என்னைப் பற்றி

சுருக்கக்குறிப்பு
இலங்கை யாழ் மாவட்டத்தில் பண்டத்தரிப்பு அஞ்சல் பிரிவில் காலையடி எனும்  குக்கிராமத்தில் 1963 மே மாதம் 16ந்திகதி  பிறந்தேன். இக்கிராமம் பணிப்புலம் கிராம அலுவலர் பிரிவிற்கு உட்பட்டது. எனது தந்தையார் பெயர் சபாபதி அழகரத்தினம் தாயார் சின்னையா சிவகெங்கா. இவர்களுக்கு ஐந்தாவது பிள்ளையாக பிறந்தேன். சிறுபிராயத்திலிருந்து அதிகம் யாருடனும் பேசுவதில்லை. என்னுடன் உரையாடுவதற்கு நீண்ட காலம் தவம் கிடக்கவேண்டும்.
எனது ஆரம்பக் கல்வி பண்ணாகம் அமெரிக்கன்மிஷன் தமிழ் கலவன் பாடசாலையிலும் இடைநிலை உயர்நிலை கல்வி பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரியிலும் தொடர்ந்தது. சிலமாதங்கள் தெல்லிப்பளை மகாஜனாக்கல்லூரியிலும் கல்வி கற்றிருக்கின்றேன்.
பதினாலு வயதிலிருந்து பொதுஉடமைத் தத்துவத்தின் பால் ஈர்ப்பிருக்கின்றது. 1972இல் தோற்றம்பெற்ற மறுமலர்ச்சி மன்றத்தின் பால் சிறுவயதில் ஈர்ப்பேற்படுகின்றது. அதன் விழாக்களை பார்த்து நானும் ஒத்த சிறுவர்களுடன் சேர்ந்து வீட்டுக் கோடியில் நாடகம் எழுதி மேடைபோட்டு நடிக்கின்றோம். அக்காலங்களில் சித்திரங்கள் வரைவதிலும் நாட்டம் ஏற்படுகின்றது.
1976 ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலம். மறுமலர்ச்சி மன்றம் ஒரு நூலகம் அமைக்கின்றது. அதில் காலைக்கதிர் என்ற கையெழுத்து சஞ்சிகை பார்வைக்கு வைக்கப்படுகின்றது. அதை பார்வையுற்ற நானும் எனது நண்பர்களுடன் இணைந்து கலை முத்துக்கள் என்ற கையெழுத்து சஞ்சிகை ஒன்றை உருவாக்கி அந்த நூலகத்தில் பார்வைக்கு வைக்கின்றோம். ஏக வரவேற்பு கிடைக்க எனக்கும் உற்சாகம். ஐந்து கள்வரும் மூன்று மாங்காயும் என்றதொரு கதையினை எழுதுகின்றேன். நண்பர்களுடன் முரண்பாடு ஏற்படுகின்றது. அந்த காலத்தில் நமது திறமைகளை பார்த்த  இரவியண்ணா(ந.இரவீந்திரன்)  எங்களை மன்ற ஆண்டுவிழாவின் மேடையில் மேடையேற்ற முயற்சி செய்கின்றார். நாளைய உலகம் என்ற நாடகத்தில் சிறுவர்கள் ஆகிய நாமும் மேடையேறுகின்றோம். மறுமலர்ச்சி மன்ற ஆண்டுவிழாவில் மேடையேறிய முதலாவது சிறுவர் நாடகமாகாவும் அந்த நாடகம் திகழ்ந்தது.
மறுமலர்ச்சி மன்றத்தில் சிறுவர் மன்றம் தொடங்கி சிறுவர்களின் தலைமையில் கூட்டங்கள் நடக்கின்றன. நான் ஒற்றுமை என்ற நாடகம் ஒன்றை எழுதி நண்பர்களுடன் நடிக்கின்றேன்.
கல்விப் பொது சாதாரண தர பரீட்சையில் சித்தியெய்தி தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் இணைகின்றேன். கணிதப்பிரிவு. மனம் ஒப்பவில்லை. கல்லூரிக்கு செல்ல மறுக்கின்றேன்.நூல்களை சேகரிக்கின்றேன். வீட்டுக்குள் நூலகம் அமைக்கின்றேன். 1980 என்று நினைக்கின்றேன். எனது பெயரில் விருப்பு ஏற்படுகின்றது. காலையூர் கலாரதன் என்ற புனைபெயரை உருவாக்குகின்றேன். வானொலியின்பால் ஈர்ப்பு ஏற்படுகின்றது. வானொலியில் இளைஞர் நிகழ்ச்சி சங்கநாதன் என நினைக்கின்றேன். எனது சிறுகதை ஒலிபரப்பானது. ரதன் முத்து என்ற சஞ்சிகை முற்றிலும் எனது ஆக்கங்களுடன் உருவாக்குகின்றேன். மூன்று இதழ்கள் வந்ததாக ஞாபகம்.
ஊர்வாய் மூடாதோ என்று ஒரு நாடகம் எழுதுகின்றேன். பின்னர் அந்த நாடகம் மேடையேற்ற முயன்றும் முடியவில்லை. உண்மைக்கதையை எழுதியதால் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
1981இல் மறுமலர்ச்சி மன்ற கூட்டங்களில் பங்குப்பற்றி கவிதைகள்  எழுதி வாசிக்கத்தொடங்கினேன்.அதன்  கலை இலக்கிய வட்ட பொறுப்பாளர் ஆயினேன். பாரதியின் நூற்றாண்டு தொடர்பில் கவிதை ஒன்று எழுதி சங்கநாதம் நிகழ்ச்சிக்கு வானொலிக்கு அனுப்பினேன். எனது பெயரை சொல்லாமலே எனது கவிதை வரிகளை இணைத்து ஒரு நிகழ்ச்சி ஒலிபரப்பினார்கள். அச்சில் எனது கவிதைகள் வரத்தொடங்கியது முதல் முதல் சோதிட மலர் இதழில் சோதிடமே உண்மை எனும் கவிதை அது. தொடர்ந்து கவிதைக்கான இதழ் பூபாளம் இதழில் உயரப்போகும்பாப்பா எனும் கவிதை அச்சில் வந்தது. தொடர்ந்து வீரகேசரி, சிந்தாமணி, தினகரன் இதழ்களிலும் வந்தது.
1982இல் மறுமலர்ச்சி மன்ற நிர்வாகத்தில் உபசெயலாளராக பொறுப்பேற்றேன்.தேசிய கலை இலக்கியப் பேரவை பாரதி ஆய்வரங்குகளுக்கு சென்றுவந்தேன்.1983 இல் மன்றத்தில் செயலாளராக பொறுப்பேற்றேன். இன்று கனடாவில் வதியும் வேந்தன், உதயன், பாலராசா, நாகேந்திரன் போன்றவர்களுடன் இணைந்து சிறுசுகள் எனும் கையெழுத்து தட்டெழுத்து சஞ்சிகையினை தொடங்குகின்றேன்.  
இனக்கலவரத்தின் பின் நடக்குமா நடக்காதா என்றிருந்த உயர்தரப்பரீட்சை நடக்கின்றது. நானும் கலந்துகொள்கின்றேன். பேப்பர் அவுட்டாம் எனும் செய்தி. அது என்னால் ஏற்கமுடியாதது. அதனை எதிர்த்து பேப்பர் அவுட்டாம் கவிதை எழுதி மன்றத்தில் கூட்டத்தில் வாசிக்கின்றேன். வரவேற்பு பெறுகின்றது. அதனை செப்பனிட்டுத்தருமாறு தேவரண்ணா கேட்கின்றார். நான் கொடுக்கின்றேன். தாயகம் இதழில் ஏற்கனவே எனது சிறுகவிதை பிரசுரமாகியிருந்தது. இந்த பேப்பர் அவுட்டாம் கவிதை வெளிவந்தது. அதன் சிறப்பு குறித்து கவிஞர் முருகையன் விதந்துரைத்ததாக சொல்கின்றார்கள். எனக்கு மேலும் உற்சாகம் வருகின்றது.
இனவாதம் கூர்மையடைந்த போது பல இயக்கங்கள் எழுச்சி பெற்றன. தமிழீழ மக்கள் விடிதலைக் கழகம் அமைப்புடன் தொடர்புகள் நெருக்கமடைகின்றன. புவிநேசன் எனும் பெயரில் கவிதைகள் எழுத தொடங்குகின்றேன்.
கருணாகரனுடன் தொடர்பு ஏற்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பத்திரிகை ஒன்றில் எனது கவிதை வருகின்றது. ஈழமுரசு என நினைக்கின்றேன். எனக்குள் உள்ள கவிஞனை வெளிக்கொணர கருணாகரன் முயல்கின்றார்.தினகரன் இதழில் என்னைப்பற்றி சிறுகுறிப்பு எழுதுகின்றார். சத்தியராஜன் எனது கவிதைகளை பெற்று சில கையெழுத்து பிரதிகள் வானொலியில் பிரசித்திப்படுத்துகின்றார்.
அக்காலப்பகுதியில் இந்திய பிரதமர் இந்திராகாந்தி சுடப்பட்டு இறக்கின்றார். யாழ் குடாநாடெங்கும் துக்கதினம். பல அஞ்சலி பிரசுரங்கள். நண்பர் மகேஸ்வரன் கவிதை எழுதித்தருமாறு கேட்கின்றார். நான் எழுதிய கவிதை அன்னை இந்திராகாந்தி உன்னை துப்பாக்கி இரவைகளும் துளைக்குமோ என்னே கொடுமை என தொடங்கியதாக ஞாபகம். பனிப்புலம் மக்கள் வெளியீடு என்றவகையிலமைந்த பிரசுரம் ஒலிபெருக்கியில் நண்பர்கள் வாசித்து திரிந்ததாக ஞாபகம். இதைக் கண்ணுற்ற காலையடி நண்பர்கள் புளியடியில் இருந்து புழுங்கினார்கள். பனிப்புலம் மக்கள் பிரசுரம் வெளியிடுகிறார்கள். அதற்கு காலையடியான் கவிதை எழுதிக் கொடுக்கின்றான் என்று எனக்கு உசுப்பேத்தினார்கள். உடனடியாக  ஒரு வெற்றுப்பேப்பர் வாங்கி ஒரு கவிதை அந்த இடத்திலேயே எழுதிக்கொடுக்க காலையடி மக்கள் என்று போட்டு பிரசுரமானது.
1984இல் சுற்றிவளைப்புத் தேடுதலில் நாலு அன்பர்கள் மரணிக்கின்றனர் கண்ணன், ராசன் பிடிபடுகின்றார்கள். இரத்தாசியின் மார்கழியில் என அதனை கவிதை எழுதுகின்றேன். மரணித்த அன்பர்கள் பற்றி கவிதை எழுதுகின்றேன். துண்டுப்பிரசுரமாக வந்ததாக ஞாபகம்.
பலரும் நாட்டை விட்டோட முயல்கின்றார்கள். போகின்றார்கள். நானும் கொழும்பு சென்று சென்னைப்பட்டினத்திற்கு 1985 இல் நகருகின்றேன்.
சென்னை மாநிலக்கல்லூரியில் படிப்பு தொடர்கின்றது. தமிழியல் பிரிவில் இளங்கலையியல் பட்டப்படிப்பு. பேராசிரியர்கள் கவிஞர் மு மேத்தா, இளவரசு, மலைமலை இலக்குவனார், கங்காதரன், தாமோதரம்பிள்ளை, பாலசுந்தரம், அன்பு,  போன்ற நல்லாசிரியர்கள் கற்பிக்கின்றார்கள். நான் அகம் மகிழ்கின்றேன். பொங்கும் தமிழமுது, மலரும் தமிழீழம் போன்ற இதழ்களில் எனது கவிதைகள் புவிநேசன் என்ற புனைபெயரில் பிரசுரமாகின்றது. தாயகம் இதழிலும் எனது கவிதைகள் தொடர்ந்து பிரசுரமாகின்றது. தேசிய கலை இலக்கியப் பேரவை நூல்வெளியீடுகளில் இணைந்து பணியாற்றுகின்றேன். மன ஓசை, சவுத் ஏசியன் புக்ஸ் நண்பர்களுடன் தொடர்பு ஏற்படுகின்றது.
மாநிலக்கல்லூரியில் பெருங்கவிக்கோ வா மு சேதுராமன் அவர்களின் மகன் ஆண்டவர் (தற்போது பச்சையப்பா கல்லூரி பேராசிரியர்) ஔவை நடராசன் மகன் அருள் (தற்போது தமிழக தமிழ் வளர்ச்சி துறை மொழிபெயர்ப்பு பணிப்பபாளர்) மகாவிஷ்ணு (தற்போது விழுப்புரம் அரசினர் கலைக்கல்லூரி பேராசிரியர்) மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்ட வேல்முருகு கருணாநிதி (பாக்கர் நூல் வெளியீட்டு நிறுவனம்) போன்றவர்களுடன் இணைந்து படித்து அவர்களது நட்பை பெற்றதில் மனநிறைவடைகின்றேன். 
தமிழ்ப்பணி இதழில் கவிதை பிரசுரமாகின்றது. இலங்கை வானொலிக்கு சென்னையிலிருந்து கவிதை எழுதியனுப்ப பாவளம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது. 
முதலாம் வருடம் தமிழியல் கற்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் கவிஞர் சந்தானம் முயற்சியில் பூங்கா கவியரங்கம் நடைபெற்றது அதில் கற்பெனப்படுவது என்ற தலைப்பில் கவிதை எழுதி வாசித்தேன். அந்த கவிதை வாசித்ததும் ஏற்பாட்டாளர் அதிபருக்கு கொடுக்கவேண்டும் என வாங்கிவிட்டார்கள். பிரதி பண்ணிவைக்காததனால் அந்த கவிதையை இழந்து விட்டேன்.
பெருங்கவிக்கோ வா மு சேதுராமன் அவர்களுடன் பழகும் பாக்கியமும் அவரது ஆசீர்வாதம் பெற்றமையை இட்டும் அவரது வீட்டு உணவை உட்கொண்டதையும் வாழ்வின் பெரும் பாக்கியமாக கருதினேன்.
இரவியண்ணாவுடன் பாரதி ஆய்வாளர் பெ சு மணி அவர்களது இல்லத்திற்கு சென்று விருந்துண்டேன். பின் அவர் எம்மை அழைத்து சென்று மகாகவி பாரதியுடன் உடன் வாழ்ந்த பெரியோர்களை அறிமுகப்படுத்தியதும் மறக்கமுடியா அனுபவம். ஒரு மாலைப்பொழுதில் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.  அவரது வாழ்த்துப்பெற்றதில் எனக்கு பேருவகை.
பாவேந்தர் மு மேத்தா எனக்கு மூன்றாண்டுகள் விரிவுரையாளராக இருந்தார். இறுதியாண்டு படைப்பிலக்கியம் என்ற பாடப்பரப்பு. பாடவேளையில் வைகறை என்ற தலைப்பில் கவிதை அல்லது சிறுகதை எழுதுமாறு உரைத்தார். எல்லோரும் எழுதுகின்றார்கள். எனக்கோ என்ன எழுதுவது என்று புரியவில்லை. இறுதியில் ஒருவாறு யாழ்ப்பாணத்தில் வைகறைப்பொழுதில் விமானம் குண்டுபோடுவதாகவும் எனது வீடு கொழுந்து விட்டு எரிவதாகவும் அந்த நெருப்பு சுவாலையில் வானம் சிவப்பதாகவும் ஏதோ கற்பனை பண்ணி எழுதிவைத்தேன். மாணவர்களின் படைப்புக்களை வாசித்து மெச்சிக்கொண்டிருக்க இறுதியாக எனது கவிதை வாசிக்கப்பட்டு இப்படியும் சிந்திக்கலாம் வித்தியாசமான எழுத்து என்று உரைத்தார். விரிவாகசொல்வதற்கு பாடவேளை முடிந்துவிட்டது. 
கவிதையினை பிறகு எனது நந்தனம் கலைக்கல்லூரி மாணவர் நண்பர் அரசில்கம்பன் இடம் காட்டுகின்றேன். அவனும் கவிஞன் அந்த காலத்தில் இதழ்களில் அவனது கவிதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. அவன் அந்த கவிதையை உச்சத்தில் வைத்து பாராட்டுகின்றான். மேத்தா என்ன சொன்னார் என வினவுகின்றான். நான்  அவர் வித்தியாசமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது என்று மட்டும் தான் சொன்னார் என்கின்றான். அவனது முகத்தில் கோபம் கொப்பளிக்கின்றது. இதை பாராட்ட அவருக்கு தோன்றவில்லையே என வேதனைப்படுகின்றான். அந்தக் கவிதையை இப்போது தொலைத்துவிட்டேன்.கருத்துகள் இல்லை: