செவ்வாய், 11 ஜூன், 2019

நாம்


நாம்

அழ. பகீரதன்

வாள் வீச்சின் வன்மையில்
ஆள் பூமியின் பரப்பை
விரிவுபடுத்தலில்
வீரம் காட்டிய
தொல் மறவர் குடியெனப்
பிதற்றியே
வேற்றுநாட்டவரை
அடிமையாய் கொண்டதனையும்
வேற்றுநாட்டுப்
பெண்டிரைக் கொண்டதனையும்
வேற்று நாட்டு
வளங்களைக் கொள்ளைகொண்டதனையும்
பெருமையெனச் சாற்றி
யாவரும் கேளிர் என நேர்நெறியில்
பகுத்துண்டு பல்லுயிரோம்பிய
பண்டைப் பழமையைக் குலைப்பீரோ?
உலகெங்கும் நிகழ்ந்த
யுத்தங்களிலும் போர்களிலும்
சண்டைகளிலும் ச‍ச்சரவுகளிலும்
கலவரத்திலும் கொந்தளிப்பிலும்
குண்டடிபட்டு
மாண்டவரின்
சோதர‍ர் நாமன்றோ?


ஞாயிறு, 9 ஜூன், 2019

ஆள்மாற்றம் கோருகிறது


ஆள்மாற்றம் கோருகிறது

அழ. பகீரதன்


தாமே
தமிழ்த் தேசியம்
என மொழியும்
வெள்ளாளியம்
ஆள்மாற்றம் கோருகிறது.

உலகெங்கும் சென்று
தமது நலன் காக்கத்
தமிழ்த் தேசியம் க‍க்கும்
சைவ வெள்ளாளியம்
கோயிலில்
உள்சென்று வழிபட
தேர் வடம் பிடிக்க
சாமி காவத் தோள்கொடுக்க
பஞ்சமர்க்கு மறுக்கின்றது.

தாழ்த்தப்பட்டோரைச்
சமநிலையில் பேணுதற்குக்
கிறித்தவ வெள்ளாளியம்
தனித் தேவாலயமென
முன்மொழிகின்றது.

உழைப்பவர்க்குச்
சத்துணவான
மாட்டுக்கறி
மறுக்கும்
இந்துத்துவ வெறியாய்
வெள்ளாளியம் மேல்கிளம்புகிறது.

உழைக்கும் மக்கள்
தாமெழ வேண்டாமென
ஈய்கின்ற விருத்தியில்
சுருட்டியது போகப்
பெறுவீர் எனப்
பேரங்கள் பேசிடும்
தேசியக் கட்சிகளொடு
ஐக்கியமான வெள்ளாளியம்.

முற்போக்குத்
தமிழ்த் தேசியம் நோக்கி
மாற்று அரசியலை
மக்கள் வேண்டிநிற்க
வெள்ளாளியமோ
ஆண்டபரம்பரையில்
ஆள்மாற்றம் கோருகிறது.

இலங்கையன் என


இலங்கையன் என...

அழ.பகீரதன்

தமிழர்
தேசிய இனமெனத்
தம்மை உணர்ந்து
நிலைநிறுத்த
சுயநிர்ணயம் இருக்குமெனில்
முஸ்லிம் இனம்
தேசிய இனமென
யாவரும் ஏற்றிடக்
காலம் கனியுமெனில்
மலையகத் தமிழர்
இனமென ஏற்றிட,
இந்நாட்டின் முதுகெலும்பாய்
சம ஊதியம் பெறும்
காலம் அமைந்திடக்
கூடுமெனில்
சிங்கள மக்கள்
மனங்களைச்
சிறுமைப் படுத்த
இனவாதம் க‍க்குபவர்
தேர‍ர் ஆயினும்
ஓராத அரசொன்றை
மதச்சார்பற்றுத்
தேர்வர் எனில்
கூட்டாட்சியில்
சிங்களர் தமிழர்
முஸ்லிம் மலையகத் தமிழர்
சுயநிர்ணயம் ஏற்றிட
இலங்கைத் தீவு
ஒன்றியம் ஆயின்
நானும் எழுவேன்
இலங்கையன் என!