மகாகவி பாரதி நினைவுகளோடு…



அழ. பகீரதன்

அப்போதெல்லாம் எனக்கு மகாகவி பாரதியார் கவிதைகள் என்றால் இரம்பவும் பிடிக்கும். சிறுவயதிலிருந்து அவரது முறுக்கு மீசையும் முண்டாசும் என்னைக் கவர்ந்தனவாக இருந்தன. அடிக்கடி அவரது கவிதைகளை படித்துப் படித்துப் பார்த்துச் சுவைப்பேன்.

1981 ஆம் ஆண்டென நினைக்கின்றேன். உயர்தர வகுப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்தேன். மல்லிகை இதழிலோ எங்கோ மகாகவி நூற்றாண்டு விழா அடுத்தவருடம் வர இருப்பதாக படித்திருந்தேன். எனக்கு அவர் மேல் இருந்த ஈடுபாடு அதிகரித்துவந்தது. நானும் அவரைப்போல் கவி வடிக்க வேண்டும் என்ற வேகம் எனது மனதில் உருக்கொண்டது. எழுதி எழுதி கிழிப்பதும் மீண்டும் எழுதுவதுமாக எனது பொழுதுகள் நகர்ந்தன.

அச்சில் வரும் கவிதைகளை படித்த நானும் எனது கவிதைகளை பத்திரிகைகளுக்கும் வானொலிக்கும் எழுதி அனுப்பலானேன். அவை வருமா வருமா என பார்த்தும் கேட்டும் நாட்கள் நகர்ந்தன. வரவில்லையே என்ற வேதனை எனக்கு இருந்தாலும் முயற்சியை விடவில்லை. மங்கையர் வதனம் பார்த்து மயங்கும் விடலைப்பருவம் அது. காதலும் காமமும் விரவிய கவிதைகளாக அந்த காலத்து கவிதைகள் அமைந்தன. நான் எழுதிய அவ்வாறான ஒரு கவிதையை எனது பள்ளித்தோழனின் தோழன் ஒருவன் பிரதி எடுத்து பத்திரப்படுத்தி வைத்து வாசித்து மகிழ்ந்ததை அந்த தோழன் எனக்கு சொல்லக் கேட்டு மகிழ்ந்திருக்கின்றேன். ஆனாலும் கவிதைகள் எதுவும் வானொலியில் ஒலிக்கவில்லை, பத்திரிகைகளில் வரவில்லை என்ற வேதனை எனக்கு நிறையவே இருந்தது.

மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா பற்றிய விளம்பரங்கள் வரத்தொடங்கின. அந்த நாட்களில் வானொலியில் இளைஞர்களுக்கான நிகழ்ச்சியாக சங்கநாதம் எனும் நிகழ்ச்சி வாராவாரம் ஒலிபரப்பாகி வந்தது. அந்த நிகழ்ச்சிக்காக பாரதி பற்றி ஒரு கவிதையை யாத்து அனுப்பிவைத்துவிட்டு அவரது பிறந்த நாளன்று சங்கநாதம் நிகழ்ச்சிக்காக வானொலியின் பொத்தானை திருப்பி ஒலியை கூட்டிக்கேட்டுக் கொண்டிருக்கின்றேன். நிகழ்ச்சித் தொகுப்பாளர் பாரதி பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கான அறிவித்தலை தருகின்றார். நிகழ்ச்சி தொடர்கின்றது. பாரதியின் வரலாறு உரையாகத் தரப்படுகின்றது. உரையின் இடையிடையே கவிதை வரிகள் ஒலிக்கப்படுகின்றன. என்ன ஆச்சரியம்,.. என்னால் நம்பவே முடியவில்லை. அத்தனையும் அச்சொட்டாக எனது கவிதை வரிகள்… மனதில் இனம்புரியா இன்ப அதிர்வுடன் நிகழ்ச்சி முடியுமட்டும் செவிகளை கூர்மைப்படுத்திக் கேட்டுக்கொண்டிருக்கின்றேன், நிகழ்ச்சியின் முடிவில் இந்த கவிதை வரிகளை யாத்த எனது பெயர் குறிப்பிடப்படும் என்று காத்திருந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

எனது பெயர் குறிப்பிடப்படாமல் விட்டமை தற்செயலானதோ அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதோ என்று புரியாது நான் மறுநாள் ஒரு கடிதம் எழுதி நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு அனுப்பினேன். அக்கடிதத்தில் நிகழ்ச்சியில் எனது கவிதை ஒலிபரப்பியமை பற்றி நன்றி தெரிவித்தும் அதில் எனது பெயர் தவறுதலாக சேர்த்துக்கொள்ளப் படவில்லை என்றும்  அதைக்குறித்து மனம்வருந்த தேவையில்லை என்றும் குறிப்பிட்டு அனுப்பியிருந்தேன். அந்த கடிதம் கூட மறுவாரங்களில் நிகழ்ச்சியில் சேர்க்கப்படவில்லை. என் செய விதியென வாழா இருந்துவிட்டேன்.

நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணம் எங்கும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. தேசிய கலை இலக்கியப் பேரவை தொடர் கருத்தரங்கு மாதாமாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. நாங்கள் எமது காலையடி மறுமலர்ச்சி மன்றத்திலும் பாரதி நூற்றாண்டு விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடுவது என்று தீர்மானித்திருந்தோம். விழாவில் கருத்தரங்கு இசையரங்கு கவியரங்கு நாடகம் என பல நிகழ்ச்சிகளை ஒழுங்கு படுத்தினோம். கவியரங்கில் நான், விமலன், வேந்தன், உட்பட எனது நண்பர்களையும் இணைத்துக் கொண்டோம்.

நான் விழா ஒழுங்கமைப்போடு வெகு சிரமப்பட்டு கவிதை ஒன்றை எழுதி தயார்படுத்திக்கொண்டேன். அந்த கவிதையில் பாரதியார் எனது முன்தோன்றி இன்றைய இழிநிலைபற்றி உரைப்பதாகவும் தன் வழி நான் தொடரவேண்டும் எனவும் கூறுவதாக கவிதை படைத்திருந்தேன். மிக ஆவலுடன் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தி நடத்திக்கொண்டிருந்தபோது எனது கவிதைப்பிரதி கிட்டத்தட்ட ஐந்து தாள்கள் நிரம்ப இருந்ததை கண்ணுற்ற எனது சக விழா ஒழுங்கமைப்பாளர்கள் விசனம் தெரிவித்தனர். இந்தளவையும் நீர் வாசித்து முடிக்க நீண்ட நேரம் எடுக்கும். சனம் பொறுமையுடன் இருக்காது என்றும் கூறத்தொடங்கிவிட்டார்கள். எனது கவிதையை அரங்கேற்ற ஆவலுடன் இருந்த எனக்கு எப்படி இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். ஒரு பக்கம் ஆத்திரம். இன்னொரு பக்கம் விழா குழப்பமில்லாமல் முற்றுப்பெறவேண்டும் என்ற எனது முனைப்பு. நான் எனது கவிதை வாசிப்பதை நிறுத்துகிறேன் என்று சொல்லவும் கவியரங்கத் தலைவர் எனது கவிதை நிறுத்தப்பட்டதை ஒலிபெருக்கியில் அறிவிக்கின்றார். அப்போது ஒரு குரல் அதனை எதிர்த்து நின்றது. அந்தக்குரல் பின்னர் பாரதி ஆய்வாளராக தன்னை தகவமைத்தவருடையது.

இந்த வெப்பிராயம் எனது மனதுக்குள் ஆழவேரூன்றி இவர்களின் முன் நான் எழுந்து நின்று கவிஞனாக தகவதைத்துக்கொள்ள தூண்டியது. சிறுபிராயத்தில் சிறுகதை நாவல் எழுதவேண்டும் எனக்கனாக்கண்டவனை கவிஞனாக்கியது. கவிஞர் முரு்கையன் தலைமையில் மீட்சியை நோக்கி என்ற கவியரங்கிலும் மேலும் கல்வயல் குமாரசாமி தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஒரு கவியரங்கிலும் இருபாலையில் பாரதி விழாவில் முருகையன் தலைமையில் பண்பாடு உயரப் பாடு என்ற கவியரங்கிலும் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வானொலி அறிவிப்பாளர் தயானந்தா தலைமையில் நடந்த கவியரங்கிலும் எனது குரலொலியையும் வாசிப்பு நயப்பையும் கேட்டுவியந்த பலரின் வியப்பை பார்த்து நானும் வியந்திருக்கின்றேன். நானா இப்படி என்று.. இன்னும் முடியும் என்ற நம்பிக்கையுடன் நாட்கள் நகர்கின்றன…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது