ஆண்டைகளின் அடிமைகளாய்




இய பேசிக்குள் இயலுமாகின்ற
இளமைகள் கரையும் நாட்கள்
தயவை நாடும் மனங்களைத்
தவிர்த்திட வலை விரிப்பு
சேய்மையில் கண்டவர் யாரும்
நட்பெனக் கொள்ளாக் காலம்
உட்பொதிந்து இயபேசிக்குள்
பொத்தானுக்குள் சினேகம் நாடத்
தூயவை என எதுவுமிலையென
காய்கின்ற மனதொடு இருப்பு
சூழ்ச்சிக்குள்  மாய்ந்த நிலையெனில்
வேவுபார்த்திட நம்மை நாமே
காட்டிக் கொடுத்திட கற்றோம் எனில்
மதிக்கின்ற வகையினில் யார்க்கும்
பொறுப்பில்லா நிலையிலென்ன விதைப்பு
சேதிகள் பெறுக்கிட நாட்கள்
சேதிகளாய் விரிந்திட கூடுமெனில்
சேதிகளாய் ஆவதில் தான் தவிப்பு
சேதியே சேதியை தேடிடத்
தேவைகள் சேதியை நோக்கியே
யாரிடம் யாருக்காய்
யாரொடு யாராகி
யாரொடு யார் மோதி
யாருக்காய் தேசமென
யாருக்கும் ஓர் தேசமென
தேசமே விமோசனமென
தேசத்தை தேசம் மேவ
தேசியம் தேடி குறுந்தேசியம் பேசி
தேசங்கள் கடந்த தேசியம் காண
ஓர் நாடு இரு தேசமென
ஓர் மதத்திற்கே தேசமென மதமே ஆழுமென
ஒடுக்கப்பட்ட சாதிகளின் தேசியமென
விடுக்கப்படுகின்ற தாள்களில் எங்கும்
பாசம் நாசம் பண்பு நாசம்
உறவு நாசம் உயிர்மை நாசம்
வேசம் கூடும் பொய்மை மேவும்
கோசம் மாய கொள்கை மாய
மீட்பர் வருவர் கேட்பர் குறைகள்
ஏந்திடும் கைகள் ஏதிலியாய் எங்கும்
மாய்ந்தவர் பெயரில் மாயக் கனவுகள்
உயிர்ப்பர் உயிரோடு இருப்பர்
உயிரழியா உடம்பொடு நாளையும்
வேய்ந்தவர் வருவர் வேதனை தீர்த்திடவென
யார்க்கு யார் காவலர்
யார்க்கு யார் மீட்பர்
நஞ்சு கலந்த தேசத்து நிலங்கள்
நஞ்சே கலந்த விஞ்சும் பொதிகள்
நஞ்சே விளையும் கலவையில் உணவுகள்
நஞ்சை உண்டே  செத்தே போகிட
தந்திரம் வியாபாரமாய் வியாபாரம் தந்திரமாய்
தேசம் ஆண்டபரம்பரையின் ஆணைப்படி
ஆண்டைகளின் அடிமைகள் மிடிமையில்
ஆண்டைகளின் அடிமைகள் அறியாமையில்
ஆண்டைகளின் அடிமைகள் இறப்புக்குள்
ஆண்டை்களின் அடிமைகள் இழப்புக்குள்
ஆண்ட பரம்பரையே ஆழுவரெனில் நாம்
தோண்டி அறிந்து மூத்தகுடி
தமிழ் குடியென அறைவதில்
பெருமிதம் கொண்டே மாய்வோம்
போக்கு மாற்றிச் சிந்தியாதிருந்திடில்!

அழ பகீரதன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது