என்றோ ஒருநாள்

சீரிய சிந்தையில்
கூரிய கவிவடித்தே
பாரிய அதிர்வை
என்னுள் எழுப்பி
வீரியம் செய்தீர்
இன்றோ
சரீரம் விட்டே
சரித்திரம் ஆனீர்
விரிந்த உலகிடை
பரந்த மானிடர் மனதினில்
பாவினால் வாழ்ந்திடுவீர்



மூத்தகவியே முதல்வனே
நீர் யாத்தகவியால் என்னுள்
பூத்தபுதுப்பூவாய்
நித்தம் நிலைத்து நிற்பீர்
சாத்துவேன் பாப்பூமாலை
ஏத்துவேன் புகழ்மாலை



பொதுமை நெறியில்
புதுமை வழியில்
ஒருமை கண்டீர்
அருமைத் தமிழிற்கு
பெருமை சேர்த்தீர்
உருவில் சிறியராய்
அறிவில் பெரியராய்
அகிலத்தை நிறைத்தீர்



கடூழியம் செய்தே
அடிமை நிலைவாழ்வார்
மிடிமை போக்கும்
விடிவினை வேண்டியே
இலக்குக் கொண்டு
இலக்கியம் படைத்தீர்
இலக்கியம் ஆனீர்
ஆளை ஆள் மேவுமுலகில்
ஆளுமையால் நிறைந்தீர்



பழையது கழிய
புதியது வரும்
நியதியை அறிந்தே
மீட்சியை நோக்கி
ஆக்கினீர் பாதை



ஊக்கியாய் ஆனீர்
யாத்தஉம் கவியால்!
பாக்கியமே நாம்
பாவழி பெற்றமே!



இல்லை என்பதை
இல்லை செய்குவோம்
எனும் உன்கவி
வல்லமை கண்டோம்
இன்று கவிமுருகையன்
இல்லை என்பதை
இல்லை ஆக்கோமோ
சொல்லால் கவிபற்பல
நல்லாய் ஆக்கமுற
எல்லார்க்கும் ஈந்தே
எல்லாம் சரிவருமெனச்
சொன்ன
பொல்லாப்பின்றிப் போகுமந்த
பொதுமை வாழ்வை காண்பமோ!



ஐய முருகைய
எழுவீர் நீரென
எவ்வாறு இயம்புவேன்
வியனுலகில் நிறையுன் பாவால்
எழுச்சியுறு ஒருவன்
என்றோ ஒருநாள்
எழுந்து பாடுவான்
நாங்கள் மனிதரென
வேற்றுமைகள் ஒழித்து
நாளைய மனிதர்
எழுவர்
மனிதம் காக்க!



தந்தேன் அஞ்சலி
எந்தை நீரே!


அழ, பகீரதன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது