ஞாயிறு, 16 மே, 2010

விரித்த பாடப்புத்தகம்

முன்னாளில் தலைமை வாத்தி
கையில் பிரம்பொடு
கண்ணில் கடுமையொடு
நடைபோட்ட தன்மை
கண்ணுக்குள் நிற்கிறது.

இன்றோ
துணைக்கோ எவருமின்ற
இருக்க ஓர் வீடின்றி
உறவினர்
படலைகள் திறக்கின்ற பாங்கு!

என்னே நிலைமை!

பிள்ளைகள் ஆறு
மூத்தது பெண்
சொந்த வீட்டுச் சொகுசொடு
மாநகரில் குடியிருப்பு
இவர்வழிப் பேரரோ
இலண்டன் கனடா எனப்பல நாடு!

இரண்டாவது மகளோ
கட்டிக் கொடுத்த பெண்
இந்தியாவிலே என்பதால்
அங்கேயே இருப்பு.

மூன்றாவது!
கொஞ்சம் வசதிக் குறைவு
கொடுத்த சீதனவீடு வளவு
வித்துச் சுட்டு
யாழ் நகரில்
வாடகை வீட்டில் குடித்தனம்!

ஆம்பிளைகள் மூன்று
மூத்தவர்
பிள்ளை குட்டிகளொடு
லண்டன் மாநகரில்
பெருவாழ்வு!
அடுத்தவர் டொக்குத்தர்
அருமை மனைவி பிள்ளைகளொடு
அமெரிக்காவில்-
சொந்த வீடும் இருக்கும்!

இளையவர் ஜேர்மனியில்
கொழும்பில் இருக்கும்
குடும்பத்தை அழைக்கலாம்.

எனில்
பின் ஏன் வாத்தி
நடுத்தெருவில் நிற்றல்!

எண்பது வயது
மனைவி இருக்கும் வரையில்
நல்லாய்த் தான் இருந்தார்
அடக்கி ஆண்டு!

இன்றோ
இளைய மகளுடனும்
இருப்புக் கொள்ளாமல் அலைதல்
ஏன்?

பாசமூட்டிப் பிள்ளைகளை
வளர்த்த தில்லையா?

வாத்தி என்ற நினைப்பில்
அடித்தும் வதைத்தும்
சொன்னது சட்டமென நடந்தாரா?

பிள்ளைகள்
உயர்வுக்கு
உறுதுணையாய் இருந்ததில்லையா
பாரபட்சம் காட்டினரா
பிள்ளைகளில்!

சுயநலமே பெரிதெனச்
சுகித்திருந்தாரா
பேப்பரும் கையுமாய்
வட்டியும் கணக்குமாய்
வாழ்ந்தாரா!


விதியின் கோலமா
போரின் விளைவா
பூகோள கிராமம் எனும்
புது மாற்றம் இதுதானா?

எவ்வாறெனிலும்
அன்னவரின் வாழ்வு
எல்லார்க்கும்
விரித்த பாடப்புத்தகம்!


தாயகம் ஏப்ரல் 15 2002