திங்கள், 2 டிசம்பர், 2013

book release3கனடாவில் எனது கிராம மக்களின் அமைப்பான பண் கலை பண்பாட்டு கழகம் ஒழுங்கு செய்த எனது கவிதைத் தொகுப்பான எப்படியெனிலும் நூல் அறிமுகவிழாவில்

வியாழன், 31 அக்டோபர், 2013

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் தேர்வும் எனது அனுபவமும்

பண்டத்தரிப்பு காலையடியில் 5ந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற இருக்கின்றது. பரீட்சையில் தோற்றி வென்ற மாணவர்களினதும் தோற்ற மாணவர்களினதும் ஒன்று கலப்பாக அனுபவப் பகிர்வாக இருக்கவேண்டும் என்பதே இந்த ஒன்றுகூடலில் நோக்கமாக இருக்கின்றது  எனக் கருதுகின்றேன்.
மாணவர்கள் சிறு வயதிலிருந்தே போட்டிச்சூழலில் வளர்க்கப்படுகின்றார்கள். ஆயினும்  எதிர்காலத்தில் பிரகாசிப்பவர்களாக வென்றவர்களை விடத் தோற்றவர்களே அதிகம் இருப்பார்கள் என்பது எனது அபிப்பிராயம். ஏனெனில் நானும் பெரிதாக பிரகாசிக்கவில்லை எனிலும் தோற்றவர்களின் பட்டியலில் உள்ளவன் தான். தோற்றதே எனக்குள் ஒரு உத்வேகத்தை உருவாக்கியது. என்னைப்படிப்படியாக உருவாக்கியது. ஒருவகையில் பார்த்தால் நானும் மெல்லக் கற்கும் மாணவன் தான். இப்போதும் படித்துக்கொண்டு இருப்பவன் என்பது மிகப்பெரிய கதை. நானும் இந்த ஐம்பது வயதிலும் வங்கியியல் டிப்புளோமா பரீட்சைக்கு தோற்றுவதற்காக படித்துவிட்டு பரீட்சை மண்டபத்தில் போயிருந்து ஞாபகசக்தி இல்லாமல் முழிபிதுங்க விழிப்பது தனிக்கதை.
அதைவிட,
என்னோடு படித்து ஐந்தாம் வகுப்பில் புலமைப்பரீட்சையில் தோற்றி வெற்றியீட்டிய ஒரு மாணவன் கதை தான் என்னை இன்னமும் சிந்திக்க தூண்டுவதாக இருக்கின்றது.
புலமைப்பரீட்சையில் சித்தியெய்திய அந்த மாணவன்  தொடர்ந்து வந்த பரீட்சைகளிலும் சித்தியெய்தி விஞ்ஞானமாணிப்பட்டம் பெற்று ஆசிரியத்தொழிலும் பெற்றார். ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி பெற்றாரா என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கின்றது.
அவர் மோசமான குடிகாரன் ஆனார். தெருவில் குடித்துவிட்டுதிரியும் கூட்டத்தோடு ஐக்கியமானார். அதுவே அவரது தினசரி வாழ்வாகிவிட்டது. அறிவுலகில் பிரகாசித்த அவரால் தனது ஆளுமையை ஏன் வளர்க்க முடியவில்லை.
குடிகாரனுக்கு திருமணம் வாய்க்குமா? இல்லை
மோசமான குடிகாரனுக்கு குடிப்பதற்கு பணம் வேண்டுமே பழகியவர்களிடம் இருந்து கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அதுவும் இயலாதபோது என்ன செய்வார். பள்ளியில் களவு எடுத்து மாட்டுப்பட்டு இறுதியில் சிறைக்கு சென்றார்.
எனது பாலிய நண்பன் இவ்வாறு பரிதாப நிலைக்குப்போவதற்கு என்ன காரணம். நோக்கற்ற வெறும் போட்டிச்சூழலில் கல்வி ஒன்றே இலக்காக கொண்டு அந்த பிள்ளையை ஆசிரியர்களாகிய பெற்றோர் வளர்த்தமையே  காரணம், படி படி என்று பிள்ளைகளை கண்டித்து வளர்த்தால் அவர்களது மனநிலை எப்படி மேம்படும். எல்லாத்தையும் விட அன்பும் அரவணைப்புமே மாணாக்கரை படிக்கும் காலத்தில் அல்லாவிடிலும் அவனது வாழ்வில் உயர்வை என்றோ உருவாக்கும்.
என்னைப்போல் மெல்லக்கற்கும் மாணவர்களும் என்றோ உயர்வார்கள் என்பது தான் எனது நம்பிக்கையாக இருக்கின்றது.
நான் மட்டுமல்ல எனது இருபிள்ளைகளும் கூட 5ம் வகுப்பில் கல்வி கற்று சித்தியெய்தவில்லை, ஏனெனில் நான் அவ்வாறு அவர்களை கண்டித்து வளர்த்தவனில்லை.

வெள்ளி, 18 அக்டோபர், 2013

புதியது ஏற்கும் புரிவினில்

புரிந்தவரும் இல்லை
தெரிந்தவரும் இல்லை
உணர்ந்தவரும் இல்லை
உய்த்தவரும் இல்லை

நினைப்பது ஒன்று
நடப்பது ஒன்றாய்
நிகழ்வுகள் வாட்டும்
நிதமெனில் என்செய்ய!

அறம் என நினைத்து
இழந்தது அதிகம்
திறம் என யாரும்
புரிந்ததும் இல்லை

ஐம்பது அகவையில்
நிறைவென எதுவுண்டு
அடங்க மறுக்கும்
மனதொடு நானும்.

இயற்கையின் அமைப்பில்
முதுமையின் ஏற்ப்பு
படிமுறை வளர்ச்சியில்
அடங்குதல் முறையே

இனியொரு பிறப்பு
இயலுதல் ஆகும்
புதியது ஏற்கும்
புரிவினில் பூக்கும்

இது விதியென ஏற்கில்
முதுமையும் தகும்
இனிவரும் காலம்
இளையவர்க்கு ஆகும்

ஞாயிறு, 16 ஜூன், 2013

புதிய காலைக்கதிர் வெளியீடு

காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் மாணவர் மன்ற வெளியீடாக புதிய காலைக்கதிர் இதழ் வெளிவந்துள்ளது. அதனது மின்னிதழை காணகீழ்க்காணும் பக்கம் செல்லுங்கள்
http://panipulam.net/manram/kalaikathir/index.html

வெளியீட்டு நிகழ்வைக்காணொளியில் காண
பாகம் 1
http://www.youtube.com/watch?v=3sg5kf4OdXs&nofeather=True
பாகம் 2
http://www.youtube.com/watch?v=3sg5kf4OdXs&nofeather=True
 

ஞாயிறு, 2 ஜூன், 2013

கசிப்பே ஒழியாயோ?

கசிப்பே ஒழியாயோ
கசிப்பே ஒழியாயோ

உண்பதற்கு உணவில்லை
உடுப்பதற்கு உடையில்லை
உழைக்கும் பணமெல்லாம்
உனக்கே கொடுக்கின்றார்
எங்கட அப்பாதான்

கசிப்பே ஒழியாயோ
கசிப்பே  ஒழியாயோ

தங்கச்சிக்குப் பாலில்லை
வாங்கவோ காசில்லை
தாங்கொணா நோயிலை
எங்கட அம்மாதான்
அப்பாவோ எப்போதும்
உன்னோட சகவாசம்

கசிப்பே ஒழியாயோ
கசிப்பே  ஒழியாயோ

ரியூசன் போறதுக்கு
பணமோ எனக்கில்லை
கொப்பிபேனை வாங்கவும்
காசேதும் எனக்கில்லை
அப்பாவோ உன்மேலை
பித்தாகித் திரிகின்றார்

கசிப்பே ஒழியாயோ
கசிப்பே  ஒழியாயோ

ஏசினா அடிக்கின்றார்
அம்மாவைக் கொல்லுகின்றார்
காசுக்காய் அவரோ
கையேந்தி நிற்கின்றார்
நீயின்றி அவராலை
இயங்கவே முடியல்லை

கசிப்பே ஒழியாயோ
கசிப்பே  ஒழியாயோ

முன்னேற வழியில்லை
முக்கினாலும் முடியல்லை
உன்னழிவில் தானே
எமக்கு முன்னேற்றம்
உன்னை அழித்திடவென
எண்ணம் கொள்கின்றோம்

கசிப்பே ஒழியாயோ
கசிப்பே  ஒழியாயோ


1988 இல் காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் பௌர்ணமிக் கலைவிழாவின் போது அன்றைய சிறுமியர் இக்கவிதையினை குழுப்பாடலாய் பாடினர்

காரல் மார்க்ஸ்


முதலாளித்துவ இயல்பை
முழுதாக உரைத்தவன் நீ
தொழிலாள வர்க்கம்
தொய்விலாது வாழ
வழிகண்ட தோழன் நீ!

உலகாயதத்தின் சிறப்பை
உணர்ந்து
அது நன்றென்று அறிந்து
பொருள் முதல்வாதம் தந்த
பொக்கிசம் நீ!

மார்க்சிஸம்
மண்ணில் பதிய
காரணமாயிருந்த நீ
கம்யூனிஸத்தின்
கடிவாளம் ஆனாய்!

சோசலிஸத்தின்
விஞ்ஞான உண்மை
விளக்கியவன் நீ
மாற்றம் என்றோ
மண்ணில் நிகழுமென்று
மார்தட்டி சொன்னவன் நீ!

இன்றந்த மாற்றத்தில்
சோவியத்தும் சீனமும்
மகிழும் வேளையில்-
உன் தத்துவத்தை
உணர்ந்த நாம்
உன்பாதம் படிந்த
சுவடுகளைத் தேடி
யாத்திரை செய்கின்றோம்
யாத்திரையின் முடிவில்
புத்துலகு இன்று
பூத்துக் குலுங்கும்
அந்த
உலகத்தின் உள்ளத்தில்
உன்நாமம் நிறைந்திருக்கும்.

பங்குனி 1984

இந்தக்கவிதை காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் இளைஞர்களும் பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய இளைஞர்களும் இணைந்து நடாத்திய சிறுசுகள் கையெழுத்துச் சஞ்சிகையில் இடம்பெற்றது.

அழ.பகீரதன்

சனி, 1 ஜூன், 2013

மாணவர் முயற்சியாக காலையடி மறுமலர்ச்சி மன்றத்தில்

வெகுவிரைவில் வெளிவர இருக்கின்றது 'புதிய காலைக்கதிர்' கல்வி கலை இலக்கிய மாணவர் சஞ்சிகை.

மறுமலர்ச்சி மன்றத்தின் மாணவர்மன்ற வெளியீடாக, எமது கிராமத்தின் மாணவர்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், சித்திரங்கள் போன்ற பல்வேறு ஆக்கங்களுடன் இது வெளிவரவுள்ளது. மறுமலர்ச்சி மன்றத்தின் மாணவர் மன்றத்தால் ஏற்கனவே 80 களில் வெளியிடப்பட்ட காலைக்கதிர் சஞ்சிகையின் தொடர்ச்சியாக மாதாந்தம் இது வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மென்பிரதி இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்படும் என்ற செய்தியை மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் சபா.தனுஜன் அவர்கள் அறியத்தந்துள்ளார். இம்முயற்சி கைகூடிட கரங்களை இணைப்போம்.

ஞாயிறு, 26 மே, 2013

மறுமலர்ச்சி மன்றம் புதிய நிர்வாக செயற்பாடுகள்

காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் புதிய நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டு அதன் கீழ் இளைஞர்கள் சிறுவர்கள் ஆர்வமுற இயங்கிவருகின்றார்கள். மன்ற மைதானத்தில் பின்பகுதியில் முளைத்திருந்த பற்றைகளை சிரமதானம் மூலம் சுத்தப்படுத்தியிருக்கின்றார்கள் என புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைவர் சு.யாதவன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் மன்றத்தின் மாதாந்த மீண்டெழும் செலவீனங்களாக தற்சமயம் ,ரூ 20000 உள்ளதெனவும் அதனை மன்ற உழைக்கும் அங்கத்தவர்கள் மாதாந்த உதவு தொகையாக ரூ 1000/= செலுத்தவேண்டும் எனவும் மேலும் மன்ற அபிவிருத்திதிட்டங்கள் நிறைவு பெறும்போது இம் மீண்டெழும் செலவீனங்கள் ரூ 100000 வரையில் அதிகரிக்கும் எனவும் இந்த செலவீனங்களை ஈடு செய்ய மன்றத்தின் உள்ளூர் புலம்பெயர் அங்கத்தவர்கள் அபிமானிகள் ஒவ்வொருவரும் ரூ 1000 மாதாந்தம் உதவுதொகையாக வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார், முன்பள்ளியும் உள்ளக அரங்கும் யூலை மாதமளவில் நிறைவுபெறும் என எதிர்பார்ப்பதாகவும் அதனைத் தொடர்ந்து கோயில் முன்னகர்த்தப்பட்டு அமைக்கப்படும் எனவும் அதனுடன் இணைந்ததாக நீர்த்தொட்டியும் திறந்த வெளியரங்கும் அமைக்கப்படும் எனவும் ஒவ்வொரு நாட்டிலும் தேர்ந்த மன்ற அங்கத்தவர்கள் இதன் நிதிசேகரிப்பார்களாக இருப்பார்கள் எனவும் இணைப்பாளர்களாக டென்மார்க் இரத்தினராசா கனடா பாலசுப்பிர மணியம் ஆகியோர் அவர்களுடன் தொடர்பு கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.
மறுமலர்ச்சி மன்றத்தின் கணக்கு விபரம்:

marumalarchchi mantram
kalaiyady
pandetheruppu
current a/c no   9699332
bank   bank of ceylon
swift no    BCEYLKLX
branch code 7010-792
boc chankanai branch

கொடுப்பனவுகள் காசோலை மூலம் மேற்கொள்ளப்படும்.

திங்கள், 15 ஏப்ரல், 2013

மாணவர்களின் கல்வியில்...

மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இன்றைய தினம் எனது ஊரில் உள்ள மறுமலர்ச்சி மன்றத்தில் ஒரு நிகழ்வு இருப்பதாக வரச்சொல்லி சென்றேன். மாணவர்களுக்கான மன்றம் உருவாக்கும் நோக்குடன் அந்த ஒன்று கூடல் அமைந்திருந்தது. அங்கு பல வயதினரான மாணவர்கள் கூடியிருந்தார்கள். அவர்கள் தங்களுக்கு கற்பதற்கான சூழல் இருப்பதில்லை என குறிப்பிட்டதை காணக்கூடியதாக இருந்தது.
உண்மைதான் அயல் வீடுகளில் வானொலிச் சத்தம் அயல் கோயில்களில் ஒலிபெருக்கிச் சத்தம் என்ற பல பிரச்சனைகள் மாணவர்களின் கல்வி ஊக்கத்துக்கு தடைகளாக இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் வீடுகளில் வீடுகளிற்கிடையில் இடம்பெறும் மோதலும் சண்டையும் குடிவெறியும் கும்மாளமும் மாணவர் கல்வியில் ஊக்கத்தை கெடுப்பனவாகவே இருக்கின்றன. பலவீடுகளில் தொலைக்காட்சி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கி தடையாக இருக்கின்றன. மாணவர்களே இதனை ஒத்துக்கொள்கிறார்கள்.
இவற்றை திருத்தி மக்கள் மாணவர்களின் வளர்ச்சிக்கு ஊக்கம் தருவார்களா!
இந்த மாணவர் மன்றம் ஆக்கமுடன் செயற்பட்டு இக்குறைபாடுகளை களைந்து மாணவர்களின் ஆக்கத்திறனுக்கு வழி ஏற்படுத்துகின்றதா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

கனவுகளைக் கலைத்துவிடாதேமுத்தங்கள் பரிமாறிய
முதலிரவின் கனவுகளை
கலைத்து விடாதே!
சித்தத்தை உன்மேல் வைத்தே
தொலைதூர உழைப்பில்
காலம் கழிக்கின்றேன்.
உனது
கனவுகளைச் சிதைத்து விடாதே!
முதல் குழந்தையின்
முகத்தைக் கூடக் காணாது
உங் கென்ன வேலையென்று
கேட்கிறாய்,
அந்தக் குழந்தைக்காய் தான்
உழைக்கிறேன்.
கனவுகளைச் சிதைத்து விடாதே!
மனைவி எனது
மனதைப் புரியாது
பிற நாட்டு
மயக்கில் வாழ்கிறாயே
என வினவுகிறாய்
நீ பூச்சூடி
பொட்டிட்டு
வகை வகையாய்
கலர் கலராய்
உடை யுடுத்தி
நகை யணிந்து
நீ இனிக்க
நான் கண்டு மகிழ
உழைக்கின்றேன்
கனவுகளைக் கலைத்து விடாதே!
அன்றொரு நாள்
அந்தி மாலை வேளையில் 
இச்சை மிக உனை
அணைக்கையில்
சொன்னாயே
சொந்தமாய் வீடிருந்தால்
எப்போதும் சுகந்தான்
என்று!
அதன் பொருட்டே
உழைக்கிறேன்
கனவுகளை சிதைத்து விடாதே!
இப்போதைக்கு மட்டும்
நனவில் அன்றிக்
கனவில் மட்டும் கூடும்
காதல் பறவையே
முதலிரவின் கனவுகளைக் 
கலைத்து விடாதே!

-எனது அப்படியே இரு கவிதை தொகுப்பில் இடம்பெற்ற கவிதை

சித்திரையில் மலர்வோம்

எத்திங்கள் வரினும்
இத்திங்கள் போலாகுமா
சித்திரையில் எங்கள்
சித்தம் மகிழும் அறிவீரோ?
புத்துலகு பூத்தாப்போல்
இத்தரை மகிழும்
வித்தகமும் விஞ்ஞானமும் வளர்ந்து
சித்திக்கின்றது  மண்ணில்
புத்திமிக நாமும் மலர்ந்து
பூத்திடுவோம் இத்தினத்தில்

புதன், 27 மார்ச், 2013

எனது வயதினை ஒத்த அப்பாக்களின் பிள்ளைகளுக்கு

இலங்கை பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கும் குப்பனின் பையனும் ,சுப்பனின் பொண்ணும் ஏன் என் தந்தை சமூகத்தினால் ஒடுக்கப் படுகிறான் என்று என்றாவது சிந்தித்தீர்களா? சாதிக் கொடுமையால் ஒரு கிராமமே எரியூட்டப்பட்டதே அதற்காக போராடினீர்களா ? இன்றைய பொருளாதார வறுமை நிலை ஏன் ஏற்படுகிறது என்று கவலைப்பட்டீர்களா?அதற்கெதிராக ஒருங்கிணைக்கும் உணர்வாளர்களிடம் தேடிச் சென்றிருக்கிறீர்களா?ஏதாவது மாணவர் போராட்டம் தான் செய்து இருப்பீர்களா? அத்தகைய உணர்வாளர்களிடம் "மீடியா" வெளிச்சம் போட்டுக்காட்ட பணம் இல்லை.தேர்தலில் வெற்றி ஈட்டுவர்காக எவ்வளவு பணமும் கொட்டுவதற்கு தி மு க -அ தி மு க தயாராக உள்ளது .புலம் பெயர் நாடுகளில் இருந்து பெறும் பணத்தின் ஒருபகுதியை நெடுமாறனும்,வைக்கோவும்,சீமானும் சுவரொட்டிகளும்,கொடிக்களுமாக காட்டி,உங்கள் கல்வியைக் காவு வாங்கிறார்கள் தனியார் கல்லூரிகளில் உம்மை இணைத்துக் கொள்ள உம் அப்பனும் ஆத்தாவும் படும்பாடு எத்தகையது என்பது பற்றி என்றாவது சிந்தித்தார்களா?இலண்டனில் பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரிக் கட்டணத்தைக் குறைக்கச் சொல்லி ஆர்ப்பாட்டம் நடாத்தினார்கள். ( http://www.youtube.com/watch?v=WHM5nt3SY-o ). நீங்கள்? உங்கள் நாட்டில் இன்றுவரை தீர்க்கப்படாமல் இருக்கும் காஷ்மீர் பிரச்னை பற்றி என்றாவது நினைத்திருக்கிறீர்களா?உங்கள் தேசத்தில் முஸ்லீம் மக்கள் எப்படி நடத்தப் படுகிறார்கள் என்று சிந்தித்து இருக்கிறீர்களா? அது இலங்கைப் பிரச்சனை . அந்த நாட்டில் உள்ள மக்கள் தொகையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஒரு சமூகம் பற்றிய பிரச்சனை.உலகம் முழுவதும் பிரஜாவுரிமையும் ,நிரந்தரக் குடியுருமையும் அகதிகளாக போகும் தமிழ் மக்களுக்குக் கிடைக்கும். அவர்களும் அதைப் பெறுவதற்கு பல்வேறுகாரனங்கள் சொல்லவர்.அதற்காக அவர்கள் தங்களை ஏற்றுக்கொலச்சொல்லி சில காரணங்கள் சொல்லியாக வேண்டும் , அதில் 'இராணுவக் கெடுபிடி' மட்டுமல்ல ,'புலிகளின் பிள்ளைபிடி' பற்றியும் சொல்லி இருந்தார்கள்..ஆனால் இலங்கையில் வாழும் சிங்களவரோ, முஸ்லீம்களோ வீட்டுப் பணியாளர்களாகவோ , கூலித் தொழிலாளர்களாகவோ மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டும் தான் செல்ல முடியும். அதுவும் மிகக் குறைந்த சதவிகிதத்தினரே! இதே போலவே உங்கள் நாட்டில் இருந்து கள்ளத் தோணிகள் ,வடக்கத்தையான் என்று யாழ்ப்பாணத் தமிழர்களால் அழைக்கப் படும் மலையக தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வும் இருக்கிறது .அவர்கள் இன்றுவரை அடிப்படை வசதிகள் அற்று வாழ்ந்துகொண்டிருக்கும் நிலை பற்றிய உணர்வு உங்களுக்கு உண்டா? நீங்கள் வாங்கிக் கொடுக்கத் துடிக்கும் ஈழத்தில் அவர்களின் நிலை என்ன? அதே நாட்டில் தமிழ் பேசும் முஸ்லீம் இனம் ஒன்று 90'ம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பினால் ஒரு மணி நேர அவகாசத்தில் அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் 500 ரூபா பணம் மாத்திரம் எடுத்தபடி வெளியேறச் சொல்லி துப்பாக்கி முனையில் வெளியேறச் செய்தது உங்களுக்குத் தெரியுமா? .பாரம்பரியமாக வாழ்ந்த அந்தப் பகுதிகளில் இருந்து பெண்களும்,குழந்தைகளும் போக்கிடம் இன்றி ,கால்போன திக்கில் சென்று கேள்விக்குறி ஆகினர்.அந்த மக்களுக்கு தமிழைத் தவிர வேறு மொழி தெரியாது இருந்தது .ஈழம் வாங்கிக் கொடுக்கப் போராடும் மாணவர்களே , இந்த ஈழத்தில் மேட்டிமைத் தன்மையும்,சுயநலமும் , சந்தர்ப்ப வாத பிழைப்பு நடத்தும் தமிழ் அரசியல் தலைவர்கள் முஸ்லீம் மக்களுக்கான அலகு கொடுப்பார்களா? அவர்களை தமிழர்களாக ஏற்றுக்கொள்வார்களா? மலையகத் தமிழனை இந்தியன் என்று சொல்வார்களா?
தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த லயோலா கல்லூரி மாணவர் ஷண்முகப்பிரியன் என்கிற செம்பியன் என்ற மாணவத் தலைவனிடம் போராட்டம் பற்றிக் கேட்டபோது அரசியல் தெளிவற்ற பேச்சும்,திக்கித் திணறி அவர் சொல்லும் பதில்களும் வேதனையாக இருக்கிறது. உங்களை அரசியல் வாதிகள் பயன்படுத்துவது புரியவில்லையா? கல்லூரிகளை புறக்கணிப்பது "ஜாலி " என்று எடுத்துக்கொள்கிறீர்களா? ஜெனீவா முடிந்துவிட்டது , தேர்தலும் முடிந்துவிடும் . பின்னர் உங்கள் நிலைப்பாடு என்ன? அடுத்த ஜெனீவா நேரம் ஏதாவது தேர்தல் வந்தால் தான் இந்தக் காட்சிகள் எல்லாம் மீண்டும் அரங்கேறும்.ஆனால் நீங்கள் இழந்த கல்வி? காலம்? நீங்கள் ஏற்படுத்திய மனக் காயங்கள் ? வியட்னாமில் "அமெரிக்கப் படைகள் அழிவில் ஈடுபட்டபோது, அவர்களுக்கெதிராக உலகின் பெரும் பகுதி மக்கள் தங்கள் தேசங்களில் முழங்கினார்கள் .அமெரிக்கனே வெளியேறு "என்றோம். 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஒலித்திருக்க வேண்டிய குரல் தீர்வு காண வேண்டியதை விடுத்து ,எங்கோகூட்டிச் செல்கிறது.
மகிந்த அரசும், பௌத்த திணிப்பு தேரர்களும் அம்பலப்படுத்தப் படவேண்டும். வர்க்க பேதம் எப்படிக் களையப்படவேண்டுமோ ,அதேபோல இனவாதமும்,மதவாதமும் கோலோச்ச அனுமதிக்கக் கூடாது.அது அவர்களின் இனத்தினால் மட்டுமேஉள்வாங்கப்பட்டு ,வெளிப்படவேண்டும் . அதற்க்கு தேச ஒற்றுமை அவசியம்.பிரிவினைகளை விதைப்பதன் மூலம் ,நாம் எம் தேசத்தின் சகோதரத் தன்மையை இழக்கின்றோம் . வெறுப்புகளையும்,பழிவாங்கும் உணர்வையும் ஊட்டுகிறோம் . இன்று எம் நாட்டில் இருந்து UN இனுடைய அமைப்புகள் பல உத்தம் முடிந்துவிட்டதாகச் சொல்லி வெளியேறி சூடான்,சிரியா என்று நகர்கிறார்கள்.அரசியல் அதிகாரமும்,பதவி வெறியும் ,சொத்து சேர்க்கையும் அடக்கப்படவேண்டும். மக்கள் நலம் சார்ந்த அரசு அமைவதற்கு திறந்த மனத்துடன் ஒன்றுகூட வேண்டும். இதனை முன்னிறுத்தியே எமது செயற்பாடுகள் அமைய வேண்டும்!
மனித உரிமை வாதிகளான சிலர் மரணதண்டனையை இல்லாதொழிக்கப் போராடுகிறார்கள்.நீங்கள் 'மகிந்தாவை தூக்கில் தொங்க விடவேண்டும் என்கிறீர்கள்.நீங்கள் மரணதண்டனையை ஆதரிக்கிறீர்களா?மகிந்தவின் மரணத்தின் பின் தீர்வு வருமா ? மரணத்தை நிறைவேற்ற நீங்கள் யாரை அழைக்கிறீர்கள்?வருபவன் என்ன நோக்கத்திற்காக செயல் படுகிறான்? எதைச் சொல்ல வருகிறீர்கள்? 'வால்மார்ட் " அந்நிய முதலீட்டை நிறுத்தச் சொல்லி ,உள்ளூர் உற்பத்தி விநியோகம் பற்றியெல்லாம் பேசும்போது ,பக்கத்து வீட்டு பிரச்னை என்று முகம் திருப்பிய உங்களுக்கு வந்த அடிப்படைக் கோவம் எது? பிரபாகரனின் மகன் இறந்தது தானா? இதையே 4 வருடங்களுக்கு முன்னர் பொங்கி எழுந்திருந்தால் ,உயிர்ச் சேதம் ஆவது தடுக்கப்பட்டிருக்கும் .இன்றைய தேவை என்ன? நீங்கள் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் ,இலங்கை என்கிற தேசத்தினுள் இனவாதத்தை தூண்டிவிட்டதே மிச்சம். தலைவன் மகனுக்காக நீங்கள் வீதியில் இறங்கிப் போராடி ஈழம் பெறப் போவதாகச் சொன்னால் ,உன்னை நினைத்து நீயே வேதனைப் படும் நிலைதான் எஞ்சும். குழந்தைகளைப் போராளியாக்கி,துவக்கையும் ,சயனைட்டையும் கழுத்தில் கட்டித் தூக்கிவிடும் கூட்டமும்,பெண்கள்,கர்ப்பிணிகள் என்று சுட்டுத் தள்ளும் கூட்டமும், இங்கு பிரச்சனையே இல்லை ,சுபீட்சம் பொங்குகிறது என்போரும் செறிந்து வாழும் இதே நாட்டில் , கல்வியறிவு குறைந்த ,அழிந்துபோகும் இனமான வேடர் இணைத்துத் தலைவனைப் பற்றி என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை.
மே 24, 1992 " ல் Sunday times " என்கிற இலங்கைப் பத்திரிகையில் ,இலங்கையில் தம்பான எனும் ஊரில் வசித்த ஆதிவாசிகளின் தலைவாரன திஸாஹாமி பேட்டி ஒன்றைக் கொடுத்திருந்தார் அதில் அவர் "வெளி இடத் தொடர்பற்று வாழும் எம் சமூகத்தின் அடையாளங்கள் சிதையாத வகையில் அவர்கள் வாழ்வின் மேன்மைக்காக வாழ்வேன் "என்றவர் ,தனது 104 வயதில் 1998 இல் இறந்தார். எளிமையான சமநிலை வாழ்வை நடத்தி சமூகத்துக்கு முன்மாதிரியாக வாழ்ந்தவர். அவர் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் தமது இனத்தவர் மத்தியில் ஆற்றிய உரையில், நான் இறந்ததும் பெரும்வைபவம் நடத்துவதற்கும் தோரணம் கட்டுவதற்கும் இக் காட்டிலுள்ள உள்ள ஒரு மரத்தையேனும் வெட்டவேண்டாம். கொடிகளைத் தொங்கவிட்டு பெரும் அழிவை ஏற்படுத்த வேண்டாம். எமது பாரம்பரிய மரபுகளுக்கேற்ப எனது இறுதிக் கிரியைகளை செய்யுங்கள். எனக்காக இக்காட்டு மரங்களை வெட்டுவது, எமது பரம்பரைக்கு செய்யும் பெரும் குற்றமாகும் என்று கூறினார். இதற்க்கு மேல் என்ன சொல்லி புரிய வைக்க?

சனி, 23 பிப்ரவரி, 2013

கேளாய், பெண்ணே!

விட்டு விட்டு
விழுகின்ற
சொட்டு நீருக்காய்
குழாயின் கீழ்
சொண்டு நீட்டி
காத்திருக்கும்
குருவி போல்
இடைக் கிடை
அன்பு காட்டும்
குடிகாரக் கணவனுடன்
குடித்தனம் பண்ணுகிறாய்!

பெத்த அன்னை
தந்தை பார்த்து
சொத்துக் கொடுத்து
தந்த சொந்தம்
எட்டி அடித்தால்
என்ன செய்வது
வாழ்தல் கடன்
எங்கும் இப்படித்தான்
ஆறுதல் சொல்லுகிறாய்!

இராணுவ வதையாய்
இரணமாய் உடம்பு
ஆயினும் நீயோ
 ஆக்கிய அவனே
மணாளன் என
மகிழ்ச்சி கொள்கிறாய்
மூஞ்சை வீங்கிக்
கண்ணீர் சிந்தினும்
கணவன் அவனே
உரிமை உண்டென
எண்ணம் கொள்கிறாய்!

ஏதென்று சொல்வேன்
உன் அறிவீனம்!
அடிமையாய் போவதற்கோ
திருமண உறவு?
இணையாய் வாழ்வதற்கே
ஒப்பந்த மணமே!
உதவியாய் இருப்பதற்கே
உறவென்ற அமைப்பு,
உதைப்பதற்கு அன்று!

அடிக்கின்ற கையை
தடுத்து நிறுத்து!
அன்பின் தத்துவத்தை
எடுத்துக் கூறு!
முடியாது என்றால்
முறித்து விடு
உறவை!

1988

அப்படியே இரு தொகுப்பில் இடம்பெற்ற கவிதை

-அழ.பகீரதன்

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

மீண்டும் களிப்போம்

காற்று வீசும்
கங்குல் போதில்...
மேற்கு வானில்
பொழுது சாய்ந்த பின்
பிறைநிலா வளர்வதும்
முழுநிலா தேய்வதும்
கண்டு மகிழ்ந்து
கதைத்திருந்த நாட்கள்...

கிணற்றுக் கட்டிலும்
கோயிற் திண்ணையிலும்
தேர்முட்டிப் படிகளிலும்
நிலவொளியிலும் கும்மிருட்டிலும்
கூடியிருந்த நாட்கள்...

தொலைவில்
பனி கொட்டும் பூமியில்
குச்சறையில்
தனியனாய் அன்றி இணையாய்
உடல் போர்த்தி வாழும்
நண்பா,
நினைவில் நிழலாடுகிறதா
அந்த நாட்களின் களிப்புக்கள்!

பத்துப் பதினைந் தென்று
கூடியிருந்தோம்
குந்தியிருந்தோம்
படுத்திருந்தோம்
சாய்ந்திருந்தோம்...
பல்விடயம் அலசித்
தர்க்கப்பட்டோம்
வயது வேறுபாடின்றி
வளர்ந்திருந்தது நம் நட்பு.
அயல் ஏசும் அளவிற்கு
உச்சக் குரலில் உரையாடினோம்.
ஒன்றாய்ச் சேர்ந்து பாடினோம்.
அந்த-
இனிமை நிறைந்த நாட்கள்
இன்னமும் நினைவில் உள்ளதா?

ஜேர்மன்....  டென்மார்க்...
கனடா... சுவீஸ்...
சவூதி...  ஓமான்... குவைத்...
என ஒவ்வொருவராய் அகல
மிஞ்சிய நாம்
இருவரோ... மூவரோ...

ஆயினும் கூடுகிறோம்
பாடுதல் இலையெனிலும்
பேசுகிறோம்.
தர்க்கப்படல் இலையெனிலும்
விவாதிக்கின்றோம்.
நிலவின் ஒளியையும்
காற்றின் வருடலையும்
அனுபவித்தே வாழ்கிறோம்
மண்ணின் மணத்தை நுகருகிறோம்.

ஆயினும் உன் நிலை...
குச்சறையில்
கூடிக் களிக்கப்
பள்ளிக்கால நண்பரின்றி
பயனற்ற நாட்களைக் கடத்தி
பயனுக்காய் உழைக்கும் நண்ப,
அந்த நாட்களின் மகிழ்வுகள்
வேண்டி மனது இரந்தால்
வா-
மீண்டும் களிப்போம்.

1991

எனது அப்படியே இரு கவிதைத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதை

சனி, 16 பிப்ரவரி, 2013

பெண்களை புடவை கட்டுமாறு நிர்ப்பந்திக்கும்...

