கனவுகளைக் கலைத்துவிடாதே



முத்தங்கள் பரிமாறிய
முதலிரவின் கனவுகளை
கலைத்து விடாதே!
சித்தத்தை உன்மேல் வைத்தே
தொலைதூர உழைப்பில்
காலம் கழிக்கின்றேன்.
உனது
கனவுகளைச் சிதைத்து விடாதே!
முதல் குழந்தையின்
முகத்தைக் கூடக் காணாது
உங் கென்ன வேலையென்று
கேட்கிறாய்,
அந்தக் குழந்தைக்காய் தான்
உழைக்கிறேன்.
கனவுகளைச் சிதைத்து விடாதே!
மனைவி எனது
மனதைப் புரியாது
பிற நாட்டு
மயக்கில் வாழ்கிறாயே
என வினவுகிறாய்
நீ பூச்சூடி
பொட்டிட்டு
வகை வகையாய்
கலர் கலராய்
உடை யுடுத்தி
நகை யணிந்து
நீ இனிக்க
நான் கண்டு மகிழ
உழைக்கின்றேன்
கனவுகளைக் கலைத்து விடாதே!
அன்றொரு நாள்
அந்தி மாலை வேளையில் 
இச்சை மிக உனை
அணைக்கையில்
சொன்னாயே
சொந்தமாய் வீடிருந்தால்
எப்போதும் சுகந்தான்
என்று!
அதன் பொருட்டே
உழைக்கிறேன்
கனவுகளை சிதைத்து விடாதே!
இப்போதைக்கு மட்டும்
நனவில் அன்றிக்
கனவில் மட்டும் கூடும்
காதல் பறவையே
முதலிரவின் கனவுகளைக் 
கலைத்து விடாதே!

-எனது அப்படியே இரு கவிதை தொகுப்பில் இடம்பெற்ற கவிதை

கருத்துகள்

கவியாழி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆம்,அந்த நாட்களை மறந்து விடாதீர்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

இலங்கையன் என