கவிதைகள்



ஊருக்கு வரேனே!


-அழ. பகீரதன்
 

ஊரின் நினைவும் உறவின் நினைப்பும்
இல்லா மானிடன்
அல்ல எனினும்
கல்வியின் மேலே மிகவும்
காதலன் ஆகி யானே
வாழுத லாலே ஊருக்கு வரேனே!

உற்ற மனைவி பெற்ற பிள்ளை
சுற்றம் விட்டே
ஆண்டு பலவாய்
பலமைல் கடந்து வாழும்
மனிதரை நினைந்தே யானும்
வாழுத லாலே ஊருக்கு வரேனே!

தாய்க்கு மரணம் நிகழ்ந்த போதிலும்
தந்தை நோயில்
நொந்த போதும்
வந்து பார்க்க முடியா
மனிதரை நினைந்தே யானும்
வாழுத லாலே ஊருக்கு வரேனே!

மகளின் மணம் பார்க்கத் தாயில்லை!
சுற்றம் இல்லை
ஊரில் அன்றி
உலகின் ஒரு மூலையில்
நிகழும் மணத்தை நினைந்தே
வாழுத லாலே ஊருக்கு வரேனே!

குழந்தைப் பாசம் இழந்தே துணைவி
தன்தாய் வளர்க்க
துணையுடன் சென்றே
உலகின் மறுபகு தியிலே
உழைத்து வாழுதலை நினைந்தே
வாழுத லாலே ஊருக்கு வரேனே.

அருகில் உள்ள நாட்டில் இருந்தும்
அன்னை தங்கை
அன்பு மாந்தரை
பார்க்க முடியா வண்ணம்
வாழும் இளைஞரை நினைந்தே
வாழுத லாலே ஊருக்கு வரேனே!

காதலி பிரிவில் மெலிந்து வாடிட
கடிதம் வாசித்தே
காதலியை நினைக்கும்
மறுகரை வாழும் காதலன்
பெறுமிகு துயரம் நினைந்தே
வாழுத லாலே ஊருக்கு வரேனே!

ஊரின் நினைவும் உறவின் நினைப்பும்
இல்லா மானிடன்
அல்ல எனினும்
பலரும் பெறுமிகு துயரம்
நினைவில் நின்றே வருத்த
வாழுத லாலே ஊருக்கு வரேனே!

-இலங்கை வானொலியில் பாவளம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது 1986

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது