தீபாவளி கொண்டாடப்படுவது..
தீபாவளி தமிழர் திருநாள் அல்லாவிடினும் பரவலாக தமிழ்மக்கள் கொண்டாடும் தினமாக உள்ளது. கொண்டாடும் யாரும் அதன் உண்மையான புராண கதைக் காரணத்தை வைத்து கொண்டாடுவதில்லை. அது ஒரு புதிய ஆடை புனைந்து மகிழும் சாதாரண அர்த்தத்திலேயே கொண்டாடப் படுகின்றது.
தீபங்கள் வரிசை என அர்த்தப்படும் சொல்லால் அறியப்பட்ட இந்த விழாவை நானும் சிறுவயதில் கொண்டாடியிருக்கின்றேன். எனது பள்ளிச்சிறாருக்கு தீபாவளி அட்டைகள் வாங்கி தபாலில் சேர்ப்பது வழக்கம். அப்போதெல்லாம் அது ஒரு பொழுது போக்காக இருந்திருக்கின்றது. அந்த அனுபவங்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் தன்மையன.
அரக்கரை அழித்த தினம் எனக்கொள்ளப்படும் விழாக்கள் தமிழில் நிறைய இருக்கின்றன. சூரன் போர் போன்ற பல உண்டு. அரக்கர்கள் என அன்று அழைக்கப்பட்டவர்கள் திராவிடரே என்றால் நாம் அத்தகைய விழாக்களை கொண்டாடுவது சரியா என்பது தான் கேள்வியாக இன்றுவரை இருக்கின்றது.
ஞானிகள் அவதரித்த தினங்களைக் கொண்டாடுவது பிற மதத்தவர்களின் பண்பாடாக இருக்க இந்து மதத்தவர்களின் பண்பாடாக அரக்கர்கள் மறைவு நாளைக் கொண்டாடுவதாக இருக்கின்றது. இந்து மதம் ஆரியமயப்பட்ட மதமாக இருக்கின்றது என்பதனால் தான் இந்த இழிநிலை நேர்ந்திருக்கின்றது. தன் இனத்தவர்களின் அழிவையே கொண்டாடுவது எப்படி ஒப்புக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.இது அடிமைத்தனம் இல்லையா என்று கேட்கப்படுவதில் ஞாயம் இருக்கத்தான் செய்கின்றது.
கருத்துகள்