அலுவலகங்களில் பெண்கள் புடவை (சாறி) கட்டிக்கொண்டு வருமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாகவே இந்தப் புடவைகட்டுமாறு நிர்ப்பந்திக்கப்படுவது பார்க்கப்பட வேண்டும். இதற்கு சொல்லப்படுகின்ற வார்த்தை அலங்காரமாக தமிழர் கலாசாரம் என்ற மூடுமந்திம் கற்ப்பிக்கப்படுகின்றது.
தமிழர் கலாசாரம் எதுவென்பது கேள்விக்குறியானது. கண்ணியமான உடுப்பு உடுத்திக்கொள்ளவே அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் விரும்புகின்றார்கள். ஆனாலும் எந்தவித த்திலும் கண்ணியமாக கருதப்பட முடியாத புடவையானது பெண்ணுக்குத்திணிக்கப்படுகின்றது. பெரும்பாலான இளம் பிள்ளைகள் சல்வார் கமிஸ்  இடுப்போ எடுப்போ தெரியாத வண்ணம் அணிந்துகொள்ளவே  விரும்புகின்றார்கள். ஆனால்யாழ்ப்பாண ஆணாதிக்கவாதம் இடுப்பும் எடுப்பும் காட்டும் புடவையையே தமிழ் கலாசாரம் என்று விதந்தோதுகின்றது.
திருமணமான பெண்கள் தமது வசதி கருதி விரும்பி புடவை கட்டிக்கொள்ளலாம். ஆட்சேபனை இல்லை. ஆனால் இளம் பெண்கள் இந்த புடவையை தினமும் வரிந்து கட்டி மடிப்பு மடித்து அதுவும் மோட்டார் சயிக்கிளில் வரவேண்டும் என்று ஏன் தான் கரைச்சல் கொடுக்கின்றதோ இந்த ஆண்வர்க்கம். ஆண்வர்க்க நலன்கள் என்ன அபத்தமானதா?


வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

மனிதம் எங்கே?

தெருவில் இறங்கி
மனிதத்தை தேடுகிறேன்
உருவில் அன்றி
உணர்வில் காணேன்!

விரக்தியின் விளிம்பில்
தெரிவது உலகம்
பூசலின் அழிவில்
பூரிக்கும் மனிதர்!

இனங்கள் குலங்கள்
மனங்கள் குளங்கள்
தினங்கள் மறையும்
சனங்கள் அழியும்!

பிணமோ நாட்டில்
குணமோ ஏட்டில்
பணமோ ஆட்சியில்
கணமோ சிரிக்கும்!

தூங்கும் மனிதம்
விழிக்கும் நாளில்
களிக்கும் உலகம்
தெளிக்கும் இன்பம்

-இது இளமையில் கிறுக்கியது

அழ. பகீரதன்

புதன், 13 பிப்ரவரி, 2013

புத்துலகொன்று...
புதிதாய் மலர்ந்த புத்துல கொன்று
அதிலே இன்பம் தித்திப்பு கண்டு
வதிவார் ஒன்றாய் கூடியவர் நின்று
சாதித்து காண்பார் சரித்திரம் ஒன்று!

கொலைவெறி கொண்ட கொடுஞ் சிலையர்
நிலைகொள் அடிமைத் தனஞ் செய்வார்
புலையரும் தீயரும் கொடியருங் கள்வரும்
இலையிந்த இன்னல் இலாத உலகினில்!

தீங்கெளா நெஞ்சம் தீரமுடை உள்ளம்
எங்கெனும் காணா அன்பு மனம்
ஓங்கிடு முழைப்பு கொண்டிடு மனிதர்
தேங்கியே வாழ்வர் எழில்மிகு உலகில்!

பாதகம் இல்லைப் பணிவும் இல்லை
சாதகம் பார்த்துச் சாதிப்ப தில்லை
பேதமை நெஞ்சம் கொண்டவ ரில்லை
சாதனை செய்தே சரித்திரம் படைப்பர்!

சாதிகள் இன்றி வகுப்புக ளின்றி
சகலரும் சமம் சரிநிகர் என்று
வர்க்கம் ஒழித்து வசந்தம் காண்பர்
சொர்க்கம் இதுவே வேறுலக மில்லை!

கொடுமை இல்லாக் கொள்கை வாழ்வு
விடுதலை கொண்ட விவேக வாழ்வு
கெடுதல் இன்றி வளர்ந்தே வரும்
புத்துலகு ஈதில் புதுமை வாழ்வு!

அழ.பகீரதன்

சனி, 9 பிப்ரவரி, 2013

ஏனுந்த கலாசாரம்...?

உண்மைகள் கசக்கத்தான் செய்யும்
நன்மைகள் விளையும் என்ற
எதிர்பார்ப்பில் தான் எல்லாம்...
யாழ்ப்பாணத்துக் கலாசாரம்
யாழ்ப்பாணத்துக் கலாசாரம்
என்று வாய் கிழியக் கத்தல்
எதிர் வீட்டில் கலியாணம்
எடுப்பாய் காட்டி செய்தனர்
என்றால்
தன்வீட்டில் தன்பிள்ளைக்கு
இன்னும் அதிகம்
எடுப்பாய் காட்டச்
செய்வதுவோ
எங்களது கலாசாரம்?
முத்துப் பந்தலும்
மூக்கில் விரலை வைக்கும்
தடபுடல் வீடியோப் பதிவும்
உடன் வருமோ ஆயுளுக்கு
கடன் பட்டு
சோக்கு காட்டிப்போட்டு
வீட்டில் வரிசையாய்
கடன் கொடுத்தவர்
நின்றால்
அக்கம் பக்கம் என்ன நினைக்கும்
பெருமை எதுவென அறியாப்
பெருமையுள் ஆட்பட்டு
ஏனிந்த ஆட்டம்
பாட்டம் கூத்து...
சோக்குக் காட்டி
மணம்முடித்து வைத்து
உமக்குள்
மகிழும் பெற்றோரே
கூடி இணைந்த
மணமக்கள் தமக்குள்
கூடி  மகிழ்வு கூட்டவென்று
ஒரு ஐம்பதினாயிரம்
கைக்குள் திணித்து
கனிமூன் சென்றுவருக
என்று வழியனுப்பி வைக்கும்
பழக்கம் உமக்குள் உள்ளதுவோ...
இல்லை.. இல்லை.... என்றால்
ஏனுந்த கலாசாரம்...?

அழ. பகீரதன்திங்கள், 4 பிப்ரவரி, 2013

சங்கதி கேளீரோ?

ஊரிலுள தனவந்தர்
உவந்து தந்த பணத்தில்
அருகமைந்த காணி
ஆலயத்தின் உரித்தாயிற்று
தேரிளுக்க நிலமது
போதாதெனத் தானோ
விசாலமாக நிலத்தை
விரித்து விட்டால்
பார்வைக்கு கோயில்
எடுப்பாய் தெரியுமெனவோ
அடுக்காய் பணம்
கொடுத்தார் தனவந்தர்
அது சரிதான்
அவரது கொடைவள்ளல் தன்மையது
மெச்சத் தக்கது தான்.
நிலத்தைப் பெற்ற
நிர்வாகத்துக்கோ
ஏகப்பட்ட குசி
கூட்டம் போட்டனர்
இந்தப் பெரிய நிலம்
இப்படியே விட்டால்
ஊரிலுள சிறுவர்
கெந்திப் பிடிக்க வருவர்
கிரிக்கற் கூட விளையாடுவர்
நாடி வந்த இளைஞர்
கழகம் அமைத்து பந்து உருட்டுவர்
கண்ட சாதிப் பயலைச் சேர்ப்பினம்
பெண் பிள்ளைகள்
தெருவில் சென்றுவர
கரைச்சல் கொடுப்பினம்
விடக் கூடாது
விரைவாய் மண்டபம் ஒன்று அமைப்பம்
என்ற தீர்மானம் ஏகமனதாய் எடுத்தாச்சு
அன்னதான மண்டபம் எழும்புது பாருங்கோ
என்ன தம்பி அன்னதானம் சிறந்ததன்றோ
ஏன்காணும் இப்பிடி எதிர்த்துக் கதைக்கிறீர்!
சொன்னால் குறை விளங்காதையுங்கோ
இந்தத் தானம் இரப்பவர்க்கன்று
சொந்த வீடும் சொகுசு வாழ்வும்
பெற்று வாழும் பெரியவர்கள்
மடிப்பு குலையா
பட்டு வேட்டி சால்வையோடு
இட்டு உண்ணும் கூட்டுத்தானண்ணை
இருந்தாலும் இயலாதவர் வந்து
உண்ணுவினந்தானே?
இருக்கும் இருக்கும்....
ஆனாப் பாருங்கோ
அன்ன தான மடம் என்று சொன்னால்
அள்ளிப் பணம் வழங்கமாட்டாரென்று
திருமண மண்டபம் அல்லோ
கட்டப்போறமென்று
புலம்பெயந்த சனத்திட்ட
கறக்கிறாங்கள் பணத்தை!ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

வியப்பாய் ஒரு விழா

நான் படித்த ஆரம்பப் பாடசாலை பண்ணாகம் வடக்கு அ மி த க பாடசாலை. இதனை நாங்கள் காலையடிப் பள்ளிக்கூடம் என்று தான் சொல்லுவோம். அந்தப் பள்ளிக்கூடத்தில் ஒரு நிகழ்வு இருப்பதாக சிறுவர்கள் சிலர் ஒரு அழைப்பிதழ் தந்துவிட்டு போனதாக வீட்டில் சொன்னார்கள். அந்தப் பாடசாலைக்கு அந்த நிகழ்வுக்கு எனது சின்ன மகனை கூட்டிக்கொண்டு போனேன். அங்கே பார்த்தபோது பலசிறுமிகள் சிறுவர்கள் வயோதிபர்கள் பெண்கள் என பலர் அந்த மண்டபத்தில் கூடியிருந்தார்கள். எனக்கு நன்கு தெரிந்த ஒருவர். அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர். எனது விருப்புக்குரியவர் என்று கூட சொல்லலாம். அவர் பெயர் தனுசன். அவர் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். நான் உள்ளே நுழைந்து இரண்டாவது வரிசையில் அமர்கின்றேன். மேடையில் வீற்றிருந்தவர்கள் தென்மாராட்சி கல்வி வலய பிரதி ப் பணிப்பாளர் திரு சுந்தரசிவம் அவர்கள். அவரும் இந்த பாடசாலையில் தான் ஆரம்பக் கல்வியை கற்றவர். மற்றவர் யாழ்ப்பாண தொழில் நுட்பக் கல்லூரியில் வணிகப் பிரிவுக்குப் பொறுப்பாக இருப்பவர் திரு நற்குணேஸ்வரன் அவர்கள். அவரும் இந்தக் கல்லூரியில் தான் ஆரம்பக் கல்வியை கற்றவர். இன்னொருவர் வட்டுக்கோட்டை  ஆரம்ப பாடசாலை ஒன்றில் அதிபராக இருக்கும் திரு சுப்பிரமணியம் அவர்கள். அவர் இந்தப் பாடசாலையில் படித்தவரோ என்பது எனக்கு சரியாக ஞாபகமில்லை. அவர் இந்த ஊரைச் சேர்ந்தவர். இவர்களுடன் பாடசாலையின் அதிபரும் உடன் இருந்தார்.
தொடர்ந்து நிகழ்வுக்குத்தலைமை தாங்கிய அதிபர் சுப்பிரமணியம் அவர்கள் உரையாற்றுகின்றார். அவர் உரையை செவிமடுத்துக்கொண்டிருந்த எனக்கு வியப்பாக இருக்கின்றது. பல இடங்களிலும் இவரது உரையை நான் செவிமடுத்திருப்பினும்  இன்று அவர் உரையாற்றியவிதமும் அவரிடமிருந்து வெளிவந்த கருத்துக்களும் எனக்கு வியப்பினை ஏற்படுத்துவதாக இருந்தன.
அவர் உரையாற்றும்போது இந்த நிகழ்வை நடாத்தும் தனுஜன் பற்றி சிறப்பாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து விழாவை தொகுத்து வழங்க வந்த தனுஜன் அவர்கள் இங்கு இவர் குறிப்பிட்ட தனுஜன் தான் மட்டுமல்ல என்றும் அது தான் சார்ந்த மறுமலர்ச்சி மன்றத்தையும் மன்றத்தில் உள்ள இளைஞர்களையும் தான் குறிக்கும் என்றும் இந்த நிகழ்வு நடந்துகொண்டிருப்பதற்கு உள்ளும் வெளியும் காரணமாக இருப்பது அவர்கள் தான் என்றும் அவர்களை இளைஞர்கள் என்று சொல்வதை விடவும் சிறுவர்கள் என்று குறிப்பிடுவது தான் சாலச்சிறந்தது என்று பொருள் பட பேசினார்.
நான் எனது கண்களை அங்கும் இங்கும் விட்டு நோட்டமிடுகின்றேன்.
எனக்கு இன்னுமொரு வியப்பு. எனது மூத்த மகன் துவீபன் கையில் ஒரு வீடியோ கமறா போன்றதொரு கருவியுடன் நிற்கின்றார். அவர் வைத்திருந்த கருவியில் மேடையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வீடியோ காட்சியாகத் தெரிகின்றன.
எனக்கு முன்வரிசையில் இருந்த சுதாகரனிடம் நான் வினவுகின்றேன். இந்த நிகழ்வினை நேரடியஞ்சலாக இணைய மூலம் பார்க்கலாம் என்ற அறிவிப்பு வந்ததே என!
ஓம் அதைத் தான் துவீபன் செய்துகொண்டிருக்கின்றார் என அவர் பதிலளித்தார்.
விழாவில் சுந்தரசிவம் அவர்கள் பேசும் போது ஆன்மீகம் பற்றி விரிவாக பேசியது இன்னொரு வியப்பாக இருந்தது. இவருக்குள்  இவ்வளவு அறிவாற்றலா என்று சிறிது வியந்தேன்.
தேசிய கலை இலக்கியப் பேரவை கலைக் குழு வழங்கிய நாடங்கள் கூட இந்த ஊர் மக்களுக்கு வியப்பானதாகவே இருக்கும்.
மேலும் ஒரு வியப்பு இதில் பேசிய நற்குணேஸ்வரன் அவர்களின் பேச்சு.அவரது பேச்சும் வழமைக்கு மாறாக சிறப்பானதாக இருந்தது. அவரது பேச்சில் சிறுவர்கள் ஓடிவிளையாடுவதற்கு பதிலாக கணனியில் கைத்தொலைபேசியில் வீடியோவில் கேம் விளையாடும் அவஸ்தையைப் பற்றி பேசினார்.
இறுதியாக நன்றியுரை ஆற்றிய நிவர்சன் கூட திட்டமிட்டு தனது நன்றியுரையை எழுதி சிறப்பாக ஆற்றியமை வியப்பை தந்தது.
முடிவில் நூலக உருவாக்கத்திற்கான காட்சிப்படுத்திய புத்தகங்களை பார்த்தேன். ஓ... சிறுவர்கள் வாசிப்பதற்காக இவ்வளவு புத்தகங்களா.. யாழ்ப்பாணத்திலோ அல்லது கொழும்பிலோ உள்ள புத்தகக் கடைகளில் இந்த புத்தகங்கள் எல்லாம் கிடைக்கக்கூடியதாக இருந்திராதே என எண்ணி சுதாகரனிடம் வினவியபோது அவர் இவை இந்தியாவில் இருந்து பெறப்பட்டவை என்று கூறினார்.
யாழ்ப்பாணத்தில் எந்த ஒரு ஆரம்ப பள்ளியிலும் இந்தளவிற்கு ஒரு நூலகம் அமைக்கும் முயற்சியை ஆரும் செய்திருக்கமாட்டார்கள் என்றே நான் கருதுகின்றேன். இந்த இளைஞர்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த நோர்வே பண் தமிழ் கலை பண்பாட்டு கழகத்தினரை பாராட்டாமல் இருக்கமுடியுமா... என்ன?

நோர்வே பண் தமிழ் கலை பண்பாட்டுக் கழகத்தின் நிதி அனுசரணையில் யா பண்ணாகம் வடக்கு அ.மி.த.க பாடசாலையில் (காலையடிப் பள்ளிக்கூடம்) சிறுவர் நூலகம் அமைப்பதற்கான உபகரணங்களும் நூல்களும் வழங்கும் நிகழ்வு!!

சனி, 2 பிப்ரவரி, 2013

இந்தியாவில் இருந்தபோது எழுதிய கவிதை ஒன்று...

நான் இந்தியாவில் சென்னையில் அப்போது படித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனது இருப்பிடத்திற்கு பல நண்பர்கள் ஊரிலிருந்தும் வருவார்கள். போர் நடந்த காலம் ஆதலால் அவர்களில் பலர் வெளிநாடு சென்று வாழ்வதற்காகவே  புலம்பெயர்ந்திருந்தார்கள். அவர்களது நோக்கம் ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்வதே ஆகும். அவர்களது அந்த பயணம் ஏனோகூடிய சீக்கிரம் கைகூடிவர  வில்லை. அப்போது அவர்களில் சிலர் தமது மனைவியின் கடிதத்தை என்னிடம் வாசித்துச் சொல்லச்சொல்லுவார்கள். அவர்களுக்கு வாசிக்கவும் எழுதவும் போதிய அறிவு இல்லாததால் எனக்கு அந்த பணியை சுமத்துவார்கள். அந்த அனுபவத்தில் நான் கற்பனையில் எழுதிய கவிதை தான் இது.

காதலிக்கு கடிதம்

நிலம் நோக்கி எனை நோக்கும்
நீள் விழியாளே
விழிப்பார்வை நீக்காது
பேரூந்தில் ஏற்றியெனை
அனுப்பி வைத்தாயே
தொலைதேசம் சென்று
பெரும் பொருள் சேர்க்க
என்று!
இன்னும் நான்
இந்திய மண்ணில் தான்
இந்தியாவும் வெளிநாடுதான்
சொந்தமாய் பணம்
சேர்க்க வழியிலை எனிலும்
சொந்த நாட்டின்
துக்கங்கள்...
பீதியில் தேயும் ஆயுள்..
மனச்சஞ்சலங்கள்
இங்கெனக்கு இல்லை!
எனிலும்
பருவத்தால் நிறைந்த
உன்னழகைப் பார்த்திருக்கவும்
பெருகும் அன்பில்
பொழுது சாயும் வரையில்
கிடுகுவேலி இடையிருக்க
பேசி யிருக்கவும்
முடியா நிலைதான்
முழுசாக எனை
துன்பத்தில் ஆழ்த்துகிறது.
என் சிகப்பழகியே
மாதகல் கரையடைய
சென்னையில் இருந்தும்
இராமேஸ்வரம் செல்கின்ற
நண்பர்களைப் பார்க்கையில்
எனக்குள்ளும் ஓரேக்கம்
உனை வந்து பார்க்க!
துணிவெனக்கு இருந்தாலும்
துயரேதும் நிகழ்ந்தால்
பொறுக்காது உன்மனம்
என்பதனால்
அடக்குகிறேன் என்
ஆசைகளை!
வரும்போது
மாலையிட்டு உனை
அழைத்து வந்திருக்கலாம்
குடும்பமாய் இங்கு
வந்தவர் பலர்
நாமும் அப்படி
கடல் கடந்து
கலந்தினித்து
இருந்திருக்கலாம்!
நாட்டுக்கும் எனக்கும்
தொடர்பு வேண்டும்
என்பதாலோ என்னவோ
நீ உங்கு நான் எங்கோ
வாழ வேண்டிய தியற்கை
எப்போது தானோ
உனது ஆசைக் கனவுகளும்
எனது
எதிர் கால
இலட்சியங்களும்
நிறை வேறுங்
காலம் வரும்?
காத்திரு
விரைவில் எங்கள்
எண்ணங்கள் நிறைவேறும்.

1987
அழ. பகீரதன்

வியாழன், 31 ஜனவரி, 2013

எப்போதோ எழுதிய கவிதை


தனிமை ஏக்கம்

செந்தீப் பிளம்பாய்
ஞாயிறு மறையும்
அந்திப் பொழுதில்
நீள்பிரிவில் உன்னை
விடேனென விளம்பி
மீள்வேன் ஈராண்டில்
என உறுதி தந்து
பேரூந்தில் ஏறிப்
பிரிந்தாயே தலைவா!

ஓரிரு நாட்கள்
கொழும்பில் இருந்து
முகிலூ டறுத்து
வான்வழி செல்லும்
வானூர்தி தன்னில்
அமர்ந்தே சென்றாய்
அமெரிக்கா அருகில்
கனடாவில் நீயிருக்க
கண்கலங்கி நானிங்கே!

பனிமிகப் பொழியும்
குளிர்ந்த பூமியின்
குதூகல நினைவையும்
பணம்பல கிடைக்கும்
பாங்கையும் எழுதினாய்
பக்கத்தில் நீயின்றி
ஏக்கத்தில் நானிங்கு
வாடிடும் வாட்டத்தை
எப்படி அறிவாய்!

மாலையில்  உந்தன்
மார்பினை நினைந்தே
இளையள் என் நெஞ்சம்
இரந்தே நிற்கும்
நிலையினை உணரா
நீமிக உழைத்த
பணத்தால் மனமது
குளிருமென நினைக்கிறாய்
நீயின்றி நாளோடுமோ?

கடினம் மிகப்பட்டு
அடிமையாய் நீயுழைத்து
உறக்கம் குறைத்து
உணவினைச் சுருக்கி
எப்போதோ பிறக்கும்
மகளுக்காய் உழைக்கிறாய்
இப்போதே இருக்கும்
இளையள் என்கனவை
உணர்ந்து வாராயோ!

சீவியம் செய்வதற்கு
சிறிதச்சம் இருப்பினும்
சித்திமாமி சோதரங்கள்
உறவுடன் வாழ்தலில்
உள்ளம் நிறையும்
உண்மை தெரிந்தும்
உங்குநீர் இருக்கின்றீர்
ஏழ்மை உளதெனிலும்
எனதன்பு நிறைவன்றோ?

இலையுதிர்ந்த கிளைகளில்
இரைவேண்டிக் கரைகின்ற
காக்கையினம் போலிங்கு
காகிதத்தை வேண்டிக்
காத்திருப்பேன் காலையில்
மாலைவர வருந்தி
தினம் மெலிந்து வாடுமென்
ஏக்கத்தைப் போக்கீரோ
பக்கத்தில் வாரீரோ?


அழ பகீரதன்

செவ்வாய், 15 ஜனவரி, 2013

காலையடி கிராமத்தில் கவிதை நூல் அறிமுகம் நிழல் படங்களாய்...

அழ. பகீரதனின் இப்படியும்… என்ற கவிதை நூலின் மூன்றாவது அறிமுக நிகழ்வு அவரது கிராமத்தில் அவரது தெருவில் அமைந்துள்ள மறுமலர்ச்சி மன்றத்தில் தைப்பொங்கல் தினத்தன்று நடைபெற்றது. இவ்விழாவில் கம்யூனிஸ்ட் தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் அவர்களின் துணைவியார் திருமதி வள்ளியம்மை அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றி விழாவில் பிரதி வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும். விழாவில் அறிமுகவுரையை சட்டத்தரணி சோ. தேவராஜா அவர்களும் மதிப்பீட்டுரையை கலாநிதி ந. இரவீந்திரன் அவர்களும் ஆற்றினார். கலாநிதி ந. இரவீந்திரன் அவர்கள் தான் பிறந்த ஊரில் இருபது வருடங்களிற்கு பிறகு மன்றத்தில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.


திங்கள், 14 ஜனவரி, 2013

படித்ததில் பிடித்தது நன்றியுடன்
பாலியல், பாலுறவு, பாலியல் உணர்வுகள், பாலியல் செயற்பாடுகளில் திருப்தி மற்றும் திருப்தியின்மை போன்றவை எமது சமூகத்தில் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. நாலு பேர் மத்தியில் பேசுவதற்கு அசூசைப்படுகிறோம். தூஸணை வார்த்தைகள் போல  உச்சரிக்க சங்கோசப்படுகிறோம்.

பாலுணர்வானது உயிரினங்களின் வாழ்வின் தொடர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் இன்றிமையாத அம்சமாக விளங்குகிறது. இருந்தபோதும் அவற்றைப் பேசா மொழிகளால் மறுதலிக்கிறோம்.

அதிலும் முக்கியமாக வயது முதிர்ந்தவர்களின் பாலியல் உணர்வு பற்றிய எண்ணமே எமது சமூகத்தில் அறவே கிடையாது எனலாம். பாட்டா பாட்டியுடன் நெருங்கிப் பேசினால் கிழட்டு வயதில் செல்லம் கொஞ்சிறார் என நக்கல் அடிக்கிறோம்.


அம்மப்பாவிற்கு தலையிடி என்பதால் ஆதூரத்துடன் நெற்றியைத் வருடிவிடும் அம்மம்மாவின் செயல் பிள்ளைகளுக்குச் சினமாக இருக்கிறது. 

'தேவார திருவாசகம் ஓதிக் கொண்டு அல்லது வேதமொழிகளைப் படித்துக் கொண்டு மூலையில் கிடக்க வேண்டிய ஜன்மங்கள் அவர்கள்' போன்ற எண்ணமே மேலோங்கியிருக்கிறது.

ஆனால் மேலை நாடுகளில் முதியவர்களின் பாலியல் உணர்வுகள், ஈடுபாடுகள் பற்றிய ஆரோக்கியமான ஆய்வுகளும் விவாதங்களும் நடைபெறவே செய்கின்றன.

அப்படியான ஒரு ஆய்வு The University of California, San Diego School of Medicine and Veterans Affairs ல் நடைபெற்றது.


பாலியல் ரீதியான திருப்தியை அவர்களில் கண்டறிவதற்கானது இந்த ஆய்வு 806 வயோதிபப் பெண்களின் 40 வருட மருத்துவப் பதிவேடுகளை ஆதாரமாகக் கொண்டு செய்யப்பட்டது. அவர்களுடைய சராசரி வயது 67 ஆக இருந்தது. 63 சதவிகிதமானவர்களுக்கு மாதவிடாய் நின்று விட்டது.

ஆச்சரியப்பட வைக்கும் சில முடிவுகள்

அந்தக் கிழங்களில் பாலியல் பற்றிய ஆய்வா எனக் கேட்பவர்கள் மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படும்படியாக சில முடிவுகள் இருந்தன.
 • கணவன் பாலியல் ரீதியான ஆர்வமும்; செயற்திறனும் உள்ளவராயின், அவர்களில் 50 சதவிகிதமானவர்கள் கடந்த 4 வாரங்களிடையே உடலுறவு வைத்ததாகக் கூறினர்.
 • அவர்களில் 67 சதவிகிதமானவர்கள் உடலுறவின் உச்ச கட்டத்தை எட்டியதுடன் அதில் திருப்தியும் அடைந்தனர். கணவனின் விந்து வெளியேற்றம் தங்களது உச்சகட்டத்திற்கு முதலே நிகழ்ந்துவிடுகிறது என பெரும்பாலான இளம் பெண்கள் கவலைப்படும் இன்றைய நிலையில் 67 சதவிகிதமான முதிய பெண்கள் திருப்தியடைந்தமை ஆச்சரியப்பட வைத்தது.
 • அவ்வாறு திருப்தியடைபவர்கள் பலர் இருந்தபோதும் 40 சதவிகிதமான பெண்கள் தங்களுக்கு ஒருபோதும் பாலியல் ஆர்வம் இருக்கவில்லை என எதிர்மாறாகக் கூறினார்கள். மேலும் 20 சதவிகிதமான பெண்கள் தங்களுக்கு மிகக் குறைந்தளவே ஆர்வம் இருந்தது என்றார்கள்.
 • 80 வயதிற்கு மேற்பட்ட பெண்களில் 50 சதவிகிதமானவர்கள்; தங்களுக்கும் கூட அடிக்கடி பாலியல் உந்தல், உறுப்பில் ஈரலிப்புத்தன்மை,  உச்சகட்ட உணர்வு ஏற்பட்டதாகக் கூறினர். இருந்தபோதும் பாலியல் ஆர்வம் குறைவாகவே இருந்ததாகக் கூறினர்.

ஆனால் சாதாரண பெண்களில் பாலியல் ஆர்வமே உடலுறவிற்கு இட்டுச் செல்கிறது என்பதை நாம் அறிவோம். ஆர்வம் இல்லாதபோதும் இவர்கள் உடலுறவு கொள்வதற்கு காரணம் என்ன?

தனது கணவன் அல்லது பாலியல் பங்காளியுடனான உறவை உறுதிப்படுத்தவும் தொடருவதற்காகவுமே அவ்வாறு ஆர்வம் இல்லாதபோதும் கூட உறவு கொள்கிறார்கள் என ஆய்வாளர்கள் எண்ணினார்கள்.
 • பொதுவாக வயது முதிரும்போது பாலியல் திருப்தி ஏற்படுவது குறைவு என்றே நம்பப்படுகிறது. ஆனால் இந்த ஆய்வானது வயது முதிர முதிர பாலியல் திருப்தி அதிகம் ஏற்படுவதாகக் கூறுகிறது. அதிலும் 80 வயதிற்கு மேட்பட்டவர்களில் கிட்டதட்ட எப்பொழுதும் ஏற்படுவதாகக் கூறுகிறது.
 • மிக முக்கியமான விடயம் பாலியல் திருப்தியடைவதற்கு புணர்ச்சி எப்பொழுதும் அவசியமாக இருந்திருக்கவில்லை. தொடுகை, அன்பாகத் தட்டிக்கொடுத்தல், சரசலீலை, போன்ற எல்லாவித உள்ளார்ந்த நெருக்க நிலைகளும் திருப்தியை அவர்களுக்குக் கொடுத்தன.
இதிலிருந்து தெரிவதென்ன? உணர்வுரீதியான மற்றும் உடல் ரீதியான நெருக்கமானது பாலுறவின் உச்சநிலையை அனுபவிப்பதை விட முக்கியமானதாக இருக்கலாம். 

எனவே பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுகிறார்களா, செயற்பாட்டில் குறைபாடுகள் இருக்கின்றனவா போன்றவற்றை ஆராயும் அணுகுமுறைக்குப் பதிலாக அவர்களின் உளத் திருப்தி மையமாக கொண்ட அணுகுமுறையே அதிக நன்மை பயப்பதாக இருக்கலாம். 

மற்றொரு ஆய்வு

2007ல் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வும் வயதானவர்களின் பாலியல் செயற்பாடுகள் தொடர்வதை உறுதிப்படுத்தியது. 57 வயதிற்கும் 85 வயதிற்கும் இடைப்பட்ட 3000 வயோதிப அமெரிக்கப் பெண்களில் ¾ பங்கினர் ஏதாவது ஒரு வகை பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தியது.

பெண்களில் மட்டுமின்றி ஆண்களும் முதிரும்போது
 • உடல் உள ரீதியான பாலியல் ஆற்றாமைகள் அதிகரிக்கின்றன,
 • முன்னரைபோல அடிக்கடி ஈடுபட முடிவதில்லை
 • ஆயினும் பாலியல் உணர்வும் ஆர்வமும் குறைவதில்லை.
 • பாலியல் பங்காளி இன்னமும் உயிருடன் இருப்பதுடன், செயற்திறன் குறையாதிருந்தால் பாலியல் செயற்பாடுகள் குறைவதில்லை என்றது.
ஆற்றாமைகள் அதிகரிக்கின்றன

இவர்களது பாலியல் செயற்பாட்டு முறைகளாவன ஏனைய வயதினர் செய்வதை ஒத்ததே. பெரும்பாலனவர்கள் வழமையான யோனியுறவு கொண்டார்கள். சிலர் மாறி மாறி வாய் புணர்ச்சி செய்தார்கள். இன்னமும் சிலர் தற்புணர்ச்சி (masturbation) செய்ததும் உண்டு.

செய்ய வேண்டியது என்ன?

எமது சமூகம் இனப்பாகுபாடு இன ஒடுக்குமுறை ஆகியவை பற்றி வாய் கிழியப் பேசுகிறது. ஆனால் முதியவர்களின் பாலியல் உணர்வுகளை மதிப்பதில்லை. ஜடங்கள் போலவே கணிக்கிறார்கள். சருமம் சுருங்கியபோதும் அவர்களது உணர்வுகளும் மனமும் அன்றலர்ந்த மலர்போல மென்மையாகவே இருப்பதை உணர்வதில்லை. அவர்களது பாலியல் உணர்வுகளைப் புரிவதில்லை. 

அவர்களது பாலியல் உணர்வுகள் மற்றும் செயற்பாடுகள் ஆகியவற்றிற்கு
 • அங்கீகாரமும் ஆதரவும் வழங்குவதில்லை.
 • அல்லது அவை பற்றி சிந்திக்கவோ பேசவோ முயல்வதில்லை.
 • அதற்கான சந்தர்ப்ப வாய்ப்புகளை அவர்களுக்கு அளிப்பதில்லை. உங்கள் குழந்தையை இரவில் அவர்களுடன் தூங்கவிட்டால் உங்களால் சுகம் காண முடியும். ஆனால் பாட்டன் பாட்டிகளுக்கு பேசவும், தழுவவும் அருகிருக்கவும் தனிமையானது எட்டாக் கனியாகிவிடும்.

இது தவறான அணுகுமுறை. அவர்களின் உணர்வுகளை மதியுங்கள். அவர்கள் அவ்வாறு ஈடுபடுவதற்கான சூழலானது எமது கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் குறைவு. கூட்டுக் குடும்பமாக இல்லாவிடினும், முதிர்ந்த பெற்றோர் பிள்ளைகளது வீட்டில் தங்கியிருப்பதற்கான தேவைகள் அதிகரிக்கின்றன. 
 • இத்தகைய நிலையில் அவர்களது தனிப்பட்ட உணர்வுகளுக்கும் செயற்பாட்டிற்கும் உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள்.
 • அவ் விடயத்தில் அவர்களது செயற்பாடுகளை ஏளனமாகப் பார்ப்பதையும், குற்றம் குறை சொல்வதையும் நிறுத்துங்கள்.
 • இது பற்றிய வெளிப்படையான கலந்துரையாடலை சம்பந்தப்பட்டவருடன் தனிப்பட்ட முறையில் ஆரம்பியுங்கள்.
 • அவர்களது வாழ்வில் வசந்தம் மீண்டும் மலரட்டும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), MCGP (col)
குடும்ப மருத்துவர்

பொங்கல் நாளில் காலையடியில்… • மறுமலர்ச்சி மன்றம், காலையடி, பண்டத்தரிப்பு.
 • அழ பகீரதனின் 'இப்படியும்......' கவிதை நூல் அறிமுக நிகழ்வு

  இடம் : மறுமலர்ச்சி மன்றம், காலையடி, பண்டத்தரிப்பு.

  காலம் : 14.01.2013 (திங்கள்) பி.ப. 3.30

  எமது ஊரின் சமூக முன்னேற்ற செயற்பாட்டாளரும், இலங்கைத் தமிழ்க் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவருமான அழ.பகீரதனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான 'இப்படியும்.......' நூலின் மூன்றாவது அறிமுக நிகழ்வு மறுமலர்ச்சி மன்றத்தினால் நடாத்தப்படுகின்றது.

  இந்நிகழ்வில்

  தலைமை : சு.யாதவன் (உபதலைவர் மறுமலர்ச்சி மன்றம்)

  வாழ்த்துரை : திரு சிறீஸ்கந்தராஜா (தலைவர் மறுமலர்ச்சி மன்றம்)

  அறிமுக உரை : சட்டத்தரணி சோ. தேவராஜா

  திறனாய்வு உரை : கலாநிதி ந. இரவீந்திரன் (சிரேஸ்ட விரிவுரையாளர் - தர்க்காநகர் கல்வியியற் கல்லூரி )

  ஏற்புரை : அழ. பகீரதன்


ஞாயிறு, 13 ஜனவரி, 2013

பொங்கல் வாழ்த்து
பொங்குக பொங்கல்
தங்குக இன்பம்
மங்குக இன்மை
ஓங்குக உண்மை

நிறைக செழிப்பு
மறைக வறுமை
வளர்க பொதுமை
வாழ்க புதுமை

தைத்திருநாளாம்
உழவர் நாளில்
மேன்மை எய்துக
மனிதம் எங்கும்

வழிபிறக்கும் தையில்
யுகம் தோன்றும்
மனிதம் பொதுமையில்
மலரும் மீண்டும்.