சனி, 16 ஜனவரி, 2010

எண்ணாரோ ?

ஏற்றம் மக்கள் வாழ்வில்
இல்லா உயர்வில் திளைத்து
தெரியப் போர்ச்சுவடே இன்றி
ஊர்  தெருக்களில்     நீள
உருளுந்தியில் இளையோர் சவாரி
அருகருகே மனைகள்  எழுந்தே
மினித்திரை அரங்காக ஆகும் விந்தை
தொலை கோபுரதரிசன நோக்கின்றி
அண்ணாந்து பார்க்க ஆலயம்
வெளிநாடு இருந்து வந்தவர்
நட்பில் கலக்க சிந்தையில்
பேப்பர் கட்டுக்களுடன் நிதிகேட்டு
வீட்டில் விடியமுன் கியூ வரிசை
வாழ்வின் அர்த்தங்கள் தொலைத்து
தொலைதூர உழைப்பின்
இன்னலில் அவர்கள்
அண்டி வாழ்வார் இங்கோ
செல்வச்செழிப்பில் சிலிப்பர்
பெண்டிர் இடை வளைத்து ஆடும்
ஆட்டம் ஒளிர் இல்லத்து அரங்கில்
பிள்ளைகளோடு பார்த்துகளிக்கும்
ஏற்றம் இல்லா உயர்வில்
வாழ்வார் சொல்லொன்று கேட்கார்
தேறார் தெரியார் பொதுமை காணார்
எல்லார் நலன் மேம்பட தடுத்து
வையகத்து வளம் நமக்கெனவே
குவித்து செழிக்கும் வல்லார்..
உலகமயமாதலாய் செழித்து
வளர் முதலாளியம்
வீழ்த்தி
மனிதம் காத்திட
முயல எண்ணாரோ  ?

அழ பகீரதன்

வியாழன், 14 ஜனவரி, 2010

ஊருக்குப் பொதுவாய்

கூடி வாழ்ந்த காலம்
தேடி நண்பர் உற்றாருடன் பேசி மகிழ்ந்திருந்த காலம்
நேற்றுப் போலிருக்கிறது
ஆற்றல் எமக்குள் கூட்டி உதவி ஒத்தாசை புரிந்து
உறவுடன் மகிழ்ந்த காலம்
பணம் இல்லை பல வசதி இல்லை
குணம் ஒன்றே எம் சொத்தாய்
கூடி வாழ்ந்திருந்தோம்
குடிசையில் மரநிழலில் குளிர்மையில் குதூகலித்தோம்
ஒரு நேரச் சோறேனினும் வயிறார சூழ்ந்திருந்துண்டோம்
எம் உறவுகள் பற்றி எம் பிரச்சனை பற்றி
எம் ஏழ்மை பற்றி எம் அடிமை நிலை பற்றி
எம் உரிமை பற்றி நிலவொளியில் பேசியிருந்தோம்
இன்றோ
தேச விடுதலை யுத்தம் ஓய்ந்த காலம்
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் சிலர் உய்ந்தார்
குடிசைகள் வீடுகள் ஆயின
எல்லைகள் காட்ட மதில்கள் எழுந்தன
உள்வீட்டில் நலம் விசாரிக்காது வானொலியில் நலம் கேட்கும் கோலம்
சக்தி வாந்தி எடுக்கும்
மேட்டுக்குடிகளின் சின்ன வீட்டு பிரச்சினைகள்
எங்கள் வீட்டு சின்னத் திரைக்குள் எங்கள் பேச்சாயின
உறவுகள் கூடுதல் இல்லை
உரிமைகள் பற்றிப் பேசுதலில்லை
உறவுகள் ஏழ்மை நிலையில்
அக்கறை ஏதுமின்றி சொத்துச் சேர்க்கும் மும்மரம்
ஏழைகள் பாடு அவர் படு
ஊருக்குப் பொதுவாய் கோயில் வான் முட்ட எழுந்தால் போதும்
ஏற்றம் எமக்கெனும் எண்ணம் !!

அழ பகீரதன்

புதன், 13 ஜனவரி, 2010

தகுமோ ?

அன்பு கொண்டால் உலகில்
இன்பம் உண்டு என்று கண்டு
சின்ன உள்ளம் உவகை மேலிட
தன்னந் தனிய வாழும் தனிமை குலைக்க
இன்பம் நிறைந்த அந்திப் போழுது
என்னே கொடுமை !
ஊர் கூடிற்று
பேர் அறியாப் பேதை
ஊர் தெரியா உரவோன்
நேர் கண்டார் நவின்றார்
நில் என்றார் நடவென்றார்
சொல் என்றார் ; எடு
பொல் என்றார்
எல்லார் நிலை ஒன்றே , நன்று !
கூடி வாழக் குடில் இருந்த
காலம் ஒன்றுண்டு
நாடி உறவு வர
விருந்துண்டு மகிழ்ந்ததுண்டு
தேடி வருவார் இன்றி
வீடிருக்கும் இன்றோ
வீட்டில் கொலுவிருத்திய

காட்சிப் பெட்டகத்தில்
வேசை ஆடுவாள்
ஆடவர் உடலோடு
உடல் உரசி!
பேதை பெதும்பை
மங்கை நங்கை
இளம்பெண் பேரிளம் பெண்
அன்னை ஆச்சியோடு
பார்த்து மகிழ்ந்திடில்
இது தகுமெனக் கொளலோ


அழ பகீரதன்