இந்தியாவில் இருந்தபோது எழுதிய கவிதை ஒன்று...

நான் இந்தியாவில் சென்னையில் அப்போது படித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனது இருப்பிடத்திற்கு பல நண்பர்கள் ஊரிலிருந்தும் வருவார்கள். போர் நடந்த காலம் ஆதலால் அவர்களில் பலர் வெளிநாடு சென்று வாழ்வதற்காகவே  புலம்பெயர்ந்திருந்தார்கள். அவர்களது நோக்கம் ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்வதே ஆகும். அவர்களது அந்த பயணம் ஏனோகூடிய சீக்கிரம் கைகூடிவர  வில்லை. அப்போது அவர்களில் சிலர் தமது மனைவியின் கடிதத்தை என்னிடம் வாசித்துச் சொல்லச்சொல்லுவார்கள். அவர்களுக்கு வாசிக்கவும் எழுதவும் போதிய அறிவு இல்லாததால் எனக்கு அந்த பணியை சுமத்துவார்கள். அந்த அனுபவத்தில் நான் கற்பனையில் எழுதிய கவிதை தான் இது.

காதலிக்கு கடிதம்

நிலம் நோக்கி எனை நோக்கும்
நீள் விழியாளே
விழிப்பார்வை நீக்காது
பேரூந்தில் ஏற்றியெனை
அனுப்பி வைத்தாயே
தொலைதேசம் சென்று
பெரும் பொருள் சேர்க்க
என்று!
இன்னும் நான்
இந்திய மண்ணில் தான்
இந்தியாவும் வெளிநாடுதான்
சொந்தமாய் பணம்
சேர்க்க வழியிலை எனிலும்
சொந்த நாட்டின்
துக்கங்கள்...
பீதியில் தேயும் ஆயுள்..
மனச்சஞ்சலங்கள்
இங்கெனக்கு இல்லை!
எனிலும்
பருவத்தால் நிறைந்த
உன்னழகைப் பார்த்திருக்கவும்
பெருகும் அன்பில்
பொழுது சாயும் வரையில்
கிடுகுவேலி இடையிருக்க
பேசி யிருக்கவும்
முடியா நிலைதான்
முழுசாக எனை
துன்பத்தில் ஆழ்த்துகிறது.
என் சிகப்பழகியே
மாதகல் கரையடைய
சென்னையில் இருந்தும்
இராமேஸ்வரம் செல்கின்ற
நண்பர்களைப் பார்க்கையில்
எனக்குள்ளும் ஓரேக்கம்
உனை வந்து பார்க்க!
துணிவெனக்கு இருந்தாலும்
துயரேதும் நிகழ்ந்தால்
பொறுக்காது உன்மனம்
என்பதனால்
அடக்குகிறேன் என்
ஆசைகளை!
வரும்போது
மாலையிட்டு உனை
அழைத்து வந்திருக்கலாம்
குடும்பமாய் இங்கு
வந்தவர் பலர்
நாமும் அப்படி
கடல் கடந்து
கலந்தினித்து
இருந்திருக்கலாம்!
நாட்டுக்கும் எனக்கும்
தொடர்பு வேண்டும்
என்பதாலோ என்னவோ
நீ உங்கு நான் எங்கோ
வாழ வேண்டிய தியற்கை
எப்போது தானோ
உனது ஆசைக் கனவுகளும்
எனது
எதிர் கால
இலட்சியங்களும்
நிறை வேறுங்
காலம் வரும்?
காத்திரு
விரைவில் எங்கள்
எண்ணங்கள் நிறைவேறும்.

1987
அழ. பகீரதன்

கருத்துகள்

தேவன் மாயம் இவ்வாறு கூறியுள்ளார்…
சொல்லொனாத் துயரத்தை வரிகளில் வடித்துள்ளீர்கள்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது