எனது வயதினை ஒத்த அப்பாக்களின் பிள்ளைகளுக்கு

இலங்கை பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கும் குப்பனின் பையனும் ,சுப்பனின் பொண்ணும் ஏன் என் தந்தை சமூகத்தினால் ஒடுக்கப் படுகிறான் என்று என்றாவது சிந்தித்தீர்களா? சாதிக் கொடுமையால் ஒரு கிராமமே எரியூட்டப்பட்டதே அதற்காக போராடினீர்களா ? இன்றைய பொருளாதார வறுமை நிலை ஏன் ஏற்படுகிறது என்று கவலைப்பட்டீர்களா?அதற்கெதிராக ஒருங்கிணைக்கும் உணர்வாளர்களிடம் தேடிச் சென்றிருக்கிறீர்களா?ஏதாவது மாணவர் போராட்டம் தான் செய்து இருப்பீர்களா? அத்தகைய உணர்வாளர்களிடம் "மீடியா" வெளிச்சம் போட்டுக்காட்ட பணம் இல்லை.தேர்தலில் வெற்றி ஈட்டுவர்காக எவ்வளவு பணமும் கொட்டுவதற்கு தி மு க -அ தி மு க தயாராக உள்ளது .புலம் பெயர் நாடுகளில் இருந்து பெறும் பணத்தின் ஒருபகுதியை நெடுமாறனும்,வைக்கோவும்,சீமானும் சுவரொட்டிகளும்,கொடிக்களுமாக காட்டி,உங்கள் கல்வியைக் காவு வாங்கிறார்கள் தனியார் கல்லூரிகளில் உம்மை இணைத்துக் கொள்ள உம் அப்பனும் ஆத்தாவும் படும்பாடு எத்தகையது என்பது பற்றி என்றாவது சிந்தித்தார்களா?இலண்டனில் பல்கலைக்கழக மாணவர்கள் கல்லூரிக் கட்டணத்தைக் குறைக்கச் சொல்லி ஆர்ப்பாட்டம் நடாத்தினார்கள். ( http://www.youtube.com/watch?v=WHM5nt3SY-o ). நீங்கள்? உங்கள் நாட்டில் இன்றுவரை தீர்க்கப்படாமல் இருக்கும் காஷ்மீர் பிரச்னை பற்றி என்றாவது நினைத்திருக்கிறீர்களா?உங்கள் தேசத்தில் முஸ்லீம் மக்கள் எப்படி நடத்தப் படுகிறார்கள் என்று சிந்தித்து இருக்கிறீர்களா? அது இலங்கைப் பிரச்சனை . அந்த நாட்டில் உள்ள மக்கள் தொகையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஒரு சமூகம் பற்றிய பிரச்சனை.உலகம் முழுவதும் பிரஜாவுரிமையும் ,நிரந்தரக் குடியுருமையும் அகதிகளாக போகும் தமிழ் மக்களுக்குக் கிடைக்கும். அவர்களும் அதைப் பெறுவதற்கு பல்வேறுகாரனங்கள் சொல்லவர்.அதற்காக அவர்கள் தங்களை ஏற்றுக்கொலச்சொல்லி சில காரணங்கள் சொல்லியாக வேண்டும் , அதில் 'இராணுவக் கெடுபிடி' மட்டுமல்ல ,'புலிகளின் பிள்ளைபிடி' பற்றியும் சொல்லி இருந்தார்கள்..ஆனால் இலங்கையில் வாழும் சிங்களவரோ, முஸ்லீம்களோ வீட்டுப் பணியாளர்களாகவோ , கூலித் தொழிலாளர்களாகவோ மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டும் தான் செல்ல முடியும். அதுவும் மிகக் குறைந்த சதவிகிதத்தினரே! இதே போலவே உங்கள் நாட்டில் இருந்து கள்ளத் தோணிகள் ,வடக்கத்தையான் என்று யாழ்ப்பாணத் தமிழர்களால் அழைக்கப் படும் மலையக தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வும் இருக்கிறது .அவர்கள் இன்றுவரை அடிப்படை வசதிகள் அற்று வாழ்ந்துகொண்டிருக்கும் நிலை பற்றிய உணர்வு உங்களுக்கு உண்டா? நீங்கள் வாங்கிக் கொடுக்கத் துடிக்கும் ஈழத்தில் அவர்களின் நிலை என்ன? அதே நாட்டில் தமிழ் பேசும் முஸ்லீம் இனம் ஒன்று 90'ம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பினால் ஒரு மணி நேர அவகாசத்தில் அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் 500 ரூபா பணம் மாத்திரம் எடுத்தபடி வெளியேறச் சொல்லி துப்பாக்கி முனையில் வெளியேறச் செய்தது உங்களுக்குத் தெரியுமா? .பாரம்பரியமாக வாழ்ந்த அந்தப் பகுதிகளில் இருந்து பெண்களும்,குழந்தைகளும் போக்கிடம் இன்றி ,கால்போன திக்கில் சென்று கேள்விக்குறி ஆகினர்.அந்த மக்களுக்கு தமிழைத் தவிர வேறு மொழி தெரியாது இருந்தது .ஈழம் வாங்கிக் கொடுக்கப் போராடும் மாணவர்களே , இந்த ஈழத்தில் மேட்டிமைத் தன்மையும்,சுயநலமும் , சந்தர்ப்ப வாத பிழைப்பு நடத்தும் தமிழ் அரசியல் தலைவர்கள் முஸ்லீம் மக்களுக்கான அலகு கொடுப்பார்களா? அவர்களை தமிழர்களாக ஏற்றுக்கொள்வார்களா? மலையகத் தமிழனை இந்தியன் என்று சொல்வார்களா?
தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த லயோலா கல்லூரி மாணவர் ஷண்முகப்பிரியன் என்கிற செம்பியன் என்ற மாணவத் தலைவனிடம் போராட்டம் பற்றிக் கேட்டபோது அரசியல் தெளிவற்ற பேச்சும்,திக்கித் திணறி அவர் சொல்லும் பதில்களும் வேதனையாக இருக்கிறது. உங்களை அரசியல் வாதிகள் பயன்படுத்துவது புரியவில்லையா? கல்லூரிகளை புறக்கணிப்பது "ஜாலி " என்று எடுத்துக்கொள்கிறீர்களா? ஜெனீவா முடிந்துவிட்டது , தேர்தலும் முடிந்துவிடும் . பின்னர் உங்கள் நிலைப்பாடு என்ன? அடுத்த ஜெனீவா நேரம் ஏதாவது தேர்தல் வந்தால் தான் இந்தக் காட்சிகள் எல்லாம் மீண்டும் அரங்கேறும்.ஆனால் நீங்கள் இழந்த கல்வி? காலம்? நீங்கள் ஏற்படுத்திய மனக் காயங்கள் ? வியட்னாமில் "அமெரிக்கப் படைகள் அழிவில் ஈடுபட்டபோது, அவர்களுக்கெதிராக உலகின் பெரும் பகுதி மக்கள் தங்கள் தேசங்களில் முழங்கினார்கள் .அமெரிக்கனே வெளியேறு "என்றோம். 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஒலித்திருக்க வேண்டிய குரல் தீர்வு காண வேண்டியதை விடுத்து ,எங்கோகூட்டிச் செல்கிறது.
மகிந்த அரசும், பௌத்த திணிப்பு தேரர்களும் அம்பலப்படுத்தப் படவேண்டும். வர்க்க பேதம் எப்படிக் களையப்படவேண்டுமோ ,அதேபோல இனவாதமும்,மதவாதமும் கோலோச்ச அனுமதிக்கக் கூடாது.அது அவர்களின் இனத்தினால் மட்டுமேஉள்வாங்கப்பட்டு ,வெளிப்படவேண்டும் . அதற்க்கு தேச ஒற்றுமை அவசியம்.பிரிவினைகளை விதைப்பதன் மூலம் ,நாம் எம் தேசத்தின் சகோதரத் தன்மையை இழக்கின்றோம் . வெறுப்புகளையும்,பழிவாங்கும் உணர்வையும் ஊட்டுகிறோம் . இன்று எம் நாட்டில் இருந்து UN இனுடைய அமைப்புகள் பல உத்தம் முடிந்துவிட்டதாகச் சொல்லி வெளியேறி சூடான்,சிரியா என்று நகர்கிறார்கள்.அரசியல் அதிகாரமும்,பதவி வெறியும் ,சொத்து சேர்க்கையும் அடக்கப்படவேண்டும். மக்கள் நலம் சார்ந்த அரசு அமைவதற்கு திறந்த மனத்துடன் ஒன்றுகூட வேண்டும். இதனை முன்னிறுத்தியே எமது செயற்பாடுகள் அமைய வேண்டும்!
மனித உரிமை வாதிகளான சிலர் மரணதண்டனையை இல்லாதொழிக்கப் போராடுகிறார்கள்.நீங்கள் 'மகிந்தாவை தூக்கில் தொங்க விடவேண்டும் என்கிறீர்கள்.நீங்கள் மரணதண்டனையை ஆதரிக்கிறீர்களா?மகிந்தவின் மரணத்தின் பின் தீர்வு வருமா ? மரணத்தை நிறைவேற்ற நீங்கள் யாரை அழைக்கிறீர்கள்?வருபவன் என்ன நோக்கத்திற்காக செயல் படுகிறான்? எதைச் சொல்ல வருகிறீர்கள்? 'வால்மார்ட் " அந்நிய முதலீட்டை நிறுத்தச் சொல்லி ,உள்ளூர் உற்பத்தி விநியோகம் பற்றியெல்லாம் பேசும்போது ,பக்கத்து வீட்டு பிரச்னை என்று முகம் திருப்பிய உங்களுக்கு வந்த அடிப்படைக் கோவம் எது? பிரபாகரனின் மகன் இறந்தது தானா? இதையே 4 வருடங்களுக்கு முன்னர் பொங்கி எழுந்திருந்தால் ,உயிர்ச் சேதம் ஆவது தடுக்கப்பட்டிருக்கும் .இன்றைய தேவை என்ன? நீங்கள் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் ,இலங்கை என்கிற தேசத்தினுள் இனவாதத்தை தூண்டிவிட்டதே மிச்சம். தலைவன் மகனுக்காக நீங்கள் வீதியில் இறங்கிப் போராடி ஈழம் பெறப் போவதாகச் சொன்னால் ,உன்னை நினைத்து நீயே வேதனைப் படும் நிலைதான் எஞ்சும். குழந்தைகளைப் போராளியாக்கி,துவக்கையும் ,சயனைட்டையும் கழுத்தில் கட்டித் தூக்கிவிடும் கூட்டமும்,பெண்கள்,கர்ப்பிணிகள் என்று சுட்டுத் தள்ளும் கூட்டமும், இங்கு பிரச்சனையே இல்லை ,சுபீட்சம் பொங்குகிறது என்போரும் செறிந்து வாழும் இதே நாட்டில் , கல்வியறிவு குறைந்த ,அழிந்துபோகும் இனமான வேடர் இணைத்துத் தலைவனைப் பற்றி என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை.
மே 24, 1992 " ல் Sunday times " என்கிற இலங்கைப் பத்திரிகையில் ,இலங்கையில் தம்பான எனும் ஊரில் வசித்த ஆதிவாசிகளின் தலைவாரன திஸாஹாமி பேட்டி ஒன்றைக் கொடுத்திருந்தார் அதில் அவர் "வெளி இடத் தொடர்பற்று வாழும் எம் சமூகத்தின் அடையாளங்கள் சிதையாத வகையில் அவர்கள் வாழ்வின் மேன்மைக்காக வாழ்வேன் "என்றவர் ,தனது 104 வயதில் 1998 இல் இறந்தார். எளிமையான சமநிலை வாழ்வை நடத்தி சமூகத்துக்கு முன்மாதிரியாக வாழ்ந்தவர். அவர் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் தமது இனத்தவர் மத்தியில் ஆற்றிய உரையில், நான் இறந்ததும் பெரும்வைபவம் நடத்துவதற்கும் தோரணம் கட்டுவதற்கும் இக் காட்டிலுள்ள உள்ள ஒரு மரத்தையேனும் வெட்டவேண்டாம். கொடிகளைத் தொங்கவிட்டு பெரும் அழிவை ஏற்படுத்த வேண்டாம். எமது பாரம்பரிய மரபுகளுக்கேற்ப எனது இறுதிக் கிரியைகளை செய்யுங்கள். எனக்காக இக்காட்டு மரங்களை வெட்டுவது, எமது பரம்பரைக்கு செய்யும் பெரும் குற்றமாகும் என்று கூறினார். இதற்க்கு மேல் என்ன சொல்லி புரிய வைக்க?

கருத்துகள்

இராய செல்லப்பா இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. எந்த மெழுகுவர்த்தியும் தன்னை முதன்முதலாகப் பற்ற வைக்கும் நெருப்பு எந்த தீக்குச்சியிலிருந்து வந்தது என்பது தெரியாது. மாணவர்களும் மெழுகுவர்த்தி போன்றவர்களே. ஆனால் அது தரும் வெளிச்சம் மாற்றுக் கருத்துடையோருக்கும் நிச்சயம் பயன்படும் அல்லவா? தமிழகம் சிந்தித்துக் கொண்டு தான் இருக்கிறது. இறந்து போனவர்களுக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்கவேண்டிய அதே நேரத்தில், உயிரோடிருப்பவர்கள் சாகாமலிருப்பதற்கு வழி கண்டுபிடிக்க வேண்டியது மேலும் முக்கியமான விஷயம் என்பதை நடுனிலையாளர்கள் எடுத்துச் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் குரல் இந்த இரைச்சலில் மெல்லிய முனகலாகத் தான் மற்றவர்களுக்குக் கேட்கிறது......

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

இலங்கையன் என