப்பார்கள் என்பது எனது அபிப்பிராயம். ஏனெனில் நானும் பெரிதாக பிரகாசிக்கவில்லை எனிலும் தோற்றவர்களின் பட்டியலில் உள்ளவன் தான். தோற்றதே எனக்குள் ஒரு உத்வேகத்தை உருவாக்கியது. என்னைப்படிப்படியாக உருவாக்கியது. ஒருவகையில் பார்த்தால் நானும் மெல்லக் கற்கும் மாணவன் தான். இப்போதும் படித்துக்கொண்டு இருப்பவன் என்பது மிகப்பெரிய கதை. நானும் இந்த ஐம்பது வயதிலும் வங்கியியல் டிப்புளோமா பரீட்சைக்கு தோற்றுவதற்காக படித்துவிட்டு பரீட்சை மண்டபத்தில் போயிருந்து ஞாபகசக்தி இல்லாமல் முழிபிதுங்க விழிப்பது தனிக்கதை.
அதைவிட,
என்னோடு படித்து ஐந்தாம் வகுப்பில் புலமைப்பரீட்சையில் தோற்றி வெற்றியீட்டிய ஒரு மாணவன் கதை தான் என்னை இன்னமும் சிந்திக்க தூண்டுவதாக இருக்கின்றது.
புலமைப்பரீட்சையில் சித்தியெய்திய அந்த மாணவன்  தொடர்ந்து வந்த பரீட்சைகளிலும் சித்தியெய்தி விஞ்ஞானமாணிப்பட்டம் பெற்று ஆசிரியத்தொழிலும் பெற்றார். ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி பெற்றாரா என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கின்றது.
அவர் மோசமான குடிகாரன் ஆனார். தெருவில் குடித்துவிட்டுதிரியும் கூட்டத்தோடு ஐக்கியமானார். அதுவே அவரது தினசரி வாழ்வாகிவிட்டது. அறிவுலகில் பிரகாசித்த அவரால் தனது ஆளுமையை ஏன் வளர்க்க முடியவில்லை.
குடிகாரனுக்கு திருமணம் வாய்க்குமா? இல்லை
மோசமான குடிகாரனுக்கு குடிப்பதற்கு பணம் வேண்டுமே பழகியவர்களிடம் இருந்து கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அதுவும் இயலாதபோது என்ன செய்வார். பள்ளியில் களவு எடுத்து மாட்டுப்பட்டு இறுதியில் சிறைக்கு சென்றார்.
எனது பாலிய நண்பன் இவ்வாறு பரிதாப நிலைக்குப்போவதற்கு என்ன காரணம். நோக்கற்ற வெறும் போட்டிச்சூழலில் கல்வி ஒன்றே இலக்காக கொண்டு அந்த பிள்ளையை ஆசிரியர்களாகிய பெற்றோர் வளர்த்தமையே  காரணம், படி படி என்று பிள்ளைகளை கண்டித்து வளர்த்தால் அவர்களது மனநிலை எப்படி மேம்படும். எல்லாத்தையும் விட அன்பும் அரவணைப்புமே மாணாக்கரை படிக்கும் காலத்தில் அல்லாவிடிலும் அவனது வாழ்வில் உயர்வை என்றோ உருவாக்கும்.
என்னைப்போல் மெல்லக்கற்கும் மாணவர்களும் என்றோ உயர்வார்கள் என்பது தான் எனது நம்பிக்கையாக இருக்கின்றது.
நான் மட்டுமல்ல எனது இருபிள்ளைகளும் கூட 5ம் வகுப்பில் கல்வி கற்று சித்தியெய்தவில்லை, ஏனெனில் நான் அவ்வாறு அவர்களை கண்டித்து வளர்த்தவனில்லை.

வெள்ளி, 18 அக்டோபர், 2013

புதியது ஏற்கும் புரிவினில்

புரிந்தவரும் இல்லை
தெரிந்தவரும் இல்லை
உணர்ந்தவரும் இல்லை
உய்த்தவரும் இல்லை

நினைப்பது ஒன்று
நடப்பது ஒன்றாய்
நிகழ்வுகள் வாட்டும்
நிதமெனில் என்செய்ய!

அறம் என நினைத்து
இழந்தது அதிகம்
திறம் என யாரும்
புரிந்ததும் இல்லை

ஐம்பது அகவையில்
நிறைவென எதுவுண்டு
அடங்க மறுக்கும்
மனதொடு நானும்.

இயற்கையின் அமைப்பில்
முதுமையின் ஏற்ப்பு
படிமுறை வளர்ச்சியில்
அடங்குதல் முறையே

இனியொரு பிறப்பு
இயலுதல் ஆகும்
புதியது ஏற்கும்
புரிவினில் பூக்கும்

இது விதியென ஏற்கில்
முதுமையும் தகும்
இனிவரும் காலம்
இளையவர்க்கு ஆகும்