அந்த நாள் ஞாபகம்


முப்பது வருடங்களுக்குமுன் எனது கிராமம் பற்றிய உணர்வு…

நான் இளம்பிராயத்தில் இருந்த காலம் எண்பதுகள். அந்தக்காலம் தான் இலங்கையில் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்திய காலமாக இருக்கின்றது. அந்த காலத்தில் கிராமங்கள் அடைந்த மாற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக நான் எழுதி அப்போது நாம் வெளியிட்ட சிறுசுகள் கையெழுத்து பத்திரிகையில் வந்த கவிதை எனது ஊர் நண்பர்களினை கவர்ந்த ஒன்றாக இருந்தது. அந்தக் கவிதையினை நான் மட்டும் வாசித்திடாது உங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்தேன். இது ஒன்றும் கவிதை என்று சொல்லும் அளவுக்கு இல்லை. ஆனால் கொஞ்சம் உங்களை முப்பதுவருடங்களுக்கு முன் அழைத்துச்செல்லமுடியும் என்ற முனைவில்தான்….

எங்கள் ஊர் முன்னேறி விட்டது


நெருங்கி அமைந்த
வீடுகள்
உயர்ந்து நிற்கும்
அன்ரனாக்கள்
நீண்டு
வளைந்து செலும்
றோட்டு
ஊர்ந்து செல்லும்
பேரூந்து
உல்லாச வாழக்கை
ஆம், எங்கள் ஊர்
முன்னேறி விட்டது.

மண்ணெண்ணை
குப்பிகளுக்கு பதிலாய்
இப்போதெல்லாம்
அறைக்கு அறை
மின் குமிழ்கள்
இன்னும்,
மின் அடுப்பு,
மின் காற்றாடி,
மின் அழுத்தி
என்று எல்லாமே
ஆளியைத் தட்ட
இலகுவில் கிடைக்கும்
ஆம், எங்கள் ஊர்
முன்னேறி விட்டது.
அன்று வேட்டியுடன்
திரிந்த நாம்
இன்று சரம் அணிந்து
செல்கிறோம்
அன்று சேலை அணிந்து
திரிந்த நாம்
இன்று நவநாகரிக உடை
அணந்து ஆடுகிறோம்
அன்று நடந்து
திரிந்த நாம்
இன்று துவிச்சக்கர
வண்டியில் ஓடுகிறோம்
ஆம், எங்கள் ஊர்
முன்னேறி விட்டது.

கோயில் திண்ணைகள்
இப்போது
பக்தர்களை சும்ப்பதில்லை
‘கடதாசிக் கூட்ட’
பக்தர்களையே சுமக்கிறது
விடிந்தால் இருளும்வரை
இவர்களுக்கு,
கடதாசியே உலகம்
வயிற்றுக்கு பசிகூட
வருவதில்லை.
ஆம், எங்கள் ஊர்
முன்னேறி விட்டது.
பத்தாம் வகுப்பு
படித்து முடித்தால்
உடனே வேலை வேண்டும்.
‘பாஸ் போட்’
‘ஏஜென்சி’
என்று அலைச்சல்
பஸ்ஸேறிப் பயணம்
பின் சிலநாளில்
பிளேன் ஏறப் பயணம்
ஆம், எங்கள் ஊர்
முன்னேறி விட்டது.

படிப்புத் தேவையில்லை
குணமும் தேவையில்லை
வெளிநாடு சென்று
வந்தால் போதும்
மாப்பிள்ளையாய் வருவதற்கு
பெண்களிற்கு!
அதுவே போதும் தகுதி
ஆம், எங்கள் ஊர்
முன்னேறி விட்டது.

எங்கள் ஊரை
எத்தனையோ பேர்
திருத்த முயன்றனர்
பெரியவர்கள், இளைஞர்கள்
என்று பலர்
ஆனாலும்,
திருத்த முடியவில்லை
என்றாலும் எங்கள் ஊர்
முன்னேறிவிட்டது.

1984

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆள்மாற்றம் கோருகிறது

இலங்கையன் என

நாம்