ஆச்சு



பண்பாடு போயாச்சு
பகுத்துண்டு வாழ்வதும் பேச்சாச்சு
கண்டு பழகும் பழக்கம் பாழாச்சு
விரலால் நோண்டித் தேடி ஒளிர் திரையில்
முகம் பார்த்துக் கதைக்கும் காலமாச்சு
வயசோ ஐம்பதாச்சு
வருடங்கள் போயாச்சு
பெத்த பிள்ளைகளோ நாம்
பட்ட துன்பம் துயரம் அறியா நிலையாச்சு
போர்ச் சுவடற்ற அபிவிருத்தியில் நகராச்சு
வீட்டுத் திட்டத்தில் படை வீரர் நட்பாச்சு
ஊர்ப் பேச்சுப் பேசி நாளாச்சு
கூடிப் பேசிடத் தடையாய் தொலைக்காட்சி ஆச்சு
கூடிடில் தொடர்நாடகம் பேச்சாச்சு
கற்பு விலையாச்சு
விபச்சாரம் செய்வதுவே விமோசனம் என
நிற்கச் சுற்றுலா வழியாச்சு
மதுசாரம் சிறப்பாச்சு
கஞ்சா அரங்கேறியாச்சு
காசு ஆற்றல் கதையாச்சு
பதவிகள் வந்தாச்சு
பட்டங்கள் பெற வழிகள்  பலவாச்சு
விருதுகள் பெற விழாக்கள் பெருகலாச்சு
மண்டபங்கள் மிளிரலாச்சு
மனங்கள் விரிசலாச்சு
தண்டவாளங்கள் தொடரலாச்சு
விலைவாசி விண் தொடலாச்சு
தொடர் மாடிகளில் பொருட்கள் குவியலாச்சு
கடன்கள் பெருகலாச்சு
நிலத்தடி நீரில் ஓயில் கலந்தாச்சு
போத்தில் நீர் பொக்கிசமாச்சு
வரட்சி நிவாரணம் வந்தாச்சு
வெள்ளம் பெருக்கெடுக்க
மண் சரிவில் மனிதர்  புதையலாச்சு
நிலமற்றோர் லயன்கள் சிதையலாச்சு
மரம் விற்றோர் பணம் சேர மகிழலாச்சு
தேர்தல் வந்தாச்சு
தேரா மனிதர் ஓட்டுப்போட
கட்சிகள் மாறலாச்சு
காட்சிகள் விரியலாச்சு
பட்சிகள் கூடுவிட்டுப் பாய
கட்சிகள் தாண்டக்
கொள்கைகள் ஏனென்றாச்சு
கோடிகள் புரளலாச்சு
கொடிகள் ஏறலாச்சு
படிகள் ஏறப் பவுசு வருமெனில்
பயணம் வந்த பாதைகள் மறக்கலாச்சு
எங்கோ தொடங்கி
இங்கே முடிந்த கதையாச்சு
ஆச்சு ஆச்சு ஆச்சு எனில்
நஞ்சுண்ட மேனி
நீலமாய் மாற
நீள நாம் நிற்பதுவோ
ஆள அகல பார்க்கோமோ
தோழமையில் கை கோர்த்த மகிழ்வில்
கனாக் கண்ட
பொதுமை மறப்பமோ?


அழ.பகீரதன்

இக்கவிதை தாயகம் ஒக்ரோபர்-டிசம்பர் இதழில் பிரசுரமானது






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது