வியப்பாய் ஒரு விழா

நான் படித்த ஆரம்பப் பாடசாலை பண்ணாகம் வடக்கு அ மி த க பாடசாலை. இதனை நாங்கள் காலையடிப் பள்ளிக்கூடம் என்று தான் சொல்லுவோம். அந்தப் பள்ளிக்கூடத்தில் ஒரு நிகழ்வு இருப்பதாக சிறுவர்கள் சிலர் ஒரு அழைப்பிதழ் தந்துவிட்டு போனதாக வீட்டில் சொன்னார்கள். அந்தப் பாடசாலைக்கு அந்த நிகழ்வுக்கு எனது சின்ன மகனை கூட்டிக்கொண்டு போனேன். அங்கே பார்த்தபோது பலசிறுமிகள் சிறுவர்கள் வயோதிபர்கள் பெண்கள் என பலர் அந்த மண்டபத்தில் கூடியிருந்தார்கள். எனக்கு நன்கு தெரிந்த ஒருவர். அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர். எனது விருப்புக்குரியவர் என்று கூட சொல்லலாம். அவர் பெயர் தனுசன். அவர் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். நான் உள்ளே நுழைந்து இரண்டாவது வரிசையில் அமர்கின்றேன். மேடையில் வீற்றிருந்தவர்கள் தென்மாராட்சி கல்வி வலய பிரதி ப் பணிப்பாளர் திரு சுந்தரசிவம் அவர்கள். அவரும் இந்த பாடசாலையில் தான் ஆரம்பக் கல்வியை கற்றவர். மற்றவர் யாழ்ப்பாண தொழில் நுட்பக் கல்லூரியில் வணிகப் பிரிவுக்குப் பொறுப்பாக இருப்பவர் திரு நற்குணேஸ்வரன் அவர்கள். அவரும் இந்தக் கல்லூரியில் தான் ஆரம்பக் கல்வியை கற்றவர். இன்னொருவர் வட்டுக்கோட்டை  ஆரம்ப பாடசாலை ஒன்றில் அதிபராக இருக்கும் திரு சுப்பிரமணியம் அவர்கள். அவர் இந்தப் பாடசாலையில் படித்தவரோ என்பது எனக்கு சரியாக ஞாபகமில்லை. அவர் இந்த ஊரைச் சேர்ந்தவர். இவர்களுடன் பாடசாலையின் அதிபரும் உடன் இருந்தார்.
தொடர்ந்து நிகழ்வுக்குத்தலைமை தாங்கிய அதிபர் சுப்பிரமணியம் அவர்கள் உரையாற்றுகின்றார். அவர் உரையை செவிமடுத்துக்கொண்டிருந்த எனக்கு வியப்பாக இருக்கின்றது. பல இடங்களிலும் இவரது உரையை நான் செவிமடுத்திருப்பினும்  இன்று அவர் உரையாற்றியவிதமும் அவரிடமிருந்து வெளிவந்த கருத்துக்களும் எனக்கு வியப்பினை ஏற்படுத்துவதாக இருந்தன.
அவர் உரையாற்றும்போது இந்த நிகழ்வை நடாத்தும் தனுஜன் பற்றி சிறப்பாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து விழாவை தொகுத்து வழங்க வந்த தனுஜன் அவர்கள் இங்கு இவர் குறிப்பிட்ட தனுஜன் தான் மட்டுமல்ல என்றும் அது தான் சார்ந்த மறுமலர்ச்சி மன்றத்தையும் மன்றத்தில் உள்ள இளைஞர்களையும் தான் குறிக்கும் என்றும் இந்த நிகழ்வு நடந்துகொண்டிருப்பதற்கு உள்ளும் வெளியும் காரணமாக இருப்பது அவர்கள் தான் என்றும் அவர்களை இளைஞர்கள் என்று சொல்வதை விடவும் சிறுவர்கள் என்று குறிப்பிடுவது தான் சாலச்சிறந்தது என்று பொருள் பட பேசினார்.
நான் எனது கண்களை அங்கும் இங்கும் விட்டு நோட்டமிடுகின்றேன்.
எனக்கு இன்னுமொரு வியப்பு. எனது மூத்த மகன் துவீபன் கையில் ஒரு வீடியோ கமறா போன்றதொரு கருவியுடன் நிற்கின்றார். அவர் வைத்திருந்த கருவியில் மேடையில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வீடியோ காட்சியாகத் தெரிகின்றன.
எனக்கு முன்வரிசையில் இருந்த சுதாகரனிடம் நான் வினவுகின்றேன். இந்த நிகழ்வினை நேரடியஞ்சலாக இணைய மூலம் பார்க்கலாம் என்ற அறிவிப்பு வந்ததே என!
ஓம் அதைத் தான் துவீபன் செய்துகொண்டிருக்கின்றார் என அவர் பதிலளித்தார்.
விழாவில் சுந்தரசிவம் அவர்கள் பேசும் போது ஆன்மீகம் பற்றி விரிவாக பேசியது இன்னொரு வியப்பாக இருந்தது. இவருக்குள்  இவ்வளவு அறிவாற்றலா என்று சிறிது வியந்தேன்.
தேசிய கலை இலக்கியப் பேரவை கலைக் குழு வழங்கிய நாடங்கள் கூட இந்த ஊர் மக்களுக்கு வியப்பானதாகவே இருக்கும்.
மேலும் ஒரு வியப்பு இதில் பேசிய நற்குணேஸ்வரன் அவர்களின் பேச்சு.அவரது பேச்சும் வழமைக்கு மாறாக சிறப்பானதாக இருந்தது. அவரது பேச்சில் சிறுவர்கள் ஓடிவிளையாடுவதற்கு பதிலாக கணனியில் கைத்தொலைபேசியில் வீடியோவில் கேம் விளையாடும் அவஸ்தையைப் பற்றி பேசினார்.
இறுதியாக நன்றியுரை ஆற்றிய நிவர்சன் கூட திட்டமிட்டு தனது நன்றியுரையை எழுதி சிறப்பாக ஆற்றியமை வியப்பை தந்தது.
முடிவில் நூலக உருவாக்கத்திற்கான காட்சிப்படுத்திய புத்தகங்களை பார்த்தேன். ஓ... சிறுவர்கள் வாசிப்பதற்காக இவ்வளவு புத்தகங்களா.. யாழ்ப்பாணத்திலோ அல்லது கொழும்பிலோ உள்ள புத்தகக் கடைகளில் இந்த புத்தகங்கள் எல்லாம் கிடைக்கக்கூடியதாக இருந்திராதே என எண்ணி சுதாகரனிடம் வினவியபோது அவர் இவை இந்தியாவில் இருந்து பெறப்பட்டவை என்று கூறினார்.
யாழ்ப்பாணத்தில் எந்த ஒரு ஆரம்ப பள்ளியிலும் இந்தளவிற்கு ஒரு நூலகம் அமைக்கும் முயற்சியை ஆரும் செய்திருக்கமாட்டார்கள் என்றே நான் கருதுகின்றேன். இந்த இளைஞர்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த நோர்வே பண் தமிழ் கலை பண்பாட்டு கழகத்தினரை பாராட்டாமல் இருக்கமுடியுமா... என்ன?

நோர்வே பண் தமிழ் கலை பண்பாட்டுக் கழகத்தின் நிதி அனுசரணையில் யா பண்ணாகம் வடக்கு அ.மி.த.க பாடசாலையில் (காலையடிப் பள்ளிக்கூடம்) சிறுவர் நூலகம் அமைப்பதற்கான உபகரணங்களும் நூல்களும் வழங்கும் நிகழ்வு!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது