சிங்களத்துக் காதலியே…


சிங்களத்துக் காதலியே

நெஞ்சம் நெகிழ்ந்து
நேசம் மிகுந்து
வந்த தனால்
சொந்தமாகிப் போனவளே,

இந்த நிமிடம் வரையில்
இடைவெளி நமக்குள்
இருக்க காரணம் என்ன?
படைகள் தானோ
நமக்குள்
தடைகள் அமைத்தன!
எனில்
பகைமை நம்மினத்திடை
எழ ஏது எஃது?

புரிந்துணர் வின்றி
விரித்துரைத்த செய்திகளை
நம்பியதால் தானோ
நம்மினமும் நும்மினமும்
எதிரெதிராய் போயின!
…..
அந்த நாட்களின்
துயர நிகழ்வுகள்
வேறொரு வகையில்
இன்னமும் தொடர்கின்றன.

பகைவர் எவரென
நாமுணரும் தருணம்
இன்றெம் முன் வந்தது
இன்றுன் நேசமிழந்த
சோகம் நினைந்தேன்.
இதுவரை காலமும்
நீ
நினைந்திரா வகையில்
நிகழ்ந்த நிகழ்வினால்
நின்மனமும் மாறியிருக்கும்
ஆழ்மனதில் புதைந்திருந்த
என்நினைவும் மீண்டிருக்கும்.
மீளநாம் இணையக்
காலம் கனிந்தது!
சிந்தையால் கவர்ந்த
சிங்களத்துக் காதலியே
சீக்கிரமே நாமிணைவோம்
மணம் முடிப்போம்
இருவர் உரிமை ஏற்று
ஆதிமுதலாய்
இன்று வரையில்
நாம் வாழும்
இனிய தீவு
நம் நாடிஃகுதெனவே
முரசறைவோம்
வா தோழி!

வீரகேசரி வார இதழில் பிரசுரமானது 1988

-அழ. பகீரதன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது