நிற்க அதற்கு தக!


 தரணியெங்கும் தமிழரென
பொங்கி மகிழ்ந்து  முகநூல் பரப்பி
வாழ்த்துக்கள் பல பெற்று நான்
இங்கும் வந்து உழவர் விழவில்
மகிழ்ந்துள்ள தலைமைக் கவிஞர்
கவிப்பொங்கல் படைக்கவந்த கவிஞர்
கவிச்சுவை பருக வந்த சுவைஞர்
அனைவர்க்கும் என் அகம் மகிழ்ந்து
வணங்கி நின்று வியக்கின்றேன்
நானும் ஒரு கவிஞன் என்று
வெறுமனே இரசித்துவிட்டுப் போகின்ற
என்னையும் அழைத்திருக்கின்றனர்
தேசிய கலை இலக்கிப் பேரவையினர்
தோழமையோடு கூடி
நாற்சார் வீட்டுக்குள் சாற்றுக கவியென்று!
எப்படிச் சாற்றுகவெனில்
நிற்க அதற்குத் தகவாம்!
சொற்சுவை பொருட் சுவை கூட்டி
நற்றமிழ் கொண்டு பாட நானென்ன வரகவியா?

இப்படித்தான் இருபத்திரண்டு வயதினில்
இயலுமானால் ஒரு கவிசாற்று என்று
சென்னை மாநிலக்கல்லூரியில் நண்பர் செப்பினர்
கற்பெனப்படுவது என பிரத்தியேக தலைப்புக்கொடுத்து
சொற்சுவை கூட்டி நானும் கூடிய நண்பரிடை
பூங்காக் கவியரங்கென சந்தானம் பெயரிட
முற்றத்தில் எழுந்து நிற்கின்றேன் கவிபாட
சிற்றிதழில் கிறுக்கிய என் வரிகளுடன்
அடியெடுத்து அரங்கில் வீச முயன்றிடிலோ
நடுங்கின கால்கள்! சொற்கள் திக்கின!1
விடுப்பு பார்த்தவரோ விசுக்கென்று சிரித்தனர்..
வியர்த்துக் கொட்டியது எனக்கு
காலில் என்ன நடுக்கமென காவேரி கேட்டாள்
கருத்தொருமித்து பாடு என ஆணையிட்டாள்
ஒருவாறு நானும் செப்பிவிட்டேன்
கிறுக்கிய அத்தனை வரிகளும் ஒப்பிவிட்டேன்
கிறுக்குத்தனமாய்  எழுதியதன்று எதுவென்று அறியேன்
கற்பு எனப்படுவது என்னவென்று இன்றுவரை புரியேன்
நிற்க அதற்கு தகவென இன்றெனக்கு ஏனிந்த தலைப்பு?

கட்சி இரண்டுக்கும் பொதுவில் வைப்பமென்று
கருதியதால் நானும் காத்திட்டேன் கற்பெனிலும்
சொற்திறம்பாமை என நற்பொருள் உள்ளதென
சாற்றிடுவார் வள்ளுவர் எனும் முனிவர்
சரி விடுவம் வம்புக்கு ஏன் போவம்
முகநூல் ஒரு செய்தி தருகின்றது
அகத்தில் உமக்கு கற்புண்டோ எனும் கேள்விக்கு
இல்லை எனத் துணிந்தே நங்கையர் நவில்வர்
கால மாற்றம் இது அவரவர் சுதந்திரம் என
கருதிடத் தோன்றும் எனக்கேன் இன்று
நிற்க அதற்குத் தகவென ஏனிந்த தலைப்பு?
அப்படியே இரு எனும் தலைப்பில் புத்தகம்
அப்படியே இரு என்றால் இயங்கியலுக்கு எதிர்
என கருணாகரன் முகம் சுழிக்க
அது தரும் பொருள் எதிர்நிலையில் போராடு
என்பதாக தணிகையர் சொல்ல
ஆச்சுது புத்தகம் வந்து விமர்சனமும் வந்தாச்சு
இப்போதோ காண்பவர் எல்லாரும்
அப்படியே இருக்கிறார் இவர் தன் புத்தக தலைப்புப் போல
எனச் சொல்லிச்சொல்லியே எனை
அப்படியே இரு என விட்டனர் எனில் இன்று
நிற்க அதற்குத் தகவென ஏனிந்த தலைப்பு?

தப்புத் தப்பாய் போகின்றார் இளையோர்
எப்பவும் கைத்தொலைபேசியில் இணைப்பு
விரட்டியும் மிரட்டியும் அரட்டியும் நங்கையரை
பணிய வைப்பதில் எங்கும் பரபரப்பு
பெற்றவர் இதயத்தில் என்றும் படபடப்பு
விடுப்பு பேசுபவர்க்கு எடுப்பு இதுவனெனக் கிடக்க
எங்கும் எங்கும் எங்கும் பாப நாசம்
பற்றைகள் எங்கும் செற்றைகள் எங்கும்
பதறப் பதறத் தேடித்திரியும் பெற்றோர்
ஒதுங்கிப் போகும் ஏனக்கு ஏனின்று
நிற்க அதற்குத் தக எனுமிந்த தலைப்பு
முப்பது ஆண்டுகள் மூண்ட பகைமையில்
துப்பாக்கி தூக்கி போராடி ஆகுமெண்டு
அப்படியே மக்களை இருக்க விட்டு
கொப்பரிலை ஏறி ஏகம் நாமே என்று
செப்படி வித்தைகள் பலவும் காட்டி
குழந்தை பிடி படலமாய் மாறி
செத்தே போனரே எனக்கொண்ட போதும்
ஒப்பிட மறுத்திடும் போக்குகள் பாத்து
செப்பிட எனக்கென்ன உண்டென ஓரமாய்
சென்றிட எனநான் ஓய்ந்து போயிருக்க
நிற்க அதற்குத் தக என ஏன் தலைப்பு?

சாதியம் தகர்த்திட என்றெழுந்து
வெகுஜனப் புரட்சியாய் பரிணமித்து
மாற்றத்தில் மக்கள் தலை நிமிர்ந்து
ஆற்றலை கூட்டியோர் ஏற்றம் பெற்றிடுகையில்
வீச்சுப் பெறுகிறோம் என எழுந்திடாது
சாதியம் ஓர் தேசியம் எனக் கோல்கொண்டெழுதி
சாற்றும் போதுதான் என்னத்தை செய்யவென
சாலையில் நின்று பார்த்துச் செல்லும் எனக்கு
நிற்க அதற்கு தக என  ஏன் இந்த தலைப்பு?

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என
நன்று கற்றுத் தேர்ந்து அறிந்து
தெய்வம் தொழுவோர் உயர்ந்தோர் என ஏற்றி
மதச்சார்பின்மை மகத்தானதென உணர்ந்து
மத ஆராதனை மன்றத்தில் ஏற்றிட
மனம் ஒப்பி ஆற்றி விட்டிட
மதங்கொண்டு வந்தே விரட்டிடுவர் எனில்
வேண்டாம் எனக்கேன் வீண்வம்பென கிடக்கும்
எனக்கேன் நிற்க அதற்கு தக எனும் தலைப்பு
வள்ளுவனுக்கு விசர் பாரதிக்கு விசர்
படித்தவனுக்கு விசர் இந்தப் பகீரதனுக்கும் விசரென
ஆக்கவோ நிற்க அதற்கு தக எனும் தலைப்பு?

ஏன் என்னை உசுப்பிறீங்கள்
தக, தக, தக என்றால் எதற்கு தக?
காகிதப் புலிகள் எனக் கிடக்கும்
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கே
விசுவாசம் காக்கும் தமிழ்த்தேசியம்
பொதுமை எனும் முயல்வில்
வர்க்கம் என அணிதிரண்டு நின்று
பொங்கிடாவண்ணம் காக்க
சாதியம், பெண்ணியம், இனத்துவம், மதத்துவம்…
எதற்கு தக..? எதற்குத் தக..?
மாற்றம் ஒன்றே மாறாத விதியென
மார்க்சியம் தந்த பாதையில் எழுவீர்!
ஆற்றல் மிக்க கரங்களை இணைப்பீர்!
ஆக்குவீர் பொதுமைநெறி
பொங்குவீர்  உலகெங்கும்
புதிய உலக ஒழுங்கு சமத்துவம் என
வறுமை வெறுமை எங்குமிலையென
அறுதியாக்குவீர் பொதுமை எங்கும்
ஆக்கியபின்
நிற்க அதற்குத் தக!

அழ பகீரதன்


யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவை முருகையன் கேட்போர் கூடத்தில் நிகழ்ந்த உழவர் விழா கவியரங்கில் 16.01.2016 இல் ஒலித்தது.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது