தனிமைக்குள்...



ஆருக்காகப் பிறந்தேன்
ஆரோடு உறவானேன்
ஆரெவரையோ மணமுடித்தேன்
ஆரையெல்லாம் பெற்றெடுத்தேன
ஆராருக்கோ மணமுடித்து வைத்தேன்

போர் துன்பம் தாங்கா
பிள்ளைகள் புலம்பெயர்ந்திடப்
பேருரைக்க பேரன்மார்
உலகெங்கும் உள்ளனரேல்
பேந்துமேன் எமக்கு வாழ்வு
என எண்ணியோ எண்ணாமலோ
உறவான கணவன் இடைவயதினில்
குடியும் கும்மாளமுமாய் வாழ்ந்து
விடைகொடுப்பு
முதுமையின் தனிமையில்
நாட்களை ஓட்டுவதே
வினையாக வாழ்வானேன்

ஒருவருக்காய் உலைவைப்பு
ஒருவாய் சோறெடுத்து வைப்பதற்கே
முதுமையின் தனிமையில் வாழ்வு
செல்பேசியில் சுகம் விசாரிக்கும்
விசாலமான உறவுகள்…
தனிமைக்குள் இருட்டுக்குள்
இருப்பதுவே எனக்கு
இயலுவதாகிடச்
சுருங்கிய உலகினுள்
சுகவிசாரிப்பற்ற
ஒடுங்கிய ஊருள்
பாரம்பரிய வீட்டுக்குள்
பார்த்திடத் தொலைக்காட்சி
பேசிட செல்பேசி
பார்த்துப்
பேசிடப் பழகிட
கைகொடுத்திட
வருடிட கொஞ்சி
அன்பால் அரவணைக்க
துணையோ பிள்ளையோ
குஞ்சுகளோ அற்ற
தனிமைக்குள்
முதிர் விதவையாய் நான்…!

அழ பகீரதன்

நன்றி : தாயகம் 85

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது