தமிழில் கையெழுத்திடுவது
அழ
பகீரதன்
பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த
காலம். அப்போது இனவாதம் இருந்திருக்கலாம். 1978 என்று நினைக்கின்றேன். க பொ த
சாதாரணப்பரீட்சைக்காக விண்ணப்பம் கொடுக்கும் நாள் எனக்கருதுகின்றேன். அன்று எங்களை
ஆசிரியர் கையெழுத்து வைப்பதற்காக அழைத்திருந்தார். எல்லோரும் ஆங்கிலத்தில்
கையெழுத்திட்டார்கள். நான் தமிழில் தான் கையெழுத்து இட இருப்பதாக சொன்னேன்.
நண்பர்கள் தமிழில் கையொப்பம் வைத்தால் புள்ளிகளை வெட்டிக் குறைப்பார்கள் என்ற
விதமாக பேசினார்கள். அவர்கள் என்னை பயம் காட்டினார்கள். நான் மசியவில்லை. அமைதியே
உருவான எனக்கு இது கோபத்தை தான் ஏற்படுத்தியது. நான் தமிழில் தான் கையெழுத்து
இடுவேன் என்று கத்தினேன். அவ்வாறே தமிழில் கையெழுத்து இட்டேன். நண்பர்கள் என்னை
ஏளனம் செய்ததாக எனக்கு ஞாபகம்.
பரீட்சையும் வந்தது. அடையாளத்தை
உறுதிப்படுத்தும் அட்டையிலும் தமிழில் கையெழுத்திட்டேன். பரீட்சைத்தினங்கள் தோறும்
அதில் தமிழில் தான் கையெழுத்திட்டேன். சில மாதங்களில் பரீட்சைப் பெறுபேறும் வந்தது.
நண்பர்கள் பயமுறுத்தியது போல் பெறுபேற்றில் எனக்கு புள்ளிகள் குறைக்கப்படவில்லை.
எதிர்பார்த்தது போன்றே பெறுபேறு கிடைத்தது.
இனவாதம் உச்சமடைந்து கலவரங்கள் ஏற்பட்டு
இளைஞர்கள் வீடுவிட்டு போராட புறப்பட்ட காலம். 1984 என்று நினைக்கின்றேன்.
நண்பர்கள் கடவுச்சீட்டு எடுத்தார்கள். எனக்கும் கடவுச்சீட்டு எடுக்க வேண்டிய
நிர்ப்பந்தம். அப்போது எனது சக நண்பர்கள் கடவுச்சீட்டில் ஆங்கிலத்தில் தான்
கையெழுத்திட வேண்டும் என்று எனக்கு ஆலோசனை
கூறத் தொடங்கிவிட்டார்கள். நான் மறுத்து அதிலும் தமிழில் கையெழுத்திட்டேன். தமிழ்
கையெழுத்துடன் எனக்கு கடவுச்சீட்டு கிடைத்தது.
சென்னைக்கு செல்வதற்காக கட்டுநாயக்கா விமான
நிலையத்திற்கு அப்பாவுடனுன் அவரது சக சுங்க இலாகா அதிகாரியுடனும் போயிருந்தேன்.
அங்கே ஒரு பத்திரம் நிரப்பவேண்டியிருந்தது. ஆங்கில மொழியில் நிரப்பப்பட்ட
பத்திரத்தில் தமிழில் கையொப்பமிட்டேன். பத்திரத்தை வாங்கிப் பார்த்த அப்பாவிற்கு
கோபம் வந்தது. நான் தமிழில் கையெழுத்திட்டது அவருக்கு சங்கடமாயிருந்தது. நான்
கடவுச்சீட்டிலும் தமிழில் தான் கையெழுத்திட்டேன் என்று கூறினேன். அவர் எனது தமிழ்
கையெழுத்துக்கு கீழ் ஆங்கிலத்தில் பெயரை அடைப்புக்குறியிட்டு எழுதச் சொன்னார்.
நானும் அவ்வாறே எழுதிவிட்டேன். விமானத்தில் அப்பாவின் சக சுங்க அதிகாரியுடன்
இணைந்து அவரது உதவியுடன் சென்னையை சென்றடைந்தேன்.
சென்னையில் எங்கு பார்த்தாலும்
ஆங்கிலத்திலேயே கடை முகப்புகளில் பெயர்கள் இருந்தன. அங்கும் தமிழுக்கு
மதிப்பில்லையோ என நினைத்தேன். எனது சித்தப்பா நான் தமிழில் கையெழுத்திடுவது பற்றி
சினந்ததாக ஞாபகம். சென்னை மாநிலக் கல்லூரியில் ஒருவாறாக படிக்க அனுமதி கிடைத்தது.
தமிழை முதன்மைப்பாடமாக கற்றபோதும் அங்கும் தமிழில் கையெழுத்து இடுவதை கொஞ்சம்
நாகரிகம் அற்ற செயல் என்று கருதுவதாக எனக்கு பட்டது. நானும் எனது சக மாணவன் வா மு
சே ஆண்டவரும் தமிழில் கையெழுத்து இடுவது என்ற கொள்கை உடையவர்களாக இருந்தோம். கல்லூரியில்
மாணவர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வாக்களிப்பதற்காக நானும்
நண்பரும் நின்றிருந்தோம். தமிழிலேயே கையெழுத்திடுவதாக தீர்மானித்திருந்தோம்.
அவ்வாறே வாக்கு சீட்டு நிலையத்தில் சென்று தமிழில் கையெழுத்து இட்டுவிட்டு
வாக்களித்தோம். அந்த வாக்கு சீட்டு நிலையத்தில் தேர்தல் அலுவலகராக கடமையாற்றிய
பேராசிரியர் இளவரசு அவர்கள் நானும் அந்த நண்பர் ஆண்டவரும் மட்டுமே தமிழில்
கையெழுத்திட்டதாக பாராட்டினார். தமிழ் மொழிமூலகல்வி கற்பவர்களே தமிழில் கையெழுத்து
இட தயங்குவது எனக்கு வியப்பான விடயமாக இருந்தது.
படிப்பு முடித்துவிட்டு சொந்த நாடு
வந்தேன். இந்தியன் அமைதிப்படை இருந்த காலம். வேலை தேடும் பயணம் தொடர்ந்தது.
விண்ணப்ப பத்திரங்கள் அனைத்திலும் தமிழில் கையெழுத்திட்டேன். ஒருவாறாக சுகாதார
எழுதுவினைஞர் வேலை கிடைத்தது. யாழ்ப்பாணம் அரச வைத்திய சாலையில் தொழில். அலுவலகத்திற்கு
சென்று வருகைப் பதிவேட்டில் பார்த்தேன். எல்லோரும் அனேகமாக ஆங்கிலத்திலேயே
கையெழுத்திட்டார்கள். நான் தமிழில் கையெழுத்திட்டேன். சுமார் ஒருவருடகாலம்
கடமையாற்றினேன். அப்போது அங்கு எனக்கு அதிகாரியாக இருந்த ஒருவர் தமிழில் ஏடுகளை
பராமரிக்க உற்சாகப்படுத்தினார். புதிதாக பதவிக்கு சேர்ந்த பதினைந்து இளைஞர்களுடன்
இது பற்றி கதைத்தேன். அவர்கள் எனது கோரிக்கையை செவிசாய்க்கவில்லை, நான் அவர்களுடன்
முரண்பட்டேன். நாங்கள் ஆங்கிலம் கற்று முன்னேற வேண்டும். அதற்கு வாய்ப்பாக இங்கு
இதுவரை பயன் படுத்திய ஆங்கில மொழியை பயன்படுத்தினாலே நாம் முன்னேறமுடியும்
என்றவாறாக பேசினார்கள்.
அந்த வேலையை விட்டு நான் இலங்கை வங்கியில்
எழுதுவினைஞன்/காசாளர் பதவியில் இணைந்துகொண்டேன். சுன்னாகம் இலங்கை வங்கியில்
கடமையாற்ற சென்றேன். அங்கும் வருகைப் பதிவேட்டில் எல்லோரும் ஆங்கிலத்திலேயே
கையெழுத்திட்டார்கள். நான் எனது பெயரை ஆங்கிலத்தில் எழுதிவிட்டு எனது கையெழுத்தினை
தமிழில் இட்டேன். அங்கு கடமையாற்றிய கலைப்பேரரசு எ ரி பொன்னுத்துரையின் மகன் பொன்
பாலகுமார் அவர்கள் நான் தமிழில் கையெழுத்திடுவதை இட்டு பாராட்டினார். அந்தப்
பாராட்டு எனக்கு உற்சாகமூட்டுவதாக இருந்தது. அவர் மகாஜனாகல்லூரியில் கற்ற வைத்திய
கலாநிதி அம்பலவாணர் அவர்களின் உடன் மாணாக்கர். அவரே நான் தொடர்ந்தும் வங்கியில்
கடமையாற்றுவதற்கு காரணமாக இருப்பவர். அவர் கூட வருகைப் பதிவேட்டில் ஆங்கிலத்திலேயே
கையெழுத்திட்டதாக ஞாபகம், பின்னர் அவரும் வருகைப் பதிவேட்டில் தமிழில்
கையெழுத்திட்டார்.
சிலபத்திரங்களில் தமிழில் கையெழுத்து
இட்டபோது நான் விமர்சனத்திற்கு உட்பட்டேன். ஆங்கில பத்திரங்களில் தமிழில்
கையெழுத்திட்டபோது வாசித்து விளங்கிக்கொண்டேன் என்று புறம்பாக கையெழுத்து
பெற்றுக்கொண்டார்கள். நான் சிங்கள விரோதி என அப்போது என்னை பல தமிழர்கள் தவறுதலாக
கருதியிருக்கலாம் என நான் நினைக்கின்றேன். எனது தமிழ் பற்று மோசமானதோ என்று கூட
நான் எனக்குள் சங்கடப்பட்டதாக ஞாபகம். சக அலுவலகர்கள் சிலர் எனக்கு தமிழில்
கையெழுத்திடும் சில அதிகாரிகள் பற்றி சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார்கள்.
சிறிதுகாலத்தின் பின் போர் உச்சமாக
நடந்தபோது என்னை சக அலுவலகர் ஒருவர் கேட்டார். நீர் என்ன சிங்கள இடங்களில்
இடமாற்றம் கிடைக்காது என்று நினைக்கிறீரோ. தமிழில் கையெழுத்து இட்டுக்கொண்டு
சிங்கள இடத்தில் போய் வேலை செய்யலாம் என்று நினைக்கிறீரோ. கேட்டவர் தமிழர். அதில்
தவறில்லை. அந்தப் பயம் எனக்கும் இருந்தது தான்.
காரைநகர் கிளைக்கு இடம் மாற்றம் கிடைத்தது.
சுன்னாகத்தை விடவும் வித்தியாசமான இடம். அந்த பகுதி கடற்படை கட்டுப்பாட்டுப்
பகுதி. அங்கு நுழைவதற்கு பாஸ் பெற்றே செல்லவேண்டும். அங்கும் தமிழிலேயே உற்சாகமாக
கையெழுத்திட்டேன். என்னை அவர்கள் ஒரு தமிழ் வாதியாக பார்க்கவில்லை. அந்த
காலப்பகுதியில் நான் அலுவலக விடயமாக நைனாதீவிற்கு கடற்படைக்கு சொந்தமான
டோறாப்படகில் இருமாதங்களுக்கு ஒருமுறை செல்வேன். நைனாதீவில் இருந்த மக்களில்
ஓய்வூதியம் பெறும் வயோதிபர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காகவே அவ்வாறு சென்றேன்.
அவ்வாறு போகும்போது அங்குள்ள பத்திரங்களிலும் தமிழிலேயே கையெழுத்திட்டேன்.
கடற்படையினர் எவரும் நான் தமிழில் கையெழுத்திடுவதை கேவலமாக பார்த்ததில்லை.
தமிழில் தொடுத்து எழுதுவதற்கு வாய்ப்பில்லை
என்பதால் தான் தமிழில் கையெழுத்து இட தயங்குகிறார்கள் என்று கருதிய நான் எனது
கையெழுத்தை தொடுத்து எழுதப்பழகினேன். அதில் வெற்றியும் பெற்றேன். ஒருவாறாக
தொடுத்து கையொப்பமிட்டுவரலானேன். பதவியுயர்வு கிடைத்து. எனது மாதிரி ஒப்பத்தை
தமிழிலேயே நான் பழகியவாறு தொடுத்து எழுதினேன்.
தற்காலிகமாக இலங்கை வங்கியின் காரைநகர்
கிளையின் முகாமையாளராக 2007ம் ஆண்டில் நியமிக்கப்பட்டு ஒன்றரை வருடம்
கடமையாற்றினேன். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அனைத்து கடிதங்கள் ஆவணங்களிலும்
தயக்கமின்றி தமிழில் கையெழுத்திட்டேன். அவ்வாறு கையெழுத்து இடுகின்ற ஒவ்வொரு
தருணத்திலும் நான் புளகாங்கிதம் அடைந்தேன்.
தற்போது யூலை 2009 இலிருந்து சங்கானை
இலங்கை வங்கியில் முகாமையாளராக கடமையாற்றும் இந்த தருணத்திலும் எனது கையெழுத்தை
தமிழிலேயே இட்டுவருகின்றேன்.
பத்தாம் வகுப்பில் எனது உடன் மாணாக்கர்
அச்சமூட்டியது போல் தமிழில் கையொப்பமிடுவதால் நான் ஓரம் கட்டப்படவில்லை என்று
நினைக்கும் போது எனக்கு இப்போது மெய்சிலிர்க்கின்றது. மேலும் உற்சாகம்
அடைகின்றேன். தொடர்ந்தும் தமிழில் கையெழுத்து இடமுடியும் என்ற நம்பிக்கையில் எனது நாட்கள்
நகர்கின்றன.
கருத்துகள்
தொடருங்கள். இதில் வில்லங்கமில்லை என்பதையும் விளக்குங்கள்